Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Grama devathas and deities in Vedik temples - 2

$
0
0
 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் -2
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு 

சாந்திப்பிரியா 

பல கிராமங்களில் காணப்படும்  அம்மன் 
வழிபாட்டுத் தலங்கள், 
எல்லைக் காவல் தெய்வங்கள்  
 
படம்:   http:// www.pbase/neuenhofer/naga cult in_tamilnadu
[இந்தப்  படங்கள் அனைத்துமே ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா
]


- II -



ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் வடப் பகுதியில் இருந்த மக்களுடன் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டு இருந்துள்ளன. தென் பகுதி மக்கள் தம்மை திராவிடர் என்று எண்ணிக் கொண்டு இருந்தபோது வடப் பக்கங்களை சேர்ந்தவர்களை ஆரியர்கள் எனக் கூறினார்கள். அந்த ஆரியர்கள் எனப்பட்டவர்கள் தென் பகுதிகளுக்கு வந்தபோதே அவர்களுடன் வேத முறைப் பழக்கங்களும் வந்துள்ளன. ஆரியர்கள் எனப்பட்டவர்கள் பிராமணர்கள் அல்லது பண்டிதர்கள் எனக் கருதப்பட்டனர். அவர்களே தென் பகுதிகளில் இருந்த ஆலய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.

வேத காலத்தின் பின்னர் பிராமணர்களின் ஆதிக்கம் துவங்கியது. அதுவரை அவரவர் வாழ்கை நெறிமுறையில்தான் -கிராம மக்கள்- வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். நகரங்கள் என்பதே பிற் காலத்தில் எழுந்தவைதான். மக்கள் இருந்த இடங்கள் குக்கிராமம் என்றும், பெரிய கிராமம் என்றும் அழைக்கப்பட்டு வந்தன. பொதுவாக பெரிய கிராமங்களில் பணம் படைத்தவர்களும் குக்கிராமங்களில் ஏழ்மை நிலையில் இருந்தவர்களும் வாழ்ந்து வந்தார்கள். அப்போதெல்லாம் ஜாதி பேதப் பிரிவினைகளும் அதிகமாகவே இருந்தன. அதனால் கீழ் நிலை மக்கள் அதிகம் இருந்த இடங்களில் பிராமணர்கள் வசித்தது இல்லை. இதை எதற்காக கூற வேண்டி உள்ளது என்றால் கீழ் நிலை மக்களின் கிராமங்களில் துவங்கியதே கிராம தேவதை ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள். ஆனால் அந்த கிராமங்கள் பின்னர் நகர் புறங்களாக மாறியபோது அந்த கிராம ஆலயங்களே நகர்புற ஆலயங்களாக மாறி பிராமணர்களும் ஆராதிக்கும் இடங்கள் ஆயின என்ற உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.

மதுரை பரிமேல் அழகர் ஆலயம், சபரிமலை அய்யப்பனும், சமயபுரம் மாரி அம்மன், புன்னை நல்லூர் மாரி அம்மன், பல இடங்களில் உள்ள வீரபத்திரர் ஆலயங்கள், பல இடங்களில் உள்ள முனீஸ்வரர் ஆலயங்கள் என பல கிராம தேவதை ஆலயங்கள் ஆகம விதியிலான வழிபாட்டு முறைகளை கொண்ட ஆலயங்களாக மாறி விட்டிருகின்றன. தமிழ் நாட்டில் பல நகரங்களில் உள்ள பல பிரபலமான அம்மன் ஆலயங்கள், மாரிஅம்மன் ஆலயங்கள், முருகன், அம்பாள் ஆலயங்கள் என பலவும், ஏன் சில சிவாலயங்கள் கூட முன்னர் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன. நீங்கள் எந்த ஒரு பெரிய ஆலயத்துக்கும் சென்றாலும் ( நவீன காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் அல்ல, மாறாக புராதானமான பெருமை வாய்ந்த ஆலயங்கள்) அங்கு உள்ள பிராகாரங்கள் சிலவற்றில் கிராம தேவதைகளின் உருவச் சிலைகளைக் காணலாம்!!

