Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Temples in Malwa Region - 14

$
0
0
சாந்திப்பிரியா                                                       -  14 -


ஹரிசித்தி   ஆலயம்

அடுத்து அங்கிருந்துக் கிளம்பி ஒய்வு எடுத்தப் பின் மாலையில் நாங்கள் சென்றது ஹரிசித்தி எனும் ஆலயம். இதுவும் தாந்த்ரீக சித்திகளைத் தரும், நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும் ஆலயம். பகலாமுகி ஆலயம் போலவே மிகவும் சக்தி வாய்ந்தது. மிகப் புராதமானது. அரசன் விக்ரமாதித்தியனால் கட்டப்பட்டது. மினால்பூர் என்று சொல்லப்படும் மியானி என்னும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் கட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த ஹர்சித்தி மாதா கோவிலுக்குச் சென்று தேவியின் ஆசியைப் பெற்று வந்து உஜ்ஜயினியில் ஸ்வயம்புவாகத் தோன்றிய ஹரிசித்தி தேவிக்கு விக்ரமாதித்தியன் ஆலயம் எழுப்பினார் என்று சொல்கிறார்கள். மியானி என்னும் இடம் குஜராத்தில் போர்பந்தரிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை நகரம் துவாரகாவிற்கு போகும் வழியில் உள்ளது. தனக்கு பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் விக்ரமாதித்தியன் இங்கும் பகலாமுகி ஆலயத்துக்கும் சென்று பூஜைகளை செய்வாராம்.

சக்தி பீடம் எனப்படும் ஹர்சித்தி ஆலயம் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் மட்டும் அல்ல இந்தோர், ஜபல்பூர் போன்ற இடங்களிலும், வெளி மானிலங்களான கோவா, குஜராத்கில் போர்பந்தர், த்வாரகா, வாத்வான், ஔரங்காபாத், படோட், வர்வாலா, ஹரிபாரா மற்றும் கட்ச் போன்ற இடங்களிலும் சிறிதும் பெரியதுமான ஹர்சித்தி தேவியின் ஆலயங்கள் உள்ளன. தக்க்ஷ யாகத்தில் மரணம் அடைந்த பார்வதியை சிவபெருமான் தூக்கிக் கொண்டு சென்றபோது அவளுடைய முழங்கை விழுந்த இடம் உஜ்ஜயினி என்று நம்பப்படுவதினால் இங்குள்ள ஹரிசித்தி ஆலயம் சக்தி பீடமாகும் என்று கூறுகிறார்கள். ஹர்சித்தி தேவி பகலில் இங்கும், இரவில் குஜராத்திலும் அருள்பாலிப்பதாகச் சொல்லப்படுகிறது.

பூமிக்கு மேலாக அமைக்கப்பட்டு உள்ள மண்டப சன்னதியில் மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதிக்கு நடுவே தேவி ஹர்சித்தி  வீற்றிருக்கிறாள். ஆனால் அவர்களது முழு உருவிலான சிலைகள் வைக்கப்படாமல் பிண்டி எனப்படும் கழுத்து பாகம் வரையிலான ரூபத்தில் காட்சி தரும் தேவிக்கு சிவந்த பட்டுத்துணி போர்த்தி, செந்தூரம் பூசி, வெள்ளியினால் ஆன கண் மலர்கள் பதித்து, மூக்குத்தி, நெற்றித் திலகம், காதணிகள் அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். சிவந்த உதடுகளோடு அத்தனை அலங்காரங்களுடன் அற்புதமாக காட்சி கொடுக்கிறாள். சன்னதியில் தேவியின் இடப்புறம் பைரவர் சிலையும் வலப்புறம் வினாயகரது சிலையும் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியின் உள் கூரை மீது பல விதமான யந்திரங்களைப் போன்ற உருவங்கள் வரையப்பட்டு உள்ளன. ஹர்சித்தி மாதா கோவிலில் சக்தியின் ஸ்ரீ யந்திரம் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மந்திர வலிமைக் கொண்ட கூடம் என்றும் அங்கு நின்று நாம் தேவியை வேண்டிக் கொண்டு பூஜை செய்யும்போது நமக்கும் தேவி மனவலிமையை தருகிறாள், நம்மை தொடரும் தீய சக்திகளை அழிக்கிறாள் என்றும் கூறுகிறார்கள். சன்னதியின் பின்புறத்தில் காளி மற்றும் அன்னபூரணி தேவியின் சன்னதிகள் உள்ளன. சன்னதியின் முன்புறத்தில் ஒரு கண்ணாடிக் குடுவையில் அகண்ட ஜோதி ஒன்று பல காலமாக அணையாமல் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.

ஹரிசித்தி தேவியின் இடதுபுறத்தில் தனி சன்னதியில் கார்கோடன் எனும் நாக தேவர் கார்கோடக மகாதேவ் எனும் பெயரில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இங்கு  லிங்க வடிவில் உள்ளார். சிவபெருமானின் கணங்களில் ஒருவரான இவருக்கு இங்கு நாக சர்ப்ப யாகம் செய்தால் நாக தோஷமும் பிற தோஷங்களும் உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது.  உலகில் உள்ள 84 கார்கோடக மகாதேவர் ஆலயங்களில் இதுவே முதலாமானது, முக்கியமானது  என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு வந்து ஹரிசித்தியை வேண்டிக் கொண்டப் பின் கார்கோடக மகாதேவருக்கும்  பூஜைகளை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். இந்த சன்னதி மிக்க சக்தி வாய்ந்த சன்னதியாகும்.  இங்கு உள்ள  கார்கோடன் உலகில் உள்ள அனைத்து நாக தேவிகளையும், நாக தேவர்களையும் தன்னுடன் அடிமையாக வைத்துக் கொண்டு இருக்கிறாராம். கார்கோடனை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற அளவிலான சக்தியைக் கொண்டு இருக்கிறாராம்.

