ராமாயணத்தில் வரும் ராவணனையும் அவன் சந்ததியினரையும் பற்றிய கதைகள் பலவும் மயில் ராவணன் கதை என்றும் சதகண்ட ராவணன் அல்லது விதுர ராவணன் என்ற பெயரிலும் காலம் காலமாக நிலவி வருகின்றன. ராமாயணத்தைத் தவிர பின்னர் கூறப்பட்டு உள்ள அந்த இரண்டு கதைகளும் நாட்டுப்புறக் கதைகளாக அறியப்பட்டு வந்துள்ளன. புராணங்களில் அவற்றைப் பற்றிய கதைகள் காணப்படவில்லை. அவை பெரும்பாலும் பாவைக் கூத்து எனும் தோல் பொம்மைகளைக் கொண்டு நடத்தப்படும் பொம்மலாட்ட நிகழ்ச்சியாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்பட்டு வந்துள்ளன. மயில் ராவணனைக் குறித்த செய்திகள் அங்காங்கே சில புராணங்களில் காணப்பட்டாலும் சதகண்ட ராவணனைக் குறித்த செய்திகள் காணப்படவில்லை. சதகண்ட ராவணனின் கதையில் ராமருக்கு பதிலாக சீதை ஒரு புஷ்ப விமானத்தில் சென்று போர் புரிந்து சதகண்ட ராவணனை அழித்ததாக கூறப்பட்டு உள்ளது. அந்தக் கதையை பின்னர் கூறுகிறேன். இனி மயில் ராவணனின் கதை தொடர்கிறது.
தந்தைக்கு கொடுத்திருந்த வாக்கை காப்பாற்ற ராமர் தனது சகோதரர் லஷ்மணன் மற்றும் மனைவி சீதையுடன் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார். வனவாசத்தில் இருந்த ஸ்ரீ ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்திக் கொண்டு போய் இலங்கையில் சிறை வைத்து விட்டான். அவளை மீட்பதற்காக தனக்கு துணையாக தனது சகோதரன் லஷ்மணனை அழைத்துக் கொண்டும் சுக்ரீவனின் தலைமையிலான எழுபது வெள்ளம் அளவிலான சேனைகளையும் திரட்டிக் கொண்டு ராமபிரான் சேது சமுத்திரத்தில் அணைக் கட்டி அதன் மீது ஏறி இலங்கைக்கு சென்றார். அங்கு ராவணனின் படையினருக்கும் ராமரின் படையினருக்கும் மூர்கமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த யுத்தத்திலே அலையலையாக வந்த ராவணனது படையினரும் மகன்களும் ராம-லஷ்மணர்களின் படை வீரர்களை எதிர் கொள்ள முடியாமல் மாண்டு கொண்டே இருந்தார்கள்.
யுத்தத்திலே மாண்டு கொண்டே இருந்த சொந்தபந்தங்களின் நிலையைக் கண்ட ராவணன் நிலைக் குலைந்தான். 'ஐயோ என் சொந்தபந்தங்களின் கதியைப் பாரய்யா, அவர்களின் நிலையைப் பாரய்யா' என சுற்றி இருந்தவர் முன் அழுது புலம்பினான். அழுதழுது அந்த பராக்கிரம வீரனும் அப்படியே மூர்ச்சையானான் . ராவணனும் மிக்க பலசாலி என்றாலும், அவனுக்கும் பாசம் இருந்தது. சொந்தபந்தங்களும், சொந்த மகன்களும் இறந்தால் அவனால் தாங்க முடியுமா? ரத்த பாசம் விட்டதா? 'நான் இனி எப்படி தனியே ஆட்சி செய்வேன்?' என புலம்பித் தீர்த்தபோது, அவன் மந்திரிமார்கள் அவனை தேற்றினார்கள்.