கிராம மக்களில் ஒரு பகுதியினர் கிராமங்களை சுற்றி இருந்த இடங்களில் இருந்த காடுகளில் இருந்து பொறுக்கி வந்த மரக்கட்டைகளை விற்றும், மிருகங்களை வேட்டையாடி அவற்றை விற்றுக் கிடைத்த பணத்திலும் வாழ்கையை ஓட்டியவர்கள். இன்னும் ஒரு பிரிவினர் அருகில் இருந்த நிலங்களில் சென்று கூலி வேலை செய்து பிழைத்தவர்கள். குக்கிராமங்கள் என்பது அங்காங்கே திட்டு திட்டாக தீவைப் போல நிலப்பரப்பில் இருந்த இடங்கள். அப்போதெல்லாம் ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையே பல மைல் இடைவெளி இருக்கும். அதற்குக் காரணம் கிராமங்களை சுற்றி இருந்த காடுகளும் வயல்வெளிகளும்தான்.

இப்படியான சூழ்நிலையில் வாழ்ந்து வந்திருந்த கிராம மக்களுக்கு வெளிக் கிராமங்கள் அல்லது வெளி இடங்களில் இருந்து தாக்குதல் நடத்துபவர் அல்லது உள்ளூரிலேயே யார் மூலமாவது ஏதாவது ஒரு வகையில் இன்னல் ஏற்பட்டால் அந்த கிராமத்தில் உள்ள திடகார்த்தமான ஆட்கள் ஒன்று கூடி அவற்றை எதிர்த்து நின்று கிராம மக்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆகவே அப்படிப்பட்ட வீரர்களை கிராமத்தினர் தம்மைக் காக்கும் வீரர்களாகக் கருதினார்கள். அப்படிப்பட்டவர்கள் மரணம் அடைந்ததும் அவர்களை தகனம் செய்யும் இடத்திலோ, அவர்கள் வீர மரணம் அடைந்த இடத்திலோ அல்லது அவர்களை புதைத்த இடத்திலோ சில கற்கள் அல்லது பெரிய பாறைகளை நட்டு வைத்து அவர்களுக்கு நினைவுச் சின்னங்களாக வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி அதையே இறந்து போன அந்த வீரர்களின் ஆவிகள் எனக் கருதி அந்த ஆத்மாக்கள் தம்மை பாதுகாக்கும் எனக் கருதி அந்த கற்களையும் பாறையையும் வணங்கி வந்தார்கள்.

அந்த வீரர்கள் இறந்த பின்னரும் அவர்கள் தேவதையாக அதாவது இனம் தெரியாத அடையாளம் காண இயலாத ஆத்மாக்களாக அங்கு உலாவிக் கொண்டு இருப்பதாக நம்பியதினால் இறந்து போனவர்களின் ஆவிகளை தம்மை விட அதிக சக்தி உள்ள அமானுஷ்யப் புருஷர்களாகவே கருதினார்கள். அதனால்தான் அவர்களை சிறப்பு மிக்க மனிதர்களாகக் கருதி அவர்களை ஒரு கல்லின் உருவத்தில் வணங்கி வந்தார்கள். சில நேரங்களில் அந்த மாவீரர்கள் வைத்திருந்த வாட்கள், திரிசூலங்கள், சூலாயுதம், வேல், அரிவாள், மற்றும் பிற ஆயுதங்களை அந்த கற்களின் பக்கங்களில் புதைத்து வைத்து அவற்றுக்குள் மறைந்து போன மாவீரர்களின் சக்தி இருக்கும் என்பதாகக் கருதி அவை அனைத்தையுமே வழிபடத் துவங்கினார்கள். இன்னும் சிலரோ பாம்புப் புற்றுக்களை பெண் தேவதைகளாகக் கருதி அவற்றையும் வழிபட்டார்கள். பெரும்பாலான கிராம தேவதை ஆலயங்கள் மரத்தின் அடியிலோ, குளத்தின் அருகிலோ, ஊரின் எல்லையிலோ அல்லது திறந்த வெளியிலோதான் இருக்கும். இப்படியாக எழுந்ததே கிராம தேவதைகளின் ஆலயங்கள்.