இந்த ஆலயத்தின் மகிமையை பலரும் பல விதமாகக் கூறுகிறார்கள். அதை உண்மையிலேயே அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த ஆலய மேன்மைப் பற்றி எழுதும்போது எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த முக்கியமான ஒரு சம்பவத்தையும் அதற்குக் காரணமாக இருந்த எங்கள் வாழ்கையின் ஒரு சிறு பகுதியையும் கூறாமல் இருக்க முடியாது.அதனால்தான் இந்த ஆலயத்துக்கு கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்பதற்காக நாங்கள் இம்முறை உஜ்ஜயினிக்கு சென்றோம். அது ஒரு அற்புதமான ஆனந்தமான அனுபவம். ஆகவே நாங்கள் ஏன் இந்த ஆலயத்தை உயர்வாக கருதினோம் என்பதை விளக்கும் என் வாழ்வில் நடைபெற்ற சிறு பகுதியை படித்தால்  இந்த  ஆலய மகிமையை புரிந்து கொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்னால் நான்  தேவாஸ் நகரில் பணி புரிந்து கொண்டு இருந்தபோது பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தேன். அவற்றை எப்படியோ சமாளித்துக் கொண்டு வந்த நான்  பணியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்னொரு அலுவலகத்தில் கிடைக்க இருந்த நல்ல வாய்ப்பை  சில காரணங்களினால் வேண்டாம் என ஒதுக்கியதினால் ஏற்பட்ட பின் விளைவுகளைக் கண்டு நான் எடுத்த முடிவுகள் எத்தனை மடத்தனமானது என்பதை பல காலம் பொறுத்து புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குக் கிடைக்க இருந்த உயர் பதவியை தவறான அறிவுறைகளினால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதினால்  வாழ்க்கையில் பின்னர் பெரிய சறுக்கலை சந்திக்க வேண்டியதாயிற்று. அந்த முடிவினால் என்னை விட கீழ் நிலையில் இருந்தவர்கள் கூட என்னைத் தாண்டி உயரத் துவங்கினார்கள்.  நான் அப்படியே இருந்தது மட்டும் இல்லாமல் மேலும் பல அவமானங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. துரதிஷ்டவசமாக சிலர் செய்த சதியினால் அலுவலகத்திலும் எனக்குக் கிடைக்க இருந்த உயர் பதவி என் கையை விட்டுப் போயிற்று. நான் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள் அது மட்டுமா ?

பலமான காவலுடன் இருந்த குடியிருப்பில் இருந்த எங்கள் வீட்டில், முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக எந்தவித அசம்பாவிதமும் நடந்திராத அந்த குடி இருப்பில், அதுவரை கேள்விப்படாத ஒரு நிகழ்ச்சியாக பெரும் திருட்டு நடைபெற்றது. அந்த திருட்டும் முதன் முதலாக எங்கள் வீட்டில்தான் நடைபெற்றது என்பது அந்த குடியிருப்பின் முப்பத்தி ஐந்து  ஆண்டுகளின் சரித்திரமாக அமைந்தது.

 அன்றுதான் எனக்கும் சம்பளம் வந்திருந்தது. ஏற்கனவே வீட்டில் அலமாரியில் பணமும் நிறையவே வைத்து இருந்தோம். அத்தனைப் பணத்துடன் எங்கள் வீட்டில் இருந்த அனைத்து நகைகளும் கொள்ளை போயிற்று. ஆடிப் போய் விட்ட நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொண்டோம். அந்த வேளையில் ஆறுதலை மட்டுமே எதிர்ப்பார்த்து நின்ற எனக்கு  நான் மலைப்  போல நம்பி இருந்தவர்கள் ஆறுதல் கூடக் கூறாமல், என்னுடன் பேசுவதைக் கூட தவிர்த்து அது பற்றி ஒரு வார்த்தைக் கூட கூறாமல் ஒன்றுமே தெரியாதது போல ஒதுங்கிக் கொண்டது பெரிய இடியாகவே இருந்தது !!!நாங்களும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டபடி பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தோம்.

மேலும் மேலும் சில துயர நிகழ்சிகள் எங்களை தொடர்ந்தபோது எங்களை உஜ்ஜயினி ஹரிசித்தி ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பிரபல ஜோசியரான திரு சுரேந்திர வியாஸ் என்பவரிடம் ஒரு நண்பர் அழைத்துக் கொண்டு சென்றார். அவர் உஜ்ஜயினியில் பிரபலமான ஜோதிடர். ஹரிசித்தி ஆலயத்தில் பரிகார பூஜைகளை செய்து கொடுப்பவர். தேவி உபாசகர். அனைவருக்கும் ஜோதிடம் பார்க்க மாட்டார். பெரும் பெயர் பெற்றவர். அவர் ஜாதகத்தைப் பார்த்து பலன் கூறுவதில்லை. ஒருவரது கையைப் பிடித்துக் கொண்டாலே அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்திடுவார். அத்தனை ஆன்மீக சக்தி கொண்டவர் அவர். அவரை நாங்கள் சந்தித்தபோது அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு கணம் தியானத்தில் ஆழ்ந்தப் பின் எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நான் கூறாமலேயே குடும்ப சம்மந்தப்பட்ட சில முக்கியமான விஷயங்களை தெளிவாகக் கூறத் துவங்கினார். அவை அதிர்ச்சியாக இருந்தன.


ஹரிசித்தி தேவியின் சன்னதியில் மூன்று தேவிகள் 


ஆலய முகப்பில் உள்ள வாசகக் கல்வெட்டு
.........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>