(முன் குறிப்பு:- இந்த கட்டுரையை நான் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டேன். அதன் பிறகு பல நண்பர்கள் சில விளக்கங்களை கேட்டு கடிதம் அனுப்ப நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் தந்தேன். ஆகவே மீண்டும் அந்த விளக்கங்களுடன் கூடிய அதே கட்டுரையை அனைவருக்கும் பயன் அளிக்கும் விதத்தில் வெளியிட்டு உள்ளேன். 2010 ஆம் ஆண்டு வெளியான முந்தைய கட்டுரை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது)
தெய்வம் குபேரரின் அருளை பெறஎளியபூஜை ஏதாவது உண்டா என்ற கேள்வி எழுகிறதா? ஆமாம் என்பதாகக் கூறி அந்த எளிய பூஜை முறையை எனக்கு ஒரு பண்டிதர் கூறினார். ஆகவே அதை அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில் இருக்கட்டும் என வெளியிட்டு உள்ளேன். இந்த பூஜையை செய்ய சமிஸ்கிருத மந்திரங்களை ஓத வேண்டிய அவசியம் இல்லை. ஸ்லோகங்களே தெரியாதவர்களும் செய்யக் கூடிய மிக எளிய பூஜை இது. இந்த பூஜை முறை மீது மனதார நம்பிக்கை,பூஜைசெய்வதில் நேர்மை,பூஜையில் ஆழ்ந்த ஈடுபாடு என்ற மூன்றும் மட்டுமே தேவை.
இந்த பூஜையை துவக்கும் முன் நமக்குத் தேவை ஒரு ஒரே மாதிரியான நாணயங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப நாணயங்களைசேர்த்துவைத்துக் கொள்ளலாம். ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் என்ற மதிப்பு அதிகமான நாணயம் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. எட்டணாவாக இருந்தாலும் அது நம் உபயோகத்தில் உள்ள நாணையமாக இருக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் விளையாட்டுக்கான நாணயங்களை பயன்படுத்தக் கூடாது. உபயோகத்தில் இல்லாத நாணயங்களையும் பயன்படுத்தக் கூடாது. அதுவே முக்கியம்.
அடுத்து ஒன்பது நாளைய பூஜையை துவக்கும் முன் முதலில் எந்த நாளில் இருந்து பூஜையை ஆரம்பிக்க உள்ளோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுவே முக்கியம். இந்த பூஜையை வெள்ளிக் கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில்தான் துவக்க வேண்டும். பூஜையை வெள்ளிக் கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் துவக்கி தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமை அல்லது ஒன்பது பௌர்ணமி தினத்தில் பூஜையை செய்து முடிக்க வேண்டும். வெள்ளிக் கிழமை துவக்கினால் வெள்ளிக் கிழமையில்தான் அடுத்த எட்டு நாட்களுக்கான பூஜையையும் செய்ய வேண்டும். அதை போல பௌர்ணமி அன்று துவக்கினால் பௌர்ணமி தினத்தில்தான் அடுத்த எட்டு நாட்களுக்கான பூஜையையும் செய்ய வேண்டும். நாட்களை மாற்றி செய்யக் கூடாது.
மேலே காணும் யந்திரக் கோலத்தைப் போல அரிசி மாவு, குங்குமம் மற்றும் மஞ்சள் பொடியைக் கொண்டு யந்திரத்தின் உருவம் (கோலம்) போட வேண்டும். கட்டங்கள் குங்குமத்திலும், எண்கள் அரிசி மாவினால் மற்றும் ஸ்ரீ எனும் எழுத்து மஞ்சள் பொடியினால் போட வேண்டும்.
பூஜை செய்பவரால் தவிர்க்க முடியாத காரணத்தினால் பூஜையை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவருடைய வீட்டில் குடும்பத்தின் உள்ள யாரேனும் ஒருவர் ஒருவர் அதை தொடர்ந்து செய்யலாம். ஆனால் அந்த நபர் அதே வீட்டில் உள்ளவராக, அதே குடும்பத்தினராக இருக்க வேண்டும்.