மந்திரிமார்கள் கூறினார்கள் ' இலங்கேஸ்வரா, நீங்களே இப்படி மனம் ஒடிந்து நின்றால் எமக்கு எங்கிருந்து தைரியம் வரும்? உம்மிடமோ லட்ஷ, லட்சக்கணக்கான யானை, குதிரை, ஒட்டகம் போன்ற மிருகப் படைகளும் மனிதப் படைகளும் உள்ளன. அவற்றை அழைத்துக் கொண்டு போய் யுத்தகளத்தில் கர்ஜனை செய்வீர்களாக. உம்முடைய படையினரைக் கண்டாலே வெறும் குரங்குகளை சேனையாகக் அழைத்து வந்துள்ள ராமனும், லஷ்மணனும் அலறி ஓட மாட்டார்களா? தைரியம் கொள்வீர். கர்ஜனை செய்வீர்' என அவருக்கு தைரியம் சொன்னார்கள்.
அதைக் கேட்ட ராவணனும் மனதிடம் கொண்டான். அடுத்த நாள் காலையிலேயே லட்சக்கணக்கான யானை, குதிரை, ஒட்டகம் போன்ற மிருகப் படைகளுடன் யுத்தகளத்துக்குச் கிளம்பிச் சென்று ஆக்ரோஷமாக யுத்தம் செய்தான். ஆனாலும் அந்தோ பரிதாபம். ராமனும், லஷ்மணனும் எய்த பாணங்களில் ராவணனின் பாதி சேனை அழிந்து போக துயரம் கொண்ட ராவணன் அரண்மனைக்கு திரும்பினான். தனியே துக்கத்தோடு அமர்ந்திருந்த ராவணனிடம் வந்தான் பிரகஸ்தன் என்ற மந்திரி. அவன் சொல்கிறான் 'ஸ்வாமி, பராக்கிரமசாலியான நீரே இப்படி துயரில் இருக்கலாமா? கவலைக் கொள்ள வேண்டாம். யுத்தத்தில் மூன்று வழிமுறைகள் உள்ளன. ஒன்று நேரடியாக உக்ரஹமாக யுத்தம் செய்து வெல்ல வேண்டும். இல்லை என்றால் வேறொரு உபாயமான வஞ்சகத்தினால் எதிரியை வெல்ல வேண்டும். இரண்டிலும் தோல்வியைப் பெற்றால் மூன்றாவதாக கௌரவமாக சரண் அடைய வேண்டும். '
ராவணன் கேட்கிறான் ' அடே மந்திரி, சரண் அடைய வேண்டும் என்ற பேசுக்கே இடமில்லை என்னிடம். யுத்தம் செய்தேன், என் சேனைகள்தான் அழிந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் வெற்றி வரவில்லை. எனக்கு துணையாக இருந்த இந்திரஜித், நிகும்பன், அகம்பன், கும்பகர்ணன் என அனைத்து யுத்த சிங்கங்களுமே இன்று எங்கே? என்னை தவிக்க விட்டு மேலே அல்லவா போய் விட்டார்கள். எனக்கின்னும் எந்த யோசனையும் வரவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. மந்திரியாரே, நானெங்கே இந்த மன நிலையில் யுத்தம் செய்வது? என்ன வஞ்சகம் செய்து யுத்தத்தில் ஜெயிப்பது என்று யோசனை செய்யக் கூட புத்தி வேலை செய்யவில்லையே எனும்போது நானென்ன செய்வது என்பதை முதலில் எனக்குக் கூறும்மந்திரியாரே' என்று புலம்பினான்.
அதைக் கேட்ட பிரகஸ்தன் கூறுகிறான் ' ஐயா சுவாமி, நான் கூறுவதை தயை செய்து காது கொடுத்து நன்கு கேளும். உமக்கொரு தாயாதி வழி வந்த உறவினன் பாதாளத்தில் உள்ளதை மறந்து விட்டாயா? அவன் கபட நாடகத்தில் வல்லவன். சூதும் வாதும் அவனுக்கு அத்துப்படி...... அதி மாயாவி. வானம் முதல் பாதாளம் வரை அத்தனை மாயக் கலையையும் கரைத்துக் குடித்தவன். இத்தனையும் கொண்டவன் அதி பராக்கிரசாலியும் கூட. அவர் உதவியை ஏன் நீர் இன்னும் நாடவில்லை?' என்று கூறி முடிக்கும் முன்னே ராவணன் பதைபதைத்துக் கேட்கிறான் ' ஐயா மந்திரிமாரே , சொல்லைய்யா, விரைந்தே சொல்லையா ..யாரவன் ?.....யாரந்த தாயாதி ?'
...........தொடரும்