Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Temples in Malwa Region - 6

$
0
0
சாந்திப்பிரியா                                                       -  6-

........ஸ்ரீ ஒம்காரீஸ்வரர்  ஆலயம் 

இந்தூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓம்காரேஸ்வர் எனும் சிற்றூர் மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா எனும் மாவட்டத்தில் உள்ளது.  இங்குள்ள நர்மதை நதி இரண்டாக பிரிந்து ஓடுகிறது. எங்களுடைய ஒம்காரீஸ்வரர் பயணம் மறக்க முடியாத அனுபவம். அங்கு எங்களை  வரவேற்று,  தனி வழியில் ஆலய சன்னதிக்கு அழைத்துச் சென்று தனி அறையில் பூஜைகளை செய்ய மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைவர் ஒருவர் அனைத்து ஏற்பாடுகளையும்  செய்து இருந்தார்.  எங்களுடன் வந்திருந்த இரண்டு ஜவான்கள் எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

 இந்த ஆலயம் சில காரணங்களினால் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

- இந்த மலையை சுற்றி உள்ள நதி ஓம் எனும் வடிவத்தில் உள்ளது
-இங்குதான் குரு கோவிந்தவல்லபா  தனது சீடரான சங்கர பகவத்பாதாவுக்கு (ஆதி சங்கரர்) சன்னியாச  தீக்ஷை தந்தார்.
-குரு கோவிந்தவல்லபா மற்றும் ஆதிசங்கரர் இருவருமே இங்குள்ள குகையில் தவம் இருந்துள்ளார்கள். அந்த குகை ஆலயத்தின் அடிவாரப் பகுதியில் உள்ளது. அந்த குகைக் குறித்த செய்தி  1978 அல்லது 79 ஆம் ஆண்டில்தான் தெரிய வந்ததான செய்தியும் உள்ளது.
- ஒருமுறை குரு கோவிந்தவல்லபா  இந்த மலையை சுற்றி ஓடிய நர்மதை  நதியின் அனைத்து நீரையும் தனது கமண்டலத்தில் அடைக்கி  வைத்தாராம்.

ஆதி சங்கரர் தவம் இருந்த குகைப் பகுதி 

இந்த மலையை சுற்றி உள்ள நர்மதை நதி ஓம் எனும் வடிவத்தில் உள்ளதினாலும் இதை ஓம்காரேஸ்வர்  என அழைப்பதான ஐதீகம் உள்ளது. இந்த உலகில் மொத்தம் 64 ஜ்யோதிர்லிங்கங்கள் உள்ளதாகவும், அவை பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கியமான ஜ்யோதிர் லிங்கம் தலைமை தாங்க பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்கள்  அமைந்தன  என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றேரானதே ஒம்காரேஸ்வரர் என்று நம்புகிறார்கள். இதை மாம்லேஸ்வர் என்றும் கூறுகிறார்கள்.

ஒருமுறை சிவனது தலைப் பகுதியையும், கால் பகுதியையும் காண்பதற்காக பிரும்மாவும் விஷ்ணுவும் சென்றபோது அவர்கள் கண்டு பிடிக்க முடியாத அளவில் சிவபெருமான் ஜ்யோதி ஸ்வரூபமாக மாறினாராம். அப்படி அவர்கள் இருவரும் சிவபெருமானின் முழு உருவையும் காணத் தேடி அலைந்தபோது அவர் பன்னிரண்டு இடங்களில் அவர்களுக்கு ஜ்யோதி ஸ்வரூபமாக காட்சி அளித்தார் என்றும் அந்த பன்னிரண்டு இடங்களே  பின்னர் பல்வேறு காரணங்களினால் ஜ்யோதிர்லிங்க பீடங்களாயின  என்றும்  சாஸ்திரங்களைக் நன்கு கற்றறிந்த சில வடநாட்டுப் பண்டிதர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

ஆலயத்தின் உள்ளே  நுழை வாயில் பகுதி 
 
சாதாரணமாகவே ஜ்யோதிர் லிங்கம் என்பதே மும்மூர்த்திகளின் ஸ்வரூபம் ஆகும் என்று கூறுவார்கள். ஜ்யோதிர்லிங்கம் என்பதைக்  குறித்து மகா பெரியவா என அன்புடனும் பெரும் மரியாதையுடன் போற்றி பல லட்ஷ மக்களால் உலகெங்கும் வணங்கப்பட்டு வரும் காஞ்சி மடத்தை சேர்ந்த பரமாச்சாரியாரும் ஒருமுறை இப்படி கூறினாராம். ''விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்… நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்… மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி என்பது மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவசொரூபம் மட்டுமல்ல… லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்.  நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ  ஜ்யோதிர்லிங்கமாக  கருதி  வழிபட்டிருக்கிறார்கள்''.

அதனால்தான் ஜ்யோதிர்லிங்கம் மேன்மையானது. அப்படிப்பட்ட ஜ்யோதிர்லிங்கம் உள்ள இடமான ஓம்காரேஸ்வரர் பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்க பீடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆலயம் உள்ள இடத்தின் மேன்மையைக்  குறித்த சில கதைகள் இங்கு கூறப்படுகின்றன.

ஒருமுறை நாரத முனிவர் விந்திய மலையிடம் சென்று  அந்த மலையிடம் மேரு மலையின் பெருமையை விவரிக்கலானார்.  அதைக் கேட்ட விந்திய மலைக்கு மேரு மலை மீது பொறாமை ஏற்பட்டது.  தானும் மேரு மலையைப் போலவே உயர்வடைய வேண்டும் என்று எண்ணி ஒம்காரீஸ்வரத்தில்  ஓம்கார யந்திரத்தில் மண்ணால் செய்த சிவலிங்கத்தை வைத்துப் பல ஆண்டுகள் விடாமல் தொடர்ந்து பூஜை செய்தது. சிவலிங்கத்தை படைத்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்தது.  விந்திய பர்வதத்தின் தவத்தைக்  மெச்சிய சிவபெருமான்  அதன் முன் ஜ்யோதி ஸ்வரூபமாக தோன்றி அது கேட்ட வரத்தை அளித்தார். அதன் பின்னர் அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம்  அவர் இங்கேயே தங்க வேண்டும். ஓம்கார யந்த்ர மூர்த்தியாய்  நர்மதை நதிக் கரையில் எழுந்தருள வேண்டும் என  வேண்டிக் கொண்டபடி  ஓம்கார யந்திர சிவலிங்கத்தை இரண்டாகப் பிளந்து ஒன்றை ஒம்காரேஸ்வரராகவும், இன்னொன்றை மம்லேஸ்வரர் எனவும் அமைத்து இரண்டிலும் இரு லிங்கங்களாக சிவபெருமான் பிரசன்னமானார். இரண்டு பாகங்களில் ஒன்றான ஒம்காரேஸ்வரத்தில் அவர் ஒம்காரேஸ்வரராக அமர்ந்தார். சிவபெருமானின் ஓம்காரேஸ்வரர் லிங்கம், மான்தாட்டா மலையில் அமைந்துள்ளது. அதனால்தான் ஓம்காரீஸ்வரர் ஆலயத்தின் வெளியில் உள்ள கடைகளில் களிமண்ணால் செய்த அரை அங்குலத்துக்கும் குறைவான உயர அளவில் குட்டிக் குட்டியாக சிவலிங்கங்களை செய்து அதில் ஒரு அரிசியைக் குத்தி வைத்து விற்பனை செய்கிறார்கள்.  அவற்றில் 108 அல்லது 1008 சிவலிங்கங்களை வாங்கிக் கொண்டு போய்  ஆலயத்தில் சிவபூஜை செய்தால் விந்திய மலைக்கு கிடைத்த அதே அளவிலான அருள் கிடைக்கும் என்கிறார்கள். அது மட்டும் அல்ல அங்கு வந்து களிமண்ணாலான சிவலிங்கங்களைக் கொண்டு  பூஜித்து தாங்கள் கைக் கொண்டு இருந்த சிவபெருமானின் விரத பூஜையை இப்படியாக முடித்தும் வைத்துக் கொள்கிறார்களாம்.


இன்னொரு கதையின்படி ராமபிரானின் சூரிய  வம்சத்தை சேர்ந்த மந்ததா எனும் ஒரு மன்னன் இங்கு வந்து சிவபெருமானை துதித்து தவம் இருக்க சிவபெருமானும் அவரது தவத்தை மெச்சி ஒம்காரேஸ்வரத்தில் ஜ்யோதிர்லிங்க வடிவமாக காட்சி தந்தாராம். அதனால்தான் சிவபெருமான் ஜ்யோதி வடிவில் காட்சி அளித்து அமர்ந்து கொண்ட இந்த ஆலயத்தை ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதுகிறார்களாம். ஆகவே இங்குள்ள மலையை மந்ததா மலை என்றும் கூறுகிறார்கள்.
.........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>