முதல் நாள் பூஜையில் எந்த நாணயத்தை பயன்படுத்தினீர்களோ, அதே மதிப்பிலான நாணயங்களைத்தான் ஒன்பது நாள் பூஜையிலும் பயன் படுத்த வேண்டும். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டு பூஜை செய்தீர்கள் என்றால், ஒன்பது நாட்களிலும் அதே மதிப்பிலான அதாவது ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் பூஜையிலும் ஒவ்வொரு மதிப்பிலான நாணயமோ இல்லை ஒரு ரூபாய் இரண்டு, மீதி ஐந்து ரூபாய் நாணயம் என பயன்படுத்தக் கூடாது. ஆகவே பூஜையை துவக்கும் முன்னரே ஒரே மாதிரியான எண்பத்தி ஒரு நாணயத்தை (அதாவது 9 x 9 =81) சேர்த்து வைத்துக் கொண்டே பூஜையை துவக்க வேண்டும்.
பூஜையை எந்த நாளன்று துவக்கினார்களோ அதே தினத்தன்று ஒன்பது நாள் பூஜையை செய்ய வேண்டும். எண்களின் பக்கத்தில் நாணயத்தை வைக்கும்போது எழுத்துக்கள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டு அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும். மேலே உள்ள மாதிரிப் படத்தைப் பார்க்கவும்.
குபேர யந்திரக் கோலம் போட்டு நாணயங்களையும் அதில் வைத்து முடித்ததும் யந்திரத்தின் முன் ஒரு சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை துவக்க வேண்டும். பூஜையில் கூற வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா? மிகவும் சுலபமாகக் கூற முடியும் சுலோக வடிவிலான பிரார்த்தனை அது.
நீங்கள் எதற்காக பூஜை செய்ய விரும்புகின்றீர்களோ அதற்கேற்ப பிரார்த்தனையை செய்யவும். உதாரணமாக:
- மஹாலக்ஷ்மி தேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். என் கடன்கள் தீர்ந்து எனக்கு மன நிம்மதி கிடைக்க நீ அருள் புரிய வேண்டும்.
- அல்லது மஹாலக்ஷ்மிதேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். எனக்கு ஏற்பட்டு உள்ள பண இழப்புக்கள் தீரவும், வாங்கிய கடன்கள் அடைபடவும் தேவையான செல்வம் கிடைத்து எனக்கு மன நிம்மதி கிடைக்க நீ அருள் புரிய வேண்டும்.
- அல்லது மஹாலக்ஷ்மிதேவியே,இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். எனக்கு ஏற்படும் வீண் விரயங்களை தடுத்து செல்வம் நிலைக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் நீ அருள் புரிய வேண்டும்.
- அல்லது மஹாலக்ஷ்மிதேவியே,இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். என் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கத் தேவையான அளவிலான செல்வம் கிடைக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் நீ அருள் புரிய வேண்டும்.
- அல்லது மஹாலக்ஷ்மிதேவியே,இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். என் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான செல்வம் கிடைக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் நீ அருள் புரிய வேண்டும்.
பூ கிடைக்கவில்லை என்றால் அதை விட சிறந்தது குங்குமத்தை நாணயத்தின் மீது தூவலாம். அதை குங்கும அர்ச்சனயைப் போல செய்யலாம்.
பூஜை முடிந்தப் பின் கோலத்தை உடனே அழித்து விடக்கூடாது. மறுநாள்வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும்.
மறுநாள்தான் கோலத்தை ஒரு துணியினால் துடைத்து எடுக்க வேண்டும். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். சில்லறை வேண்டும் என்பதற்காக அதை மாற்றி வைத்துக் கொள்ளக் கூடாது.
மறுநாள் காலை எழுந்து குளித்ததும் அந்த யந்திரத்தில் உள்ள நாணயங்களை பத்திரமாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பணத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ளாதீர்கள். அதை எந்த காரணத்தைக் கொண்டும் வேறு வகைக்கு செலவு செய்யக் கூடாது. அது லக்ஷ்மி தேவி மற்றும் தெய்வம் குபேரருடைய செல்வம் ஆகும்.
யந்திரத்தின் மீது நேரடியாக விளக்குமாற்றால் பெருக்கக் கூடாது. துணியினால் அதை அழித்தப் பின்னரே அந்த இடத்தைப் பெருக்கலாம். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் எண்பத்தி ஒரு நாணயங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
அதன் பின் அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பழம் தர வேண்டும். வீட்டிற்கு வரும் வகையில் சுமங்கலிகள் கிடைக்கவில்லை எனில் ஆலயத்தில் சென்று அங்குள்ள ஏதாவது ஒன்பது சுமங்கலிப் பெண்மணிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணுக்கும் கூட வெற்றிலைப் பாக்கு, பழம் தரலாம். அவர்களும் கிடைக்கவில்லை என்றால் லஷ்மியின் சன்னதியில் தாம்பூலங்களை அப்படியே வைத்து விட்டு வரலாம். இதன் தாத்பர்யம் என்ன என்றால் இப்படியாக ஒன்பது பெண்களுக்கும் பெற்றுக் கொள்ளும் தாம்பூலத்தை லக்ஷ்மி தேவியே அவர்கள் உருவில் வந்து ஒன்பது கட்டங்களிலும் செய்யப்பட்ட பூஜையை அங்கீகரித்து பெற்றுக் கொண்டதான நிலை என்பதான அர்த்தம்.
ஒன்பது கட்டங்களின் தாத்பர்யம் என்ன என்றால், அவை அனைத்தும் உங்கள் வீட்டின் அனைத்து திசைகளையும் (எட்டு திசைகள்) நடுப்பகுதியையும் குறிப்பதாகும். நடுப் பகுதியே லக்ஷ்மி மற்றும் குபேரரை பூஜிக்கும் நீங்கள் என்பதாகும். இப்படியாக எட்டு திசைகளில் இருந்தும் செல்வத்தை வாரி வழங்கியபடி லக்ஷ்மி தேவியும், தெய்வம் குபேரரும் உங்கள் வீட்டில் வந்து உங்களுடன் வசிக்கத் துவங்கும் நிலையை குறிப்பதாகும்.
பூஜை முடிந்த ஒன்பதாம் நாளன்று கண்டிப்பாக பூஜை செய்தவர் ஏதாவது ஒரு லஷ்மியின் ஆலயத்துக்குச் சென்று தம்முடைய அதே பிரச்சனையைக் கூறி அவளை அதை களையுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும். தனி லஷ்மி ஆலயம் இல்லை என்றாலும் கவலை இல்லை. வேறு எந்த ஆலயத்துக்காவது சென்று லஷ்மியின் சன்னதிக்கு சென்று வேண்டுதலைவைத்தப் பின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து வைத்த எண்பத்தி ஒரு நாணயங்களையும் லஷ்மி தேவியின் உண்டியலில் போட வேண்டும்அல்லது அதை அப்படியே சன்னதியின் தட்டில் போட்டுவிட்டு வர வேண்டும்.அதைப் போடும் முன்னால் தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கையைப் போல தனக்கும் பல மடங்கு செல்வம் தர வேண்டும் என லஷ்மி தேவியை மனமார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இந்த பூஜையை குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வசதி உள்ளவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் பக்தியுடன் செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும். பணப் பிரச்சனை இருக்காது. செல்வம் நிலைக்கும். அப்படி பொதுவாக செய்யும் பூஜையின்போது நாம் கூற வேண்டிய த்யான சுலோகம் ‘அம்மா, மகாலஷ்மித் தாயே, நீ எங்களுடைய வீட்டில் நிரந்தரமாகத் தங்கி எங்களைக் காத்தருள வேண்டும்’ என்பதே.