Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

How Aiyanar Horses are made ?

$
0
0
களி மண்ணிலான சிற்பக் கலை 

சாந்திப்பிரியா 

 
[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' 
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் 
புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் 
சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து 
கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு 
தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார். 
அவருக்கு என் நன்றி-          Photograph taken by: Christa Neuenhofer Neuenhofer
சாந்திப்பிரியா ]

பல கிராமங்களில் நாம் காணும் கிராம தேவதைகள் மற்றும் காவல் தெய்வங்களின் சிலைகளை கண்டு பிரமிக்காதவர்கள் இல்லை. அதுவும் மிகப் பெரிய அளவில், காணப்படும் ஐயனார் சிலைகள், அவற்றில் காணப்படும் அற்புதமான கைவண்ணம் போன்றவற்றையும், சராசரி மனித உருவை விட மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ள சிலைகளையும் பார்க்கும்போதும் அவற்றை யார் செய்தது என்பதையும் அநேகமாக யாரும் அதிக அக்கறையோடு கவனித்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட எண்ணமும் அவர்களுக்கு இருந்திடாது. ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கி உள்ளதை நான் சமீபத்தில் தெரிந்து கொள்ள நேரிட்டபோது ஆச்சர்யம் அடைந்தேன்.

இன்றைக்கும் பல்வேறு கிராமப்புறங்களிலும் ஐயனாரையே காவல் தெய்வமாக கருதி அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் ஐயனார் ஆலயம் எனக் கூறாமல் அவற்றை வழிபாட்டுத்தலங்கள் அல்லது ஐயனார் கோவில் என்பார்கள். ஐயனார் கோவில் என்பது பெரும்பாலும் மரங்களடர்ந்த பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை போன்றவற்றை ஒட்டி இருக்கும் பகுதிகளில்தான் அமைந்திருக்கும். ஐயனாருடைய பல கோவில்கள் கிராமப்புற எல்லைகளில் அடுத்த ஊருக்குச் செல்லும் சாலைகளை ஓட்டியே உள்ளன. அவற்றுக்கு மேற்கூறைக்  கூட இருக்காது. ஆனால் ஐயனார் எங்கிருந்தாலும் அவருடன் ஒரு பெரிய குதிரையும் காணப்படும். அதனால்தான் பல கிராமங்களிலும் ஐயனாருடைய வாகனம் குதிரை என்பார்கள்.
 
தீய சக்திகள், பேய் மற்றும் பிசாசு போன்றவற்றின் உருவம் குதிரைக்கு கண்கூடாகத் தெரியும் என்பது பண்டைய காலம்தொட்டு தொடரும் நம்பிக்கை ஆகும். அதனால்தான் எந்த ஊரில் ஐயனாருக்கு கோவில் உள்ளதோ, அந்த ஊரில் தீய சக்திகள் நுழையாமல் இருக்க ஐயனார் சக்திகளை அடையாளம் காட்டும் குதிரை மீது பவனி வந்தபடி இருக்கும்போது, அந்தக் குதிரை எங்கெல்லாம் தீய சக்தி, பேய், பிசாசுக்களை அடையாளம் காட்டுகிறதோ அவற்றை அடித்துத் துரத்தி அந்த ஊரைக் காப்பார் என்பார்கள். ஊர்காக்கும் கடவுளாக ஐயனார் வணங்கப்படுகிறார். ஐயனாரின் உருவச் சிலை பீடத்தில் அமர்ந்த நிலையிலும், குதிரை வாகனத்தில் ஏறி அமர்ந்த நிலையிலும் காணப்படும். ஐயனாருடைய கோவில்கள் உள்ள கிராமத்தை சேர்ந்த அந்தந்த ஊர் ஜனங்கள் பயபக்தியுடன் அவருக்கு வருடாந்தர திருவிழா எடுப்பர். சங்க காலத்தில் வழிபடப்பட்ட சாத்தன் என்ற தெய்வமே கிராமங்களில் ஐயனாராகக் கொண்டாடப்படுகிறார் என்றும், சாத்தான் எனப்பட்ட கடவுள் சாஸ்தா அதாவது ஐயனார் என்ற நம்பிக்கையும் உண்டு. அப்படிப்பட்ட கிராம தெய்வங்கள் மற்றும் ஐயனாருடைய குதிரையின் சிலைகளும் எங்கு வடிவமைக்கப்படுகின்றன ?

பல ஆயிரம் ஆண்டுகளாக களிமண்ணினால் ஆன மிகப் பெரிய சிலைகள் தமிழகத்தின் சில கிராமங்களில் செய்யப்பட்டு வந்துள்ளன என்றாலும் தமிழ்நாட்டில் புத்தூர் கிராமத்தில்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாக களிமண்ணினால் ஆன சிலைகள் பரம்பரைப் பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குயவர்களின் பிரிவினரால் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அப்படி செய்யப்பட்ட சிலைகள் பல நூற்றாண்டுகள் ஆனாலும் மழை மற்றும் வெயிலினால் எந்த மாற்றமும் அடையவில்லை, அழிவுற்றதும் இல்லை. அப்படிப்பட்ட சிலைகளை செய்வது எளிதல்ல. பல பாவங்களையும், கோணங்களையும் காட்டும் விதத்தில் வடிவமைக்கப்படுவதாகும் அவை. வடிவமைப்பில் அனைத்து கோணங்களும் அவற்றின் பாவனைகளுடன் ஒன்றுடன் ஒன்று ஓத்து இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிலைகளை நகரங்களை விட்டு வெகு தொலைவில், உள்ள கிராமங்களில் செய்கிறார்கள் என்பதை பலரும் அறிந்திடவில்லை.

ஐயனார் குதிரை சிலைக்கு  முன்னால் 
'ரான் டியூ போய்ஸ்' (Ron du Bois)

1980 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக் கழகத்தில் ஓவியமும் கைவினையும் குறித்து போதனை செய்யும் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு 'ரான் டியூ போய்ஸ்'{Ron du Bois(1)(2)}எனும் அமெரிக்கர்  இந்த சிலைகளை செய்யும் கலையினை நேரடியாகப் பார்வையிட இந்தியாவுக்கு வந்தார். அவர் உலகின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து குயவர்கள் செய்யும் பாண்டங்களின் கலைகளை நேரடியாக பார்த்து அவற்றைக் குறித்துக் கட்டுரைகளை எழுதி உள்ளார். அந்த அமெரிக்கர் தமிழ்நாட்டில் வந்து சில பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த வழிபாட்டு தலங்களில் இருந்த ஐயனார் சிலைகளைப் பார்த்து வியந்தார். அவர் கூறினார் 'கிராமப்புறங்களில் காவல் தெய்வம் எனப்படும் ஆலயங்களில் இருந்த, பல அடி உயரமான களிமண்ணால் ஆன குதிரைகளைக் கண்டு பிரமித்துப் போன நான் அவை செய்யப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும், அவற்றை செய்தது யாராக இருக்கும், அதை என்ன காரணத்துக்காக செய்தார்கள், அவற்றை செய்யும்போது அவை உடைந்து போகாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள் போன்ற எண்ணங்களை மனதில் சுமந்தபடி என் நண்பர்களுடன் சிதம்பரத்தின் அருகில் இருந்த ஆலயங்களில் காணப்பட்ட களிமண்ணால் ஆன ஐயனார் சிலைகளைக் காணச் சென்றேன். பத்தடிக்கும் உயரமான அந்த ஐயனாரின் சிலைகளின் வண்ணங்கள் மட்டுமே மங்கலாகிக் கிடந்தாலும் உருவ அமைப்பில் அவற்றில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்ததைக் கண்டு வியந்தேன். ஆகவே அந்த சிலைகளை செய்யும் இடத்தையும் அவற்றை செய்பவர்களையும் காண ஆவல் கொண்ட நான், இந்தியாவில் இருந்த என் நண்பர்கள் உதவியுடன் சிதம்பரத்துக்கு அருகில் இருந்த புத்தூர் எனும் கிராமத்துக்கு சென்றோம். அங்கு சிலைகளை வடிவமைக்கும் குறிப்பிட்ட இனத்தவர் இருப்பதாக அறிந்து கொண்டு அங்கு சென்றோம். புத்தூருக்கு சென்று அங்கு பத்து நாட்களுக்கும் மேலாக தங்கி இருந்து ஒன்பது அடிக்கும் அதிகமான உயர ஒரு ஐயனார் சிலையை வடிவமைக்க ஒரு குயவனாரின் உதவியை நாடினோம்'



ஊர் எல்லையில்  பாழடைந்த இடத்தில் 
 களிமண்ணால் செய்யப்பட்டு இருந்த 
நான்கு ஐயனார் குதிரை சிலைகள்

அந்த கிராமத்துக்கு சென்று பத்து நாட்கள் தங்கி இருந்த திரு  'ரான் டியூ போய்ஸ்'தாம் கண்ட அந்தக் கலையைக் குறித்து விளக்கமாக எழுதி இருக்கிறார். அவர் எழுதி உள்ளதைப் படியுங்கள். 'அந்தக் கிராமத்தில் நுழைந்த நாங்கள் அங்கு வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நான்கு பிரும்மாண்டமான மண் குதிரைகளின் சிலைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த ஆலயத்தின் அருகில், யாரும் சீண்டாமல் அனாதைப் போலக் கிடப்பதைக் கண்டோம். நான் அங்கு கண்ட சிலைகளின் அளவும், வடிவமைப்பும் அற்புதமானவை என்பது விளங்கியது. மண்பாண்ட தொழிலில் அவர்கள் கடைபிடிக்கும் கலை முற்றிலும் வேறாகவும், வினோதமாகவும் உள்ளது'.

அந்த மண் குதிரையை செய்தது யார் என்பதோ, அது உருவாக்கப்பட்டுள்ள காலமோ அல்லது எங்கு செய்யப்பட்டது என்கின்ற விவரமோ எதுவுமே அவற்றில் காணப்படவில்லை என்பதின் காரணம் ஐயனார் குதிரைகளை வடிவமைப்பவர்கள் அதைக் குறித்த எந்த செய்தியையுமே அதில் எழுதி வைப்பது இல்லை என்பதுதான். மிகப் பெரிய அளவிலே வடிவமைக்கப்பட்ட மண்ணினால் ஆன குதிரைகளை வடிவமைத்து முடித்ததும் வெட்ட வெளியிலேயே வைத்து நெருப்பினால் சுட்டு பதமாக்குகிறார்கள். அந்த மண் குதிரைகளின் கழுத்துப் பகுதியில் காணப்படும் அணிகலன்கள் போன்ற வடிவமைப்பை மண்ணுடன் நன்கு அரைத்த வைக்கோலையும் கலந்தே வடிவமைத்தாலும், கழுத்துப் பகுதியை பொருத்தவரை அதை முழுவதிலும் களிமண்ணால் ஆன கலவையிலேயே வடிவமைக்கிறார்கள். அந்தக் குதிரைகள் மீது ஏறிக் கொண்டுதான் ஐயனார் இரவில் பவனி வந்து அந்த கிராமத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம் உள்ளது.

அந்த கிராமத்தில் நுழைந்து களிமண்ணால் ஆன குதிரைகளின் உருவங்களை செய்யும் குயவர்களைத் தேடியபோது ஒரு இடத்தில் சில குடுசைகள் இருந்ததைக் கண்டதும் அங்கு சென்றோம். அந்த சிறு குடிசைகளில் சில குடும்பங்கள் இருந்ததையும் கண்டோம். அந்த குடிசை வீடுகளின் அருகில் சின்ன ஐயனார் வழிபாட்டுத் தலமும் அதன் முன்னால் மிகப் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டு இருந்த களிமண்ணால் ஆன குதிரையும், அதனுடன் சேர்த்து இரண்டு காவலாளிகளின் சிலைகளும் குதிரையின் கீழ் பகுதியில் வடிவமைக்கப்பட்டு உள்ளதைக் கண்டோம். பெரிய நகரங்களில் உள்ள ஆலயங்களைப் போல அல்லாமல் கிராமங்களில் இருந்த ஐயனாரின் வழிபாட்டுத் தலங்கள் கிராமப்புற பின்னணியில் ஒதுக்குப்புறமான இடங்களில், சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருந்துள்ளன. சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் பிறந்தவரே ஐயனார் எனக் கூறப்படும் கதையின் பின்னணியில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் ஐயனாரும் இந்துக் கடவுட்களின் மத்தியில் ஒரு சின்ன தெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொண்டோம்.

கிராமத்து மக்கள் ஐயனாரின் கையில் காணப்படும் பட்டாக்கத்தி போன்ற வாளில் தமது குறைகளை எழுதி வைத்து அவற்றை களையுமாறு ஐயனாரை வேண்டுவார்களாம். ஒவ்வொரு நாள் மாலையிலும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்து ஐயனாரை வழிபட்டதை தமது தினக் கடமைப் போல செய்து கொண்டிருந்ததைக் கண்டோம்.

அந்த கிராமத்தில் கடைசியாக செய்யப்பட்ட ஐயனாரின் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்டதாம். அவர்களது கலையைக் கண்டு வியந்த நான் எங்களுக்காக ஒரு சிலையை வடிவமைத்துக் காட்ட முடியுமா என்று ஆவலுடன் கேட்டபோது முதலில் சற்று தயங்கியவர்கள், பின்னர் எங்களுக்காக அதை செய்து காட்ட சம்மதித்தார்கள். ஒரு ஐயனார் குதிரை சிலையை வடிவமைத்துக் காட்ட சன்மானமாக ஐநூறு ரூபாயையும் பேரம் பேசி முடித்தோம். அதற்கு ஒப்புக் கொண்ட அந்த தொழிலாளிகள் மறுநாள் காலை அதை துவக்குவதாக உறுதி அளிக்க, மறுநாள் காலை நாங்கள் அந்த கிராமத்தை அடைந்தோம்.

எங்களுக்காக வடிவமைத்த ஐயனார்
சிலையை செய்த நான்கு பேர்களில்
ஒருவரான கலிய பெருமாள்

நாங்கள் சென்ற சின்ன ஆலயத்தில்
சாமி ஏறியதாக கூறப்பட்டு மயக்க
நிலையில் நின்றிருந்தப் பெண்மணி

1980 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி.  ஐயனார் சிலையை வடிவமைக்கத் துவங்கிய முதல் நாள் நாங்கள் அந்த கிராமத்தினரிடம் கூறி இருந்ததைப் போல சரியான நேரத்தில் அங்கு சென்றதும் ஐயனார் பவனி வரும் குதிரையை வடிவமைக்கத் துவக்கும் முன்னால் அந்த சிலை நல்லபடியாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த குயவர்கள் சிறிய பூஜையை செய்து விட்டு சிலையை வடிவமைக்கத் துவங்கினார்கள்.

வெட்டி எடுத்து வரப்பட்ட ஒரு சேவலின் தலையில் இருந்து ரத்தம் சிந்திபடி இருக்க அந்த ரத்தத்தை கையில் பிடித்து எடுத்து எந்த இடத்தில் சிலையை செய்ய இருந்தார்களோ அந்த இடத்தை சுற்றி தெளித்தார்கள். தேங்காயை உடைத்து அவற்றின் மூடிகளை இரு பக்கங்களிலும் வைத்தார்கள். ஐயனாருக்கு படைக்கப்பட்ட படையலில் அந்த ஊரிலேயே தயாரிக்கப்பட்டிருந்த கள் எனும் சாராயமும் இருந்தது. ஐயனாருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடித்தப் பின்னர் ஐயனார் அருள் கிடைத்து விட்டதாகக் கருதி ஐயனார் பவனி வரும் குதிரையின் சிலையை செய்யும் பணியினை துவக்கினார்கள்.

ஐயனார் குதிரையை வடிவமைக்க குளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மணலையும் களிமண்ணையும் கொண்ட கலவையை  முதல் நாளே செய்து வைத்திருந்தார்கள். அவற்றின் மேல் படிந்து இருந்த வண்டலை நீக்கிவிட்டு அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு பிசைந்து களிமண் கலவையைப் பதப்படுத்தினார்கள். ஆனால் வெறும் களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டால் அது மழைக் காலத்தில் வெடிப்புக்களை ஏற்படுத்தலாம், உடைந்தும் விடலாம், அல்லது சிதைவும் அடையலாம் என்பதினால் அந்தக் களிமண்ணுடன் மூன்று பங்கு அளவில் உமி மற்றும் ஒரு பங்கிற்கு மூன்று அல்லது நான்கு அங்குல நீட்டமாக வெட்டப்பட்டிருந்த வைக்கோல் போன்றவற்றைக் கலந்து நன்றாக பிசைந்து கலவையை செய்தார்கள்.

முதலில் குதிரையின் குளம்பு
எனப்படும் பாதம் அமைக்கப்படுகிறது 

அவருக்கு பின்னால் இருப்பது 
நூறு வருடங்களுக்கு முந்தைய 
குதிரையின் சிலை ஆகும்


பின்னர் ஒவ்வொன்றாக நான்கு கால்களும் 
வடிவமைக்கப்பட்டன

முதலில் பூமியில் 12 அங்குலத்துக்கு 12 அங்குல அளவு குழியை வெட்டினார்கள். பிறகு அதை சுற்றி அரிசி உமி கலந்த களிமண்ணை குதிரையின் குளம்பு எனப்படும் பாதம் போன்ற அமைப்பில் செய்து வைத்தார்கள். அதன் பின் அந்த 12 அங்குல வட்டவடிவமான களிமண் அமைப்பின் மேல் சுமார் 16 அங்குல வட்ட வடிவிலேயே, மண் கலவையைக் கொண்டு வட்டமாகவே சுவர்போல எழுப்பினார்கள். அதன் பின் இன்னொரு குயவர் சுமார் ஆறு அடி உயரமான மூங்கில் கட்டையை அந்த வட்டவடிவிலான மண் சுவற்றின் நடுவில் வைக்க அந்த மூங்கில் கட்டையை சுற்றி இருந்த வெற்று இடத்தை அடிப்பாகம்வரை களிமண் கலவை கொண்டு முழுமையாக நிறப்பினார்கள். இப்படியாக சுமார் ஆறு அடி உயர அமைப்பில் நான்கு கால்களும் தயாராயின.

இரண்டு கால்களின் நடுவிலும் வயிற்றை தாங்கிப் பிடிக்க
ஒரு தூண் போன்ற அமைப்பு செய்யப்படுகிறது

அதை செய்து முடித்ததும் மறுநாள் வரை மேலும் எதுவும் செய்யாமல் அந்த வடிவமைப்பை நன்கு காய்ந்து போகுமாறு அப்படியே விட்டு வைப்பார்கள். வெயிலின் அளவு அன்றைக்கு சுமார் 112 F டிகிரி அளவில் இருந்தது. அந்த களிமண் கலவைக் காய அத்தனை உஷ்ணம் தேவையாம். பிறகு மீண்டும் மறுநாள் அதன் மீது நான்கு கால்களையும் சேர்க்கும் விதங்களில் மூங்கில் கட்டைகளை பக்குவமாக அவற்றின் மீது வைத்தப் பின் அவற்றை வைக்கோலில் செய்த கயிற்றினால் கட்டிய பின்னர் கால்களை கனமாக வடிவமைக்க நான்கு அங்குல தடிமன் அளவு களிமண்ணை கால்களை சுற்றி அனைத்து பகுதியிலும் மீண்டும் பூசி விடுவார்கள். மறுநாள் அவர்கள் செய்து முடித்திருந்த முன்னாங்காலின் உயரம் 44 அங்குலமாகவும், கால்களின் தடிமன் 17 x 38 அங்குல சுற்றளவாகவும் இருந்தது. அதன் பின் மீண்டும் அந்த நான்கு கால்களையும் இணைத்து கட்டி வைக்கப்பட்டு இருந்த மூங்கில் மீது பக்குவமாக்கி கலந்து வைத்திருந்த களிமண்ணை கால்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில் பூசி களிமண் கலவையினால் இணைத்தார்கள். அவற்றை செய்து முடித்ததும் அவை நன்கு காய்ந்து கெட்டியாகும்வரை அப்படியே அங்கேயே அசையாமல் இருக்குமாறு விட்டு வைத்தார்கள்.

மாதிரிப் படங்கள் எதையும் வைத்திருக்காமல்
நடுத் தூணில் உருவம் வடிவமைக்கப்படுகிறது

முன் கால்கள் மற்றும் பின்னங்கால்கள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக சேரும்வகையில் களிமண்ணால் பூசிய வடிவமைப்பு அந்தக் கால்களின் மீது சின்ன தொட்டியை வைத்தது போல காணப்பட்டது. அந்தக் கால்களுக்கு இடையே நடுப்பகுதியில் வயிற்றுப் பகுதியை தாங்கிப் பிடிக்கும் வகையில் கால்களின் உயரத்தில் தூண் போன்ற அமைப்பும் களிமண்ணினால் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. அந்த அமைப்புக்கள் அனைத்துமே அவற்றின் இடங்களை விட்டு நகராமல் இருக்க வைக்கோல் கட்டையினாலும் கயிற்றினாலும் கட்டி வைக்கப்பட்டது. இப்படியாக செய்யப்பட்ட அனைத்து பாகங்களையும் சுட்டெரிக்கும் வெய்யிலில் நன்கு காயுமாறு அப்படியே விட்டு வைத்து விடுகிறார்கள்.

நடுத் தூணின் ஒருபக்கம் களிமண்ணால்
வடிவமைக்கப்படும் உருவம்

நடுத் தூணின் இன்னொரு பக்கம்
களிமண்ணால் வடிவமைக்கப்படும் உருவம்

கீழ் வயிற்றுப் பகுதிக்கு உள்ளே மேல் வயிற்றுப்  பகுதி 
சரியாமல் இருக்க வைக்கப்படும்  மூங்கில் கட்டைகள் 

அடுத்தது வயிற்றுப் பகுதியை வடிவமைத்தார்கள். அந்தப் பகுதியையும் மண் கலவையினால் நன்கு வடிவமைத்து முடித்தப் பின்னர் அது காயும்வரை அடிப்பாகத்தில் வைக்கப்பட்டு இருந்த தூண் போன்ற பகுதியின் மீது களிமண்ணைக் கொண்டு சின்ன ஐயனார் சிலைப் போன்ற காவல் தெய்வங்களின் சிற்பங்களை வடிவமைத்தார்கள். தூண் போன்ற அமைப்பின் இருபுறமும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்தக் கலையில் தேர்ச்சி பெற்றக் குயவர்கள் அந்த சிற்பங்களை எந்தவித அளவுகோளையோ அல்லது மாதிரிப் படத்தையோ வைத்துக் கொண்டு வடிவமைக்காமல் இயற்கையாக அவர்களுக்கு கைவந்துள்ள கைக் கலைக் கொண்டு வடிவமைக்கிறார்கள். அந்தக் கலைதான் அவர்களுடைய மிகப் பெரிய பலம் ஆகும்.

பாதி அளவே எழுப்பப்பட்ட வயிற்றுப் பகுதிக்குள் 
கட்டைகள் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்படுகின்றன

மெல்ல மெல்ல வயிற்றுப் பகுதி
மேலேழுப்பப்படுகிறது

கால்கள் முதல் மெல்ல மெல்ல வயிற்றுப் பகுதி
வரை அலங்கார சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன 

அதைப் போலவே கால்கள் மற்றும் பாதி உயர அளவிலேயே வடிவமைக்கப்பட்டு வைத்திருந்த வயிற்றுப் பகுதிகளில் அற்புதமான கலைநயமிக்க அணிகலன்களின் வடிவமைப்புக்கள், சலங்கைகள், மணிகள் போன்றவற்றின் உருவ வடிவமைப்பும் மற்றும் அமரும் ஆசன இருக்கை போன்றவற்றையும்  கலையழகு மிக்கவாறு  வடிவமைத்தார்கள்.

இப்படியாக களிமண் கலவையைக் கொண்டு முதல் ஐந்து நாட்களிலும் அன்றாடம் ஒவ்வொரு பகுதியையும் மிக்க கவனத்துடன் வடிவமைத்ததும் ஆறாம் நாளன்று பாதி அளவே வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த வயிற்றுப் பகுதியின் உள்ளே மூங்கில் கட்டைகளை முன்னங்கால் மற்றும் பின்னங்கால் பகுதிகளை இணைக்கும் வகையில் குறுக்கும் நெருக்குமாக வைத்தப் பின் வயிற்றுப் பகுதியை முழுமையாக்கும் விதத்தில் மேல் வயிற்றுப் பகுதியின் முதுகுப் பகுதி மூடி உள்ளது போல அமைந்திருக்கும் வகையில் களிமண் கலவையைக் கொண்டு சுவர் போல எழுப்பியவாறு களிமண் கலவையைப் பூசி  மூடி விடுவார்கள்.

கால்கள் முதல்  வயிற்றுப் பகுதி முழுவதுமாக 
வடிவமைக்கப்பட்ட  பின்னர் கால்கள் மற்றும் 
வயிற்றுப்  பகுதிகளில் அணிகலங்கள் போன்ற 
சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன 

அந்த வயிற்றுப் பகுதிக்குள் முன்னர் வைக்கப்பட்டு இருந்த மூங்கில் மரக்கட்டைகள் வயிற்றுப் பகுதி மீது பூசப்படும் சுவர் போன்ற களிமண் கலவையை அப்படியே தாங்கிப் பிடித்தவாறு இருக்க உதவுகின்றது. வயிற்றுப் பகுதியின் சுவர்களை கனமான சுவர்போல எழுப்பாவிடில் அவை உடைந்து கீழே விழுந்து விடும். ஒருமுறை மண்கலவை காய்ந்து விட்டால் அதற்குப் பிறகு அது உடையாது.  அதன் காரணம் அவற்றின் தடிப்பு மிக அதிகமாகவே இருப்பதுதான்.  இதனால் களிமண் கலவையைக் கொண்ட முதல் சுற்று  சுவர் நன்கு காய்ந்ததும் அனைத்தின் மீதும் மீண்டும் ஒரு அடுக்கு களிமண் கலவை சுவர் போல பூசப்பட்டு அதன் மீது அலங்கார வடிவமைப்புக்கள் செய்யப்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வடிவமைப்பு அடர்த்தியான சுவர் மீது இல்லாமல் மெல்லிய சுவர் மீது வடிவமைக்கப்பட்டால் அதை வடிவமைக்கும்போதே உள்ளே வெற்றிடமாக உள்ள பகுதியில் எழுப்பட்டு உள்ள சுவர்   உடைந்து விழக் கூடும் என்ற அச்சமே என்பதினால்தால் முதல் சுற்று பூச்சு சுவர் மீது இன்னொரு பூச்சு சுவர் எழுப்பி அந்த உடல் முழுவதையும் தடிமனாக்கி விடும் வடிவமைப்பு முறை ஆகும்.  அப்படி தடிமனான சுவரை வயிறுபோல எழுப்பி காய வைத்ததும் அதன் மீதுதான் கலைநயமிக்க ஓவியங்கள் செதுக்கப்படுகின்றன.

இப்படியாக படிப்படியாக ஆறு தினங்கள்வரை ஐயனார் குதிரை அமைப்பை வடிவமைத்ததும் ஏழாம் நாளன்று அந்த குதிரை வடிவமைப்பின் உயரம் ஒன்பது அடிவரை வளர்ந்தது. இதில் ஆச்சர்யம் என்ன என்றால் எந்த அளவையுமே அளவுகோலை வைத்துக் கொண்டு அளந்து செய்யாமல் கையினாலேயே தோராயமாக அளவெடுத்து செய்தது வியப்பாக இருந்தது  . அவர்கள் குதிரையின் நீட்டத்தை பதிமூன்று முழமாகவும், ஒவ்வொரு காலும் நான்கு நான்கு முழ நீளமுமாக இருக்கும் வகைக்கு அளந்து வடிவமைத்தார்கள் (ஒரு முழம் என்பது ஒரு மனிதரின் விரல் நுனி முதல் கை முட்டி வரையிலான தூரம் ஆகும்). அப்படி தோராயமாக அளவெடுத்து செய்தாலும் வடிவியல் வடிவமைப்புக்கள் (Geometrical) அனைத்துமே தாறுமாறாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று ஓத்து இருந்தது ஆச்சர்யமாகவே இருந்தது. இந்தக் கைக் கணக்கிலான அளவு முறைகளின் பக்குவம் பரம்பரைப் பரம்பரையாக தந்தையிடம் இருந்து மகனுக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளன.

அவர்கள் வடிவமைத்த முகங்களும், தோரணைகளும் பல இந்துக் கடவுட்களின் முகங்களையும் பாவனைகளையும் ஒத்திருந்தது. அவற்றையும் கூட வரைந்து வைத்திருந்த எந்தவிதமான சித்திரங்களையும் பார்த்துப் பார்த்து வடிவமைக்காமல் மனதில் இருந்தே பிம்பங்களின் உருவங்களை கைவிரல்களில் பாய்ச்சி அந்தக் வடிவமைப்பை செய்தது விவரிக்க இயலாத வியப்பைத் தரும் உண்மை நிலையாகும் .

வயிற்றுப் பகுதியின் அனைத்து பக்கங்களிலும் களிமண் 
கலவையைக் கொண்டு கலைநயமிக்க சித்திர
வேலைகள் கொண்ட உருவங்கள் அமைக்கப்பட்டன

அது போலவே கழுத்துப் பகுதியிலும் சித்திர
வேலைபாட்டுடன் கூடிய அணிகலன்கள்
போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டன


கலைநயமிக்க சித்திர வேலைபாடுகள்
கொண்ட வடிவமைப்புக்கள்

ஒன்பதாம் நாள் ஐயனார் குதிரையின் கழுத்துப் பகுதி, முதுகுப் பகுதி, குதிரையின் பின் மற்றும் வால் பகுதிகள் போன்ற அனைத்தும் வடிவமைக்கப்பட்டு முடிந்திருந்தன. பத்தாவது நாளன்று முகமும் வடிவமைக்கப்பட்டு அது கீழே விழுந்து விடாமல் இருக்க சங்கிலி போன்றஒருவிதமான பிடிப்பும் முகத்தை பிடித்தபடி இருக்கும் வகையில் வைக்கப்பட்டது.  பத்தாம் நாளன்று காலையிலேயே அவற்றை செய்து முடித்தப் பின்னர் அதுவரை செய்யப்பட்டு இருந்த வடிவமைப்புக்கள் அனைத்தும் நன்கு காய்வதற்கு வசதியாக மறுநாள்வரை தகிக்கும் வெய்யிலில் இருக்குமாறு அப்படியே விட்டு விடப்பட்டது.

வடிவமைக்கப்பட்ட குதிரையை சுற்றி முதலில்
மாட்டு சாணத்தைக் கொண்ட கலவையை
சுவர் போல எழுப்பினார்கள்

வடிவமைக்கப்பட்ட குதிரையை சுற்றி சுவர் போல 
எழுப்பிய மாட்டு சாணத்தைக் கொண்ட கலவை மீது 
அங்காங்கே உடைந்த மண் சட்டியையும் வைத்தார்கள்

வைக்கோலைக் கொண்டு குதிரை 
முழுவதுமாக மூடப்பட்டது

அதன் மீது சாணத்தினால் செய்த வரட்டி
மற்றும் மண் பானைகள் வைக்கப்பட்டன


முடிவாக அனைத்திற்கும் தீ மூட்டி
அவற்றை முழுமையாக எரிய விட்டார்கள்

பதினோறாம் நாள் முடிவில் குதிரையின் வடிவமைப்பு முழுமையானதும் பன்னிரண்டாவது நாளன்று அந்த ஐயனார் குதிரையை சுற்றி ஐந்தடி உயரத்துக்கு சாணத்துடன் கூடிய களிமண்ணைக் கொண்டு சுவர் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதற்குள் வைக்கோல், மரக் கட்டைகள், சாணத்தினால் ஆன வறட்டி போன்றவற்றை கொண்டு வந்து நிறப்பினார்கள். அவற்றை வைத்து குதிரையின் சிலையை முழுமையாக மூடியதும் அனைத்திற்கும் தீ வைத்தார்கள். நெருப்பு குபுகுபுவென எரியத்  துவங்கியது. வடிவமைத்த அந்த விசேஷ களிமண் கலவையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட களிமண் குதிரையை அப்படி நெருப்பினால் சுட்டெரித்தால்தான் அந்த ஐயனார் குதிரை வலுப்பட்டு எத்தனை ஆண்டானாலும் மழையினாலோ அல்லது வெய்யிலினாலோ பாதிக்கப்படாமல் இருக்குமாம். ஒரு குறிப்பிட்ட மணிநேரம்வரை அப்படியே எரிய விடுவார்கள். தீ அணைந்து விட்டாலும் அதை அப்படியே இரவு முழுவதும் இருக்குமாறு விட்டு வைத்தார்கள். மறுநாள் காலை தீ வைத்து எரித்ததினால் கிடந்த சாம்பலை அப்புறப்படுத்தி அனைத்தும் எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தப் பின்னர் வடிவமைக்கப்பட்ட அந்த ஐயனார் குதிரைக்கு விதவிதமான வண்ணம் பூசி அழகூட்டிய பின்னர் ஐயனார் அதில் ஏறி பவனி வர தயார் நிலையில் வைத்தார்கள். இப்படியாக வடிவமைக்கப்படும் ஐயனார் குதிரையின் சிலையை எந்த வழிபாட்டுத் தலத்தில் வைக்க வேண்டுமோ அங்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.

 -----------------------------------
The condensed version of the article above is based on “Larger than life: The Terracotta sculptures of India” written by Shri Ron Du Bois, Emeritus Professor of Art in Oklahoma State University,USA.  His personal experience on the art of making terracotta images in a village called Puthur in Tamilnadu appeared in the site Ethnoflorence, a site that publishes articles connected to art and Sculptures of different parts of the world. All the pictures in the article as reproduced above have been provided by Mr.Ron du Bois {(1)(2)} himself. My sincere thanks to him for according permission to use any of his articles in appropriate manner in my blogger.

நன்றி:- இந்த மூலக் கட்டுரை அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக் கழகத்தில் ஓவியமும் கைவினையும் குறித்து போதனை செய்யும் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ரான் டியு போய்ஸ் ( Ron Du Bois: http://www.angelfire.com) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த புதூர் எனும் கிராமத்துக்கு சென்று அங்கு களிமண்ணில் வடிவமைக்கப்படும் கலையினை நேரிலே கண்டு அதை தனது அனுபவமாக Ethnoflorence எனும் இணையதளத்தில் எழுதி உள்ள கட்டுரையின் அடிப்படையில் சுருக்கி எழுதப்பட்டு உள்ளது.  இவற்றில் காணப்படும் படங்களும் திரு ரான் டியு போய்ஸ் கட்டுரையை சார்ந்தவையே. அவருடைய கட்டுரைகளும் படங்களும் Ethnoflorence எனும் இணைய தளத்தில்Larger than Life: The Terracotta sculptures of India  வெளியாகி உள்ளன. அவருடைய அனைத்துப் படங்களையும் கட்டுரையையும் என்னுடைய கட்டுரைக்கு ஏற்ப தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள எனக்கு விசேஷ அனுமதி தந்துள்ள அவருக்கு நன்றி.

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>