சாந்திப்பிரியா
அடிக்கடி பத்மாவதி தோட்டத்துக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வருத்தத்துடன் எதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட அவள் தோழிகள் அவளுடைய கவனத்தை திருப்ப முயன்றார்கள். இனிமேலும் காலம் கடத்துவது தவறு என்று எண்ணிய பத்மாவதியின் தோழிகள் அவளது தாயாரான தாரிணி தேவியிடம் சென்று பத்மாவதியின் மன நிலைக் குறித்து கூறி விட்டார்கள். அவளும் தனது மகள் சில நாட்களாகவே முன்னைப் போல ஓடியாடிக் கொண்டு இருப்பதில்லை, அடிக்கடி தூங்கி வழிந்து கொண்டே இருந்தாள், சரிவர சாப்பிடவில்லை என்பதை எல்லாம் கவனித்து வந்திருந்தாள். ஒருசில நேரத்தில் அதைப் பற்றிக் கேட்டபோது தனக்கு ஒன்றுமே இல்லை. எப்போதும் போலத்தானே இருக்கிறேன் என்று பத்மாவதி கூறி விட்டாள் என்பதினால் அவள் அதிகம் கவலைப்படாமல் இருந்திருந்தாள் .
மரத்தடிக்குச் சென்று தனிமையில் அமர்ந்த
கொண்டு யோசனையில் இருந்த நிலையை
மாற்ற அவள் தோழிகள் முயன்றார்கள்
அவளுக்கு ஒருவேளை வயதுக் கோளாறாக இருக்கலாம், தானே சரியாகிவிடும் என்று அதிகம் கவனம் செலுத்தவில்லை. இப்போது தோழிகள் கூறுவதைக் கேட்டால் எதோ நிலைமை சரி இல்லைப் போல உள்ளதே என எண்ணியவள், தனது கணவர் ஆகாசராஜனிடம் சென்று பத்மாவதியின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தைக் குறித்துக் கூறினாள். சில நாட்களுக்கு முன்னர்தான் நாரத முனிவர் அங்கு வந்திருந்தபோது அவரை நமஸ்கரிக்குமாறு தன் மகளிடம் கூறியபோது, அவரை நமஸ்கரித்த பத்மாவதியிடம் நாரதர் 'எங்கே உன் கைகளைக் காட்டு' என்று கூறி அவள் கைகளைப் பார்த்துவிட்டு, 'கூடிய விரைவில் உனக்கு விவாகப் பிராப்தம் உள்ளதம்மா. உன்னை கைபிடிக்க உள்ள மணமகன் நாராயணரின் அவதாரமாகவே இருப்பார்' என்று கூறி விட்டுச் சென்றிருந்தார். ஒருவேளை அந்த நிலைமை இப்போது வந்துள்ளதோ என்று எண்ணியவர்கள் உடனே அவர்கள் ராஜ குருவை அழைத்து விஷயத்தைக் கூறி என்ன செய்யலாம் என ஆலோசனைக் கேட்க அவரும் நல்ல ஜோசியரை அழைத்து அவள் ஜாதகத்தை ஆராயலாம் என்றார். சரி இரண்டொரு நாட்கள் அவள் நடத்தையை கண்காணித்தப் பின் அவளையே அழைத்து விசாரிக்கலாம் என எண்ணினார்கள்.
அரண்மனையில் நிலைமை இப்படியாக இருக்க இதற்கு இடையே ஸ்ரீனிவாசரின் வீட்டில் என்ன நடந்தது? தனது மகன் உறக்கம் இன்றி தவிப்பதைக் கண்ட வகுளாதேவி இனியும் காலம் கடத்துவது தவறு என்று எண்ணினாள். ஸ்ரீனிவாசரிடம் 'மகனே இனியும் தாமதிப்பது முறை அல்ல . நானே இந்த நாட்டு மன்னன் ஆகாசராஜரிடம் சென்று உனக்காகப் பெண் கேட்கிறேன். நீ கூறும்படி தக்க வேளை வந்து விட்டதினால், அவர் உனக்கு தன் மகளாக பத்மாவதியை திருமணம் செய்து கொடுக்க மறுக்க மாட்டார். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ நீயும் உன்னால் ஆனதை மறைமுகமாக செய். நாளை நல்ல நாளாக உள்ளது. பௌணமி கூட நாளை துவங்குகிறது. ஆகவே வளரும் பௌர்ணமியான நாளையே இந்த காரியத்தை துவக்குகிறேன்.' என்றாள்.
அதைக் கேட்ட ஸ்ரீனிவாசர் மனம் மகிழ்ந்தார். 'சரி அம்மா, நீ நாளையே சென்று மன்னனிடம் பக்குவமாகப் பேசிப்பார்' என்று கூறிவிட்டு தான் வேட்டைக்குப் போவதாக கிளம்பிச் சென்றார்.
வெளியே கிளம்பிச் சென்றவர் தனது தாயாரிடம் கூறாமல் ஒரு குறி சொல்லும் குறத்தி போல வேடம் கொண்டார். கையில் மந்திரக் கோலைப் போன்ற ஒன்றை ஏந்திக் கொண்டு, தலையில் கூடையும் வைத்துக் கொண்டு ' ஐயா ...அம்மா...குறி சொல்வோம்....குறி சொல்வோம்...ஐயா...அம்மா ' எனக் கூவிக் கொண்டே அரண்மனை வாயிலாக மெதுவாகச் செல்லத் துவங்கினார். வரும்போது கை நிறைய அவள் போட்டுக் கொண்டு இருந்த வளையல்கள் குலுங்கி குலுங்கி ஓசை எழுப்பின. அந்த காலங்களில் குறி சொல்லும் குறத்திகளுக்கும், குடுகுடுப்பைக்காரர்களுக்கும் அதிக மவுசு உண்டு. அவர்கள் விடியற்காலையில் கூறிக் கொண்டு செல்வது நடக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த நேரத்தில் அரண்மனை வழியே ' ஐயா ...அம்மா.. .குறி சொல்வோம்....குறி சொல்வோம்...ஐயா...அம்மா ' என கூவிக் கொண்டே சென்று கொண்டிருந்த குறத்தி உருவில் இருந்த ஸ்ரீனிவாசனை உடனே அழைத்து வருமாறு தாரிணி தேவி காவலரை அனுப்பி குறத்தியை வரவழைத்தாள். தன் கணவரையும், மகளையும் அழைத்து வரச் சொல்லி விட்டு குறத்தியை அழைத்து தன் பெண்ணிற்கு குறி சொல்லுமாறு கேட்டாள்.
அம்மா...மகமாயி....நீயே இவளுக்கு உள்ள
சங்கடத்தை சொல்லம்மா என்று
குறி சொல்ல ஆரம்பித்தாள்
குறத்தி பூமியில் அமர்ந்து கொண்டு பத்மாவதியின் கையைப் பிடித்துக் கொண்டு கூறத் துவங்கினாள். 'அம்மணி...இந்தக் குறத்தியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் குறத்தியின் வார்த்தைகள் இல்லையடி...அது சாட்ஷாத் மகமாயி அம்மனின் வார்த்தைகள்...அம்மா, மகமாயி....இந்தப் பெண்ணின் கையில் உள்ள ரேகைக்கு சரியான விடையை நீதான் கூறவேண்டும்...தாயே மகமாயி....இந்த அபலையின் மனதில் உள்ளதை நீதான் எடுத்துக் கூற வேண்டும்' என்றெல்லாம் கூறிக் கொண்டே மந்திரக் கோலினால் பலமுறை பத்மாவதியின் தலையை சுற்றி விட்டு பூமியைத் தொட்டு விட்டு சிறிது மண்ணை எடுத்து வீசினாள். பத்மாவதியின் கைகளை முகர்ந்து பார்த்தாள்.
'அடி அற்புதப் பெண்ணே ....அம்மணி...உன் நினைவில் திருமால் அல்லவா குடி கொண்டுள்ளார் ...அடடா.. இந்த உலகை தன் கையால் அளர்ந்தவர், கடலைக் குடைந்து பூமியை எடுத்து வந்தவர், தங்க நிறம் போல ஜொலிக்கும் நீல நிறத்தவன், சீதையை மணந்தவன், மும்மூர்த்திகளில் ஒன்றானவன் ... அவனைப் போன்ற ஒருவனல்லவா உனக்கு மாப்பிள்ளையாக வருவான் ....அடடா.....அம்மணி....கேளடி இன்னும் சேதி ...இந்த மகமாயி வார்த்தை பலிக்காமல் போகாதாம்மா... சூரியன் திசை மாறிப் போவானா?....சந்திரன்தான் திசை மாறிப் போவானா?.... அடியே உன் மாப்பிள்ளை மட்டும் திசை மாறுவானோ??....மாட்டானடி பெண்ணே... மாறவே மாட்டார் ...விரைவிலேயே உன்னை கைபற்ற அவன் வருவானடி...காத்திரு...காத்திரு...பெண்ணே ...உன் மணாளன் யார் தெரியுமா..... இதோ பார் ...இந்த வெற்றிலையைப் பார்... என்று கூறி விட்டு, தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையில் இருந்த வெற்றிலையை எடுத்து அதில் மையைப் போல எதையோ தடவி, இதோ பார் என அனைவர் முன்னிலையிலும் காட்ட, அந்த வெற்றிலையில் ஸ்ரீனிவாசர் வேடனாக இருந்த உருவில் காட்சி அளிப்பதை கண்டு அனைவரும் வியந்தார்கள். அதைக் கண்ட பத்மாவதியோ 'அம்மா, இந்த வேடரே என் மனக் காயத்துக்குக் காரணம்' என்று நாணமுற்று கத்தி விட்டு உள்ளே ஓடினாள். வந்திருந்த குறத்திக்கு நிறைய சன்மானம் கொடுத்து அனுப்பிய பத்மாவதியின் பெற்றோர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் அமர்ந்தார்கள்.
குறத்தி வடிவில் இருந்த ஸ்ரீனிவாசரோ தனது காரியம் வெற்றி பெற்று விட்டதை நினைத்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். வழியில் மறக்காமல் மீண்டும் வேடவனாக உருவெடுத்து சில காய் கனிகளை பறித்துக் கொண்டு வேட்டை ஆடிவிட்டு வந்தவரைப் போல வீட்டுக்குள் சென்றுவிட்டார். மறுநாள் வகுளா தேவி அரசரைக் காணக் கிளம்பினாள்.
.......தொடரும்