நான் குறிப்பிடும் இந்த காலக் கட்டம் தெய்வங்கள் என்பது யார், அவர்களின் உருவ அமைப்பு என்ன என்று தெரியாத காலம். கிராம தேவதை வழிபாடுகளும் இரண்டு கட்ட நிலைகளைக் கொண்டது. முதல் நிலை பெயர் தெரியாத அமானுஷ்யன்களைக் கண்டு பயந்த மக்கள் கற்களையும், பாறைகளையும், ஆயுதங்களையும், புற்றுக்களையும், குதிரை, நாய், யானை போன்ற விலங்குகளையும் வணங்கி வந்தக் காலம்.

பொதுவாக அப்படிப்பட்ட வணங்கும் இடங்கள் ஊர் எல்லைகளில், மறைந்து போனவர்கள் சாதாரணமாக அமர்ந்து இருந்த இடங்கள், தங்கி இருந்த இடங்கள் அல்லது அவர்களை தகனம் செய்த இடங்கள் போன்றவையாக இருந்தன. இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். கிராம மக்களுக்கு தேவதைகள் என்பதோ கடவுட்கள் என்பதோ தெரியாமல் இருந்தக் காலம் அது. ஆகவேதான் தம்மை மீறிய சக்தி பெற்றவர் மடிந்து போனவர்கள் என்ற நம்பிக்கையில் இறந்து போனவர்கள் அப்படியே மேல் உலகிற்குச் செல்வார்கள் என்று நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். மேல் உலகம் என்பது என்ன என்பதும் அவர்களுக்கு தெரியாது. மேலே தெரிந்த ஆகாயமே மேல் உலகம் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.

இரண்டாம் கட்டத்தில் அதாவது வேத காலம் தோன்றியப் பின் எழுந்த கிராம ஆலயங்கள். ஆகம வழிபாட்டு முறைகளில் அமைந்த ஆலயங்களில் இருந்த தெய்வங்களுக்கு ஒரு வடிவம் தரப்பட்ட காலம். அப்படிப்பட்ட காலத்தில் எழுந்த கிராமிய ஆலயங்களில் வைக்கப்பட்ட அந்த மாவீரர்களின் சிலைகளை காத்தவராயன், மதுரை வீரன், மாயக் கருப்பு, கருப்பசாமி, வேலப்பர், கடா மறவர், சுடலை மாடன், ஐயனார், மலைக் கருப்பு, வேண்டிமுத்துக் கருப்பு, தவசி ஆண்டி, முனீஸ்வரர், முத்தையசாமி போன்ற பெயர்களில் அழைத்தும், அவர்களில் சிலரை அந்த தெய்வங்களுடன் சம்மந்தப்படுத்தியும் பூஜித்தார்கள்.

அது போலவே பாம்புப் புற்றுக்கள் மீதும், இன்னும் சில இடங்களில் உயிர் இழந்த பெண்களை புதைத்த அல்லது தகனம் செய்த இடங்களில் அமைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் உருவச் சிலைகளை அமைத்து அவற்றுக்கு காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, பேச்சியம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, கன்யகலம்மா, மன்த்ராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா , கௌரம்மா , கேலுவலம்மா , பெரண்டலம்மா, பெத்தம்மா , மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா, தண்டம்மா எனப் பெயரிட்டு அவர்களையும் ஆகம வழிபாட்டு முறைகளில் அமைந்த ஆலயங்களில் இருந்த தெய்வங்களுடன் சம்மந்தப்படுத்தியும் வணங்கித் துதித்தார்கள்.

இவ்வாறு வணங்கப்பட்ட தெய்வங்கள் சிவபெருமானின் கணங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பராசக்தியின் பரிவாரங்களைச் சேர்ந்த கணங்களாகவோ கருதப்பட்டனர். இரண்டு பெயர்களை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டி உள்ளது என்றால் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததே பராசக்தி என்றும், அந்த பராசக்தியே பரமசிவன் மற்றும் பார்வதியின் இணைந்த அம்சம் என்றும் நம்புவதினால்தான்.
...........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles