Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Sarangapani Temple

$
0
0
சாந்திப்பிரியா

கும்பகோணத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ சாரங்கபாணி ஆலயம். இதை சார்ரங்கபாணி ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சார்ரங்கபாணி என்பதே சரியான பெயர் என்பதின் காரணம் சார் என்றால் வில் என்று பொருள். இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளிடம் சங்கு மற்றும் சக்கரத்தைத் தவிர வில்லும் உள்ளதினால் இந்த ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சார்ரங்கபாணி ஆலயம் என ஆயிற்றாம். இந்த ஆலயம் திருப்பதி ஆலயத்துக்கு நிகரானது என்பார்கள். அதன் காரணம் திருப்பதி ஏழுமலையானின் திருமணத்துடன் ஒருவிதத்தில் சம்மந்தப்பட்டது இந்த ஆலயம்.

திருப்பதி வெங்கடசலபதி கதைக்கும் இந்த சாரங்கபாணி ஆலய கதைக்கும் என்ன சம்மந்தம் என்று யோசனை செய்யத் தோன்றுகிறது அல்லவா? திருப்பதி வெங்கடசலபதி லஷ்மியை பிரிந்த சோகத்தில் சில காலம் கும்பகோணத்தில் வந்து தங்கி இருந்ததான நம்பிக்கைக் கதை ஒன்று உள்ளது. அதனால் இங்கு வந்த அந்த நேரத்தில் இங்கு மகாவிஷ்ணு பிருகு முனிவரின் மகளாக இருந்த லஷ்மியை மணந்து  கொண்டதற்கான ஐதீகக் கதை உள்ளது.

இந்தப் படத்தை வரைந்து 
அனுப்பியவர் திரு திரு பட்டாபிராமன்
 அவருக்கு என் நன்றி 

ஒருமுறை பிருகு முனிவர் தேவலோகம் சென்றபோது, அங்கு லஷ்மி தேவி மகாவிஷ்ணுவின் கால்களைப் பிடித்து விட்டபடி அமர்ந்து இருந்தார். பிருகு முனிவர் வந்ததை மகாவிஷ்ணுவோ இல்லை லஷ்மி தேவியோ கவனிக்கவில்லை என்பதினால் கோபமுற்ற பிருகு முனிவர் மகாவிஷ்ணுவின் இதயத்தில் எட்டி உதைத்தார். ஆத்திரத்தில் தான் தவறு செய்து விட்டதை உணர்ந்த பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு வேண்டினார். அதன் பின் லட்சுமியிடம் தான் தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை தேவர்கள் அவரிடம் விட்டதினால் அங்கு வந்து கோபத்தில் செய்யக் கூடாததை செய்து விட்டதற்கு மன்னிப்புக் கேட்டப் பின் அதற்குப் பரிகாரமாக அவரே அவளுக்கு தந்தையாகி மகாவிஷ்ணுவை மீண்டும் அவளுக்கு மணமுடித்து வைப்பதாக உறுதி கூறினார். அதற்கேற்ப நடந்த நிகழ்ச்சிகளினால் பிருகு முனிவர் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து தவமிருந்தார். அப்போது அவருக்கு மகளாகப் பிறந்து இருந்த லட்சுமிதேவி ஒரு தாடகத்தில் இருந்த தாமரைப் பூவில் அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தார் பிருகு முனிவர். அவரை மணக்க வந்த விஷ்ணுவோ அங்கேயே பூமியில் ஒளிந்து  கோமளவல்லிக்கு விளையாட்டுக் காட்டியப் பின்னர் அவளை மணந்து கொண்டார். எப்போதுமே சங்கு சக்கரத்துடன் மட்டுமே காட்சி தரும் மகாவிஷ்ணு அப்போது அவர் ஒரு வில்லை ஏந்திக் கொண்டு வந்ததினால் அவருக்கு சார்ரங்கபாணி என்ற பெயர் ஏற்பட்டது. அதனால்தான் இந்த ஆலயமும் சார்ரங்கபாணி ஆலயம் என ஆயிற்று.


மகாவிஷ்ணு பாதாளத்தில் ஒளிந்து கொண்ட இடமே பாதாள ஸ்ரீனிவாசர் சன்னதி ஆயிற்று. இந்த ஆலயம் கோமளவல்லித் தாயாரின் பிறந்த வீடு என்பதினால் இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை தரிசனம் செய்தப் பின்னரே (மரியாதைத் தர ) பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பது விதி ஆயிற்று.

இந்த ஆலயம் திவ்ய தேச 108 ஆலயங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு இன்னொரு பெருமை உண்டு. நாலாயிர திவ்யப் பிரபந்தம் உருவாகக் காரணமாக இருந்துள்ளது இந்த ஆலயத்தின் பெருமாளின் லீலை . அதன் பின்னணிக் கதை இதுவாகும்.

ஒருமுறை நாதமுனி என்பவர் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஒரு பக்தர் இறைவனைக் குறித்து ஒரு பாடலைப் பாடிக் கொண்டு இருந்தார். அதன் பொருளைக் கேட்டு வியந்த நாதமுனி அந்த பாடல் எங்கிருந்து   கிடைத்தது என்று கேட்டார். ஒரு பாடலைப் பாடியவரோ  அது இன்னும் ஆயிரம் பாடல்களைக் கொண்டது என்றும் அதை தமக்கு நம்மாழ்வார் என்பவர் கற்றுக் கொடுத்ததாகக் கூறவும், அந்த ஆயிரம் பாடல்களையும் கூறுமாறு நாத முனி கேட்டார். ஆனால் அவை தனக்குத் தெரியாது எனக் கூறி விட்டார் அதைப் பாடியவர்.

அன்று இரவு நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார் திருநகருக்குச் சென்று, நம்மாழ்வரை சந்தித்துக் கேட்டால் மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே திருநகருக்குச் சென்று அவர் நம்மாழ்வாரை வணங்கினார். அவரிடம் தான் வந்ததற்கான காரணத்தைக் கூற ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி ஒன்றாகத் தொகுத்தார். அதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று ஆயிற்று . ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, ஆராவமுதாழ்வார் என்ற பெயரும் உண்டானது.


மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல இந்த ஆலயத்தில் சொர்கவாசல் என்பது கிடையாது. அதற்குக் காரணம் வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணு நேரடியாக இந்த ஆலயத்துக்கு வந்து லஷ்மி தேவியை திருமணம் செய்து கொண்டதினால் இந்த ஆலயமே சொர்கமாகும் என்பது ஐதீகம். மேலும் சயன கோலத்தில் உள்ள பெருமாள் தமது பக்தரான திருமழிசை ஆழ்வார் வந்து தம்மை வந்து  வணங்கியபோது சற்று எழுந்து அவரைப் பார்த்தார் என்றும், அதனால்தான் மற்ற சயன கோலத்தில் உள்ள சிலைகளில் சற்று மாறுபட்டு, இங்குள்ள சயனப் பெருமாள் தலையை சற்றே தூக்கிப் பார்ப்பது போல சிலை அமைந்து உள்ளது. ஏழு ஆழ்வார்களினால் மங்களாசாசனம் பாடப்பட்ட ஆலயம்  இது.


இங்குள்ள ஆலய சுவர்பலகை செய்தியின்படி, இந்த ஆலயத்தைக் கட்டிய பிரும்மச்சாரியான ஸ்ரீ லஷ்மி நாராயணஸ்வாமி  என்பவர் இறந்தப் பின் அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய சந்ததிகள் இல்லாததினால் பெருமாளே அவருக்கு மனித உருவில் வந்து ஈமக் கிரியைகள் செய்ததாக ஆலயத்தில் கதை காணப்படுகிறது.


Badrinath - Kedarnath Temples - 1

$
0
0
தற்போது உத்திராஞ்சலில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்கள் உள்ள பல இடங்கள் நிலச் சரிவாலும், பேய் மழையினாலும் சிதைந்த நிலைக்குப் போய் விட்டன. இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதி வழிபடும் பத்ரினாத் விஷ்ணு ஆலயம் மற்றும் கேதார்நாத் சிவன் ஆலயம் என்ற இரண்டுமே இன்று இடிபாடுகள் அடைந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு அங்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலைக்கு சென்று உள்ளது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும் என்றாலும் இந்த நேரத்தில் இந்த ஆலயங்களின் தல வரலாறு மற்றும் அவற்றின் மகிமைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கர்வால் எனும் மலைப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது பத்ரினாத் ஆலயம். மேலே உள்ள  மலை பிரதேசத்தில் உள்ள இரண்டு ஆலயங்களும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பத்ரிநாத் ஆலயத்தில் உள்ள சிலையை நிறுவியவர் ஆதி சங்கரர் என்றும், கேதார்நாத்தில் உள்ள சிவன் சிலை பாண்டவர்களால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டாலும்,திருமால் நர-நாராயணராக (அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக) இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர் லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தார் என்ற புராணகள் கதையும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களில் முதலில் பத்ரிநாத் மான்மியக்  கதையைப் படிக்கலாம்.

பத்ரிநாத் ஆலய மான்மியம்

பத்ரினாத் ஆலயம் குறித்த வரலாற்றுக் கதை ஒன்றின்படி ஒரு கட்டத்தில் புத்தமதம் தழைத்து இருந்தபோது, இங்கு வந்த புத்தர்கள் பத்ரிநாராயணர் சிலையை எடுத்து அருகில் இருந்த நாரதர் குளத்தில் வீசி எறிந்து விட்டார்கள் என்றும் ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருந்தது என வசிஷ்ட முனிவர் தனது மனைவியான அருந்ததியிடம் கூறியதாக ஒரு கதையும் உள்ளது. அந்தக் கதையின்படி விஷ்ணுவின் சிலையை புத்த மதத்தினர் நாரதர் குளத்தில் வீசி எறிந்ததும், பதைத்துப் போன நாரத முனிவர் விஷ்ணுவிடம் ஓடோடிச் சென்று நடந்ததைக் கூற, விஷ்ணுவும் சிரித்துக் கொண்டே தான் நீரில் மூழ்கி இருந்தாலும் பிரும்மாவினால் படைக்கப்பட்ட தன்னுடைய சிலையை யாராலும் அழிக்க முடியாது என்றும், சில காலம் பொறுத்து ஒரு சிவ பக்தர் அங்கு வந்து தன்னை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்வார் என்றும், அதற்குப் பிறகு அங்கு ஒரு ஆலயம் தமக்கு எழும்பும் என்றும் கூறினார்.

அதற்கு ஏற்றார் போலவே அந்த கட்டத்தில் கேரளா மானிலத்தில் ஆதி சங்கரர் பிறந்து இளமைப் பருவத்திலேயே துறவறம் ஏற்றுக் கொண்டார். அவர் தமது இறுதிக் கட்ட காலத்தில் (ஸ்ரீ சங்கரர் மிகக் குறைந்த வயதிலேயே முக்தி அடைந்தார். அவர் கேதார்நாத் ஆலயத்தை நிறுவியப் பின் மலை மீது ஏறி அப்படியே மறைந்து விட்டாராம்) தமது சீடர்கள் சிலருடன் அவர் வடநாட்டு யாத்திரையை மேற் கொண்டார். அந்த யாத்திரையின்போது பத்ரினாத்தில் நீரில் மூழ்கி இருந்த விஷ்ணுவின் சிலைக் குறித்து அவருக்கு தெரிய வந்தது. ஆகவே முதலில் நீரில் மூழ்கி அந்த சிலையை எடுக்க முயன்றவருக்கு வேறு எதோ சிலைக் கிடைத்தது.  அடுத்த முறையும் நீரில் முழுகி சிலையைத் தேட வேறு எதோ சிலையே கிடைக்க இம்முறை சங்கரர் 'பத்ரினாதா, உனக்கு என் மூலமாகவே சிலை அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் நீ எனக்கு கிடைப்பாய்' என வேண்டிக் கொண்டே நீரில் மூழ்கி விஷ்ணுவின் சிலையைக் கண்டெடுத்தார். அதுவே தற்போது ஆலயத்தில் உள்ள பத்ரினாதரின் சிலை என்கிறார்கள்.

அந்த சிலை சாலிக்ராம கல்லினால் ஆன தியான நிலையில் உள்ள சிலை என்பது விஷேஷம். அந்த ஆலயத்தின் அருகில் ஓடுவதே அலக்நந்தா எனும் நதியாகும். அதற்கும் சிறு கதை உள்ளது. பகீரதனின் தவத்தினால் பூமியை நோக்கி ஓடி வந்த கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதினால் கங்கையை தன் தலையில் முடிந்து வைத்துக் கொண்ட சிவபெருமானோ அதை பன்னிரண்டு கிளைகளாக பிரிந்து பூமியில் ஓடுமாறு செய்தார். அதில் ஒன்றுதான் அலக்நந்தா நதியும் ஆகும். கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் வந்து கலந்து பல்வேறு நதிகளை தம்முடன்  இணைத்துக் கொண்டு  ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.
 
முதலில் நதியில் கண்டெடுத்த விஷ்ணுவின் சாலிக்கிராமத்தினால் ஆன சிலையை ஆதி சங்கரர் தான் தவம் இருந்த இடத்தின் அருகில் இருந்த குகை ஒன்றில் பிரதிஷ்டை செய்து வைத்து இருந்தார். ஆனால் பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு அந்த பிரதேசத்தை ஆண்ட கர்வாலை சேர்ந்த மன்னர் ஒருவர் அந்த சிலையைக் கண்டு பிடித்து எடுத்து வந்து தற்போது ஆலயம் உள்ள இடத்தில் அதை வைத்து ஆலயத்தை அமைத்தார். ஆலயம் எழுந்த காலக் கட்டம் சரிவரத் தெரியவில்லை. அதைக் கட்டியவரும் யார் என்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது, அதன் மகிமையும் மிகப் பெரியது என்பது வசிஷ்ட முனிவர் தனது மனைவிக்கு கூறிய ஆலய மான்மியக் கதை மூலம் தெரிந்தது. அந்த ஆலய மான்மியம் என்ன?
.......தொடரும் 

Badrinath - Ketharnath Temples - 2

$
0
0

வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் '' தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும். அதைக் கேள் ''.

வசிஷ்டர் தன் மனைவி அருந்ததிக்கு  
பத்ரிநாத்தின் மகத்துவம் பற்றிக் கூறினார் 
முன் ஒரு காலத்தில் இந்த பூமியில் விஷ்ணுமனஸ் எனும் ஒரு ஏழை பிராமணன், சாஸ்திர சம்பிரதாயங்களைக் நன்கு கற்றறிந்திருந்தவர் வசித்து வந்தார்.  அவர் வைஷ்ணவ பக்தர்.  வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவரினால் பிட்சை எடுத்தே  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் மிகப் பெரிய வைஷ்ணவ பக்தர் என்பதினால் தனக்குப் பிறந்த மகனுடைய பெயரையும் விஷ்ணுரதி என வைத்திருந்தார். பிறந்த மகன் வளரத் துவங்கியதும், விஷ்ணுமனஸ் அவனுக்கு  விஷ்ணுவின் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும்  கற்றுக் கொடுத்து வளர்த்தார்.

தன்னைப் போலவே தன்  மகனும் வறுமையில் வாடிக் கொண்டு பிட்ஷை எடுத்தே வாழ்வதை விட பிற்காலத்தில் புரோகித்தியம் செய்து பிழைக்கலாமே என விரும்பினார்.  ஆனால் வயதுக்கு வந்த விஷ்ணுரதியோ  புரோகிதம் செய்வதில் நாட்டம் இன்றி   இருந்தது மட்டும் அல்லாமல் வேறு எதிலும் மனதை செலுத்தாமல் இருந்தார்.  தன்  தந்தையைப் போலவே பாடல்களைப் பாடிக் கொண்டே அனைவர் வீட்டிலும் சென்று பிட்ஷை எடுக்கலானார். இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த விஷ்ணுரதி பத்ரினாத்திற்கு வந்தார். அங்கும்  அதிபக்தி கொண்டு விஷ்ணு மீதான பாடல்களைப் பாடிக் கொண்டே  பிட்ஷை எடுத்து வந்தார்.  பத்ரினாத்தும் மிகப் பெரிய புண்ணிய பூமி.  விஷ்ணுவும், சிவபெருமானும் வசிக்கும் பூமி என்பதினால் தன் மீது அபார பக்தி கொண்டு பாடிக் கொண்டு இருந்த விஷ்ணுரதியை கண்டு மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணுவும்   சங்கு சக்கரங்களை தன் கையில் ஏந்திக் கொண்டு தன் மனைவியுடன்  ஒருநாள் விஷ்ணுரதிக்கு பிரதிஷ்டமாக தரிசனம் தந்து அவருக்கு  'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.


தன் வாழ்நாளில் அப்படி ஒரு நிலை வரும் என்பதை சற்றும் எதிர்பாராத விஷ்ணுரதியும் என்ன செய்வது எனத் தெரியாமல் தன்னை மறந்து நின்றிருந்தார். நிலை தடுமாறி விஷ்ணுவின் முகத்தையும் அவர் பாதங்களையும் பார்த்துக் கொண்டே அவர் மீதான துதிகளை இன்னும் அதிகமாக பாடத் துவங்க அதனால் அவர்  மீது இன்னும் அதிக மகிழ்ச்சி கொண்ட விஷ்ணுவும், அவர்  கேட்காமலேயே அவர்  பெயரை நாரதர் என மாற்றி அமைத்து, அவர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லக் கூடிய சக்தியையும், பரிபூரணமான யோக மனதையும் அளித்து அவரை ஆசிர்வதித்தார். அதைக் கேட்ட விஷ்ணுரதி ஆச்சர்யம் அடைந்தார். தனக்கு ஏன் நாரதர் என்ற பெயரை பெருமாள் சூட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அவர் கால்களில் விழுந்து வணங்கியப் பின் தனது சந்தேகத்தை அவரிடமே கேட்டார்.
 
அதற்கு விஷ்ணு பகவான் கூறினார் 'விஷ்ணுரதி, நீ பூர்வ ஜென்மத்தில் பத்ரினாத்தில் ஒரு பண்டிதராக இருந்தாய். அப்போது நான் இங்கு சிலை வடிவில் இருந்தபோது எனக்கு தினமும் கங்கை நீரை ஊற்றி வழிபட்டாய்.  பல ஆண்டுகளாக இப்படி பூஜை செய்து எனக்கு பிரியமானவனாக ஆகி இருந்த நேரத்தில் விஷ்ணு  பக்தனாக நீ   இருந்தாலும் சிவபெருமானின் மனைவியான பார்வதியின் தந்தை தக்ஷன் செய்த  யாகத்தில் கலந்து கொண்டு அந்த யாகத்தை நடத்தித் தருவதில் முக்கிய  பங்கை வகித்தாய். ஆனால் அதில் தக்ஷன் தனது மகளுடைய கணவரான சிவபெருமானை வேண்டும் என்றே அழைக்காமல் இருந்து அவரை அவமதித்தான். யாகம் நடந்து முடியும் நிலையில் அங்கு வந்த சிவபெருமானை தக்ஷன் அவமதிக்க அந்த கோபத்தினால்  யாகத்தை அழித்த சிவபெருமானின் சாபத்தினால் அந்த யாகத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டும் அல்ல, அதை நடத்தித் தந்த அனைவருக்கும் கூட பாவம் ஏற்பட்டது. அதனால்தான் நீ மீண்டும் பூலோகத்துக்கே  சென்று மனிதப் பிறவி எடுத்து வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு பிட்ஷை எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டது. 

உனக்குக்  கிடைத்த சாபம் நீ  வேண்டும் என்றே நீ  செய்த தவறினால் கிடைத்த சாபம் அல்ல. பொதுவாகவே கூறுவார்கள். நம்மை அறியாமலே தீயவர்களுடன்  நாம் சஹவாசம் வைத்தால் அவர்கள்  செய்யும் தவறுகளில் நாமும் பங்கு பெற்றவர்களாகி விடுவோம். ஏன் எனில் அவர்கள் செய்யும் தவறுகளை நாம்  தட்டிக் கேட்பது இல்லை. தீமை உள்ள இடத்தில் இருந்து விலகி நிற்பதே விவேகம் ஆகும். தீமை எனத் தெரிந்தும், நம்முடைய தற்காலிக  மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக   அந்த இடத்தில் நாம் இருப்பது அந்த தீமையில் பங்கு கொள்வதைப் போலவே அமைந்து விடும். அதனால்தான் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் தக்ஷன் செய்த யாகத்தில் நீ கலந்து கொண்டது உன்னை அறியாமல் நீ செய்த பிழை ஆகும். 
 
ஆனால் பார்வதி தேவி என்னுடைய சகோதரி என்பதினால் என்னுடைய பக்தர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு இருக்கக் கூடாது என எண்ணிய  சிவபெருமானும் கோபம் தணிந்ததும் உனக்கு என் மூலமே பத்ரிநாத்தில் சாப விமோசனம் கிடைக்கும் என உன்னை ஆசிர்வதித்தார். அதனால்தான் நீயும் இங்கு வந்தாய். பூர்வ ஜென்மத்தில் என்னுடைய பரம பக்தனாக நீ இருந்ததினால் இந்த ஜென்மத்திலும் அந்த பந்தம் தொடர என் மீது   உனக்கு  பக்தி தானாகவே ஏற்பட்டது.  நீயும் உன்னை அறியாமலேயே சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்து என்னை துதித்து வரத் துவங்கினாய்.

சாப விமோசனமும் அடைந்து மீண்டும் வைகுண்டத்திற்கு வரும் நிலைக்கு நீ  வந்து விட்டதினால்தான் இந்த புண்ணிய ஷேத்திரத்திற்கு வந்துள்ளாய்.   நான் உனக்கு பிரசன்னம் ஆகி உனக்கு வரம் கொடுத்தேன். எப்போதுமே தன் கையில் வீணையை ஏந்திக் கொண்டே என்னை துதித்துப் பாடும் நாரதரின் நிலையில் நீ இருந்ததினால் என் மீது துதியை பாடிக் கொண்டே அலைந்த உன் பெயரையும் நாரதர் என வைத்தேன். இந்த இடத்தில் நான் ஐம்பது ரூபங்களில் இருக்கிறேன். அவை அனைத்தையும் நீ வழிபாட்டு வந்தால் விரைவில் வைகுண்டப் பிராப்தி அடைவாய்'  என அவரை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

விஷ்ணுவை ஆராதித்து வழிபடும் அனைத்து பக்தர்களும் பத்ரினாத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் விஷ்ணுவை ஒரு முறை மட்டுமே வழிபட்டாலும் கூட வைகுண்ட பிராப்தி கிடைக்கும் என்பதை விளக்கும் இந்தக் கதை மூலம் பத்ரினாத் எனும் புண்ணிய பூமியின் மகாத்மியம் உனக்குப் புரியும் என்று வசிஷ்டர்  கூறியப் பின்னர் மேலும் இன்னொரு கதையைக் கூறத் துவங்கினார்.
........தொடரும்

Badrinath - Ketharnath Temples - 3

$
0
0

வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால் நல்லவன் யாருக்கும் தீங்கு இழைக்காதவர் என்ற நற்பெயருடன் இருந்து வந்தார். அவனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு எதுவும் இல்லை என்பதினால் மனம் புழுகினான். அவனுடைய மனைவியும் வாழ்கையை வெறுத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்து தமது சந்தானங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டு  துறவறம் போய்  விடலாம் என முடிவு செய்தார்கள்.

ஆகவே ஒருநாள் அவர்கள் தமது வீட்டில் பெரிய பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் அந்த ஊரில் இருந்த பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து போஜனம் செய்விக்கச் சொன்னார்கள். அதன் பின் கணவனும் மனைவியும் சேர்ந்து அனைவரிடமும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுக்  கொடுத்து அவற்றை விற்றும், வேறு ஏற்பாடு செய்து கொண்டும் சமமாக பங்கு செய்து கொள்ளுமாறு கூறினார்கள். திடீர் என அவர்கள் செய்ய முன்வந்த காரியத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பண்டிதர்கள் அதற்கான காரணத்தை அவர்களிடம்  கேட்டபோது அவர்களும் தமக்கு சந்ததியே இல்லை எனும்போது யாருக்காக அந்த சொத்துக்களையும் பூதம் காத்தப் புதையலைப்  போல வைத்துக் கொண்டு வாழ்வது என்று மனம் வேதனை அடைந்து அந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார்கள்.


ஆனால் அந்தப் பண்டிதர்கள் அவர்களுடைய செல்வத்துக்கு ஆசைப்படாமல், அவர்களது நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்து போய் அவர்களிடம் தாம் அவர்களுக்காக புத்திரகாமேட்ஷி  யாகம் செய்து தருவதாகவும்,  அதற்கான தானத்தை மட்டுமே பெற்றுக் கொள்வோம்  என அந்த தம்பதியினருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்கு மகத்பேறு கிடைக்க படைக்கும் கடவுளான பிரும்மாவை வேண்டிக் கொண்டு புத்திரகாமேட்ஷி யாகம் செய்து வைத்தார்கள்.  அந்த யாகமும் நான் தசரத மன்னனுக்கு ராமாயணக் காலத்தில் செய்த புத்திரகாமேட்ஷி யாகம்  போலவே நன்கு நடந்து முடிந்தது.  என் மீது வைத்திருந்த மரியாதையினால், நான் செய்த யாகம் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து இருந்ததினால் யாக முடிவில் அந்த பண்டிதர்கள் எனக்கும் மானசீகமாக அர்கியம் அளித்தார்கள். பிரும்மாவும் அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு மகன் பிறக்க அருள் புரிந்தார். அந்த யாகம் முடிந்ததும் தமக்கு எப்படிப்பட்ட சந்தானம் கிடைக்கும் என அந்த தம்பதியினர் பண்டிதர்களிடம் கேட்டார்கள்.

அந்தப் பண்டிதர்களும் காண்டம் போட்டுப் பார்த்தப் பின் ஒரு அதிர்ச்சியான தகவலை அந்த தம்பதியினருக்கு கூறினார்கள். அந்த தம்பதியினருக்கு பிறக்க உள்ளது ஒரு ஆண்  மகவே என்றும், ஆனால் அந்தப் பிள்ளை அவர்களைப் போல சாத்வீகமாக இல்லாமல் கொடும் தொழில் புரிந்து கொண்டு, குடும்ப கௌரவத்தை குலைப்பவனாகவே  இருப்பான் என்று கூறியவுடன் அந்த தம்பதியினர் அதிர்ந்து போனார்கள். ஆனால் அதில் ஒரு ஆறுதலான விஷயம் என்ன என்றால் அப்படி தறுதலையாக  இருக்கும் பிள்ளையை இருபது வயதில் பத்ரினாத்திற்கு  அழைத்துச் சென்று அங்குள்ள பத்ரினாதரை வழிபட்டால் அவன் மீண்டும் நல்ல வழியில் செல்வான் எனக் கூறினார்கள். அவர்களுக்கு நிறைய தானம் கொடுத்து அவர்களை அனுப்பினார்கள் .

காலம் ஓடியது. அந்த தம்பதியினருக்கு அழகிய  குழந்தை பிறந்து வளர்ந்தது. அந்த மகன் பிரும்மாவை வேண்டிக் கொண்டு யாகம் செய்ததினால் பிறந்தக் குழந்தை என்பதினால் அவனுக்கு பிரும்மதத்தர்  என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். மெல்ல மெல்ல வளரத் துவங்கிய குழந்தையும் நல்ல வழியிலேயே சென்று கொண்டு இருந்தது. வயதுக்கு வந்ததும் பிரும்மதத்தரும் தனது தந்தையைப் போலவே வியாபாரம் செய்யத் துவங்கி பெரும் பொருள் ஈட்டினார். ஆனால் திடீர் என அவருக்கு உலக இன்பங்களில் நாட்டம் அதிகரித்தது. பெண்கள் விஷயத்தில் தன்னை இழந்து, அவர்களிடம் ஏமார்ந்து போய்  தான் சம்பாதித்த அத்தனை  பொருளையும் இழந்தார். கையில் பணம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டார். அப்போது ஒருமுறை காட்டில் சென்று கொண்டு இருந்த யாத்ரீகர் ஒருவரை  மரத்தின் மீது ஒளிந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்று விட்டு பொருட்களை திருடியபோது அவர் ஒரு பிராமணப் பண்டிதர் எனத் தெரிய வந்தது.


அது அவர் மனதை பெரிய அளவில் பாதித்தது. குற்ற உணர்வு அவரை வாட்டியது. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பிராமணர் குணத்தைப் போலவே குணம் கொண்டிருந்த வைசியர் அல்லவா? ஆகவே தான் கொள்ளை அட்சித்தப் பொருட்களை அந்த இறந்து போன பிராமணர் வீட்டிலேயே கொண்டு போய் தந்து விட்டு அவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு  அவர்களிடம்  மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பின்னர் தனது வீட்டிற்குச் சென்று தனது தந்தையின் கால்களில் விழுந்து அழுத பின் நடந்த அனைத்தையும் கூறினார். அவர் தந்தையும் அதைக் கேட்டு வருத்தம் அடைந்தாலும் ஒரு பிராமணரைக் கொன்று விட்ட பாவத்தினால் ஏற்பட்டு விட்ட பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொள்வது தனது மகனுக்கு அத்தியாவசமானது என்பதை உணர்ந்து கொண்டார். நடந்ததை நினைத்து கவலைப்படுவதை விட அதை விலக்கிக்  கொள்ள உடனடியாக இமயமலை சாரலில் உள்ள பத்ரினாத்திற்குச்  சென்று  பத்ரினாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரைக் கூறினார். 
பிரும்மதத்தரும் தனது தந்தையின் அறிவுரைப்படி உடனடியாக பத்ரினாத்திற்கு கிளம்பிச் சென்றார். வழி நெடுக இருந்த அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய  பின் பத்ரினாத்தரை வணங்கி பூஜித்து சில காலம் அந்த ஆலயத்திலேயே தங்கி இருந்து அங்கு ஆலயத்திற்கு பணிவிடைகளை செய்து வந்தார். அவர் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த பத்ரினாதரும் அவர் கனவில் தோன்றி, அவர் செய்த பிழையை தான்  மன்னித்து விட்டதினால் ஊருக்கு கிளம்பிச் சென்று அங்கு தமது  நாம பஜனையை செய்து கொண்டு இருக்குமாறும், அவருக்கு மோட்ஷம் கிடைக்கும் என்றும் கூறினார். மறுநாள் காலை பிரும்மதத்தர் ஆலயத்துக்குச் சென்று பத்ரினாதரை வணங்கி விட்டு ஊருக்குக் கிளம்பச் செல்லத் துவங்கியபோது தான் கொன்று விட்ட அதே பிராமணரை அங்கு கண்டு வியந்து அவரை நோக்கி ஓடினார். அருகில் சென்றதும்தான் அதுவும் மாயையே என்றும், பத்ரி நாராயணரே தன்னைத் திருத்த அப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளார் என்பதும் புரிந்தது. அதன் பின் பல காலம் வாழ்ந்து வந்த பிரும்மத்தரும் மோட்ஷத்தை அடைந்தார்' என்று அந்தத் தலத்தின் மகிமைக் குறித்து  வசிஷ்டர் அருந்ததிக்குக் கூறினார். 
............தொடரும்

Badrinath - Ketharnath Temples - 4

$
0
0
இந்த பத்ரினாத்  தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும்  உண்டு.  அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து  விட்டார்கள்.  அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார்.  அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார்.

ஜனமேஜெயன் அடிக்கடி யாகங்கள் மற்றும் வேள்விகளை செய்வது உண்டு. இந்தப் பழக்கம் அந்த கால ராஜாக்களுக்கு நிறையவே இருந்தது. இப்படி இருந்த நிலையில் ஒருமுறை ஜனமேஜயன் குருக்ஷேத்திரத்தில்  ஒரு பெரிய யாகத்தை  நடத்திக் கொண்டு இருக்கையில்  அங்கு ஒரு நாய்க்குட்டி வந்து விட அதைக் கண்டு கோபமுற்ற அவரது சகோதரர்கள் அதை அடித்து காயப்படுத்தி விரட்டினார்கள். வந்திருந்ததோ ஒரு  தெய்வீக பெண்  நாய். ஒரு சாபத்தின் காரணமாகவே அது பூமியிலே பிறந்து இருந்தது. அந்த தெய்வீகத் தன்மையின் காரணமாகவே அதுவும் யாகத்தினால் ஈர்க்கப்பட்டு யாகம் நடந்த இடத்துக்கு வந்து நின்றிருந்தது. அது எந்த விதத்திலும் யாகத்தின் புனிதத் தன்மை குறையும் வகையில் நடந்து கொள்ளவில்லை. தூரத்தில் நின்றிருந்தே யாகத்தை நோக்கியவாறு  இருந்தது.


ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாத ஜனமேஜயனின் சகோதரர்கள் யாகம் நடக்கும் இடத்தில் ஒரு நாய் நுழைவதா என சினம் கொண்டு அதை அடித்து விரட்டினார்கள். இதில் வேதனை என்ன என்றால் நடந்த  நிகழ்ச்சி எதுவுமே ஜனமேஜயனுக்குத் தெரியாது என்றாலும் ஒரு யாகம் நடக்கும்போது, அந்த யாகத்தில் பங்கு பெரும் குடும்பத்தினர் அனைவருமே அதன் தீய மற்றும் நல்ல விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது நியதி.  ஆகவே எக் குற்றமும் செய்யாத தெய்வீக பெண்ணான நாய் குட்டியை அடித்து விரட்டியது ஜனமேஜயனுக்குத் தெரியாமல் அவனது சகோதரர்களால் நடந்து இருந்தாலும், நடந்த நிகழ்ச்சி அவன் யாகம் செய்த  பூமியில் அவன் இருந்தபோதே நடந்ததினால் அவனை அறியாமலேயே அவனுக்கு ஒரு பெண்ணாலேயே தீமை ஏற்படும், வாழ்வில் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற சாபம் ஏற்பட்டது. 

ஆனால் அது குறித்து ஜனமேஜயன் அதிகம் கவலைக் கொள்ளவில்லை என்றாலும் அதற்குப் பரிகாரமாக தான தர்மங்களை செய்தும், புனித யாத்திரைகளை மேற்கொண்டும் பரிகாரங்களை செய்து கொண்டு இருக்கையிலேயே அடுத்து சர்ப்ப நாச யாகத்தை நடத்தி இன்னொரு தவறை செய்தார்.  ஒன்றன் பின் ஒன்றாக நடந்து முடிந்த நிகழ்ச்சிகள்  ஜனமேஜயனின் மனதை பெரிதும் பாதித்தது.  தவறான முடிவில் எடுக்கப்பட்டு செய்த சர்ப்ப நாச யாகமும் அதன் விளைவால் அவருக்கு ஏற்பட்ட சாபமும் கூட ஒரு தெய்வீக பெண் நாயை காயப்படுத்தியதினால் விளைந்த கேடோ என அஞ்சினார்.  ஏற்கனவே அடிபட்ட பெண் நாயின் தாய் கொடுத்த சாபத்தினால் அவனது ஆன்மீக பலமும்  குறைந்திருந்தது.  
ஆகவே மனம் வெதும்பி இருந்த ஜனமேஜயனும் சர்ப்ப நாச யாகம் நடந்து முடிந்ததும் புரோகிதர்களை அழைத்து தான் என்ன பரிகாரம் செய்தால் அடுத்தடுத்து  செய்யும் தவறினால் ஏற்படும் துயரங்கள் விலகும் என்று கேட்டார். அவர்களும் அது குறித்து வியாச முனிவரிடம் சென்று ஆலோசனைக் கேட்குமாறு கூற  வியாச முனிவரிடம் சென்றார். அவரிடம் தனது மனத் துயரத்தைக் கூறினார்.

வியாச முனிவரோ  தன்னிடம் வந்த ஜனமேஜயனை பார்த்து சிரித்தபடிக் கூறினார்  'ஜனமேஜயா, நடக்க இருப்பதை  அதாவது  நம் விதியை சந்தித்தே ஆக வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்போதுதான் இந்த ஜென்மத்திலேயே நம் பாவங்கள் அகன்று அடுத்த ஜென்மத்தில் நம்மை அந்த சாபங்கள் நம்மைத் தொடராது இருக்கும். உன் சகோதரர்கள் செய்த பாவத்திற்கு நீ அனுபவிக்க வேண்டி  உள்ளது என்பது  உன் விதி. அதுவே இன்னமும் தொடர்கிறது.  உனக்கு விரைவில் இன்னொரு தோஷம் ஒன்று பிடிக்க உள்ளது. எச்சரிக்கையாக இரு. அதன் பின் உன் துயரம் நீங்கத் துவங்கும்' என்று கூற  'இதென்ன கூத்து, ஒன்று மாற்றி ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே உள்ளதே' எனக் கலங்கிய ஜனமேஜயன் அதிர்ந்து போனார்.  வியாசர் அப்படி என்ன கூறினார் ?
.........தொடரும் 

Badrinath - Ketharnath Temples - 5

$
0
0
'ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?' என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் 'ஜனமேஜயா உன் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நீ பெற்று உள்ள சாபங்கள்தான். உன்னால் அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் நீ அழித்த சர்பங்களில் மகாவிஷ்ணுவிற்கு படுக்கையாக உள்ள ஆதிசேஷனின் வம்சாவளியினரும் அடக்கம். ஆகவே மகாவிஷ்ணுவின் சாபமும் உனக்கு உள்ளது. அது போலவே உன் சந்ததியினரால் விரட்டி அடிக்கப்பட்டு காயமுற்ற நாயும் பூர்வ ஜென்மத்தில் மஹா விஷ்ணுவின் உண்மையான பக்தையாக இருந்து சில காரணங்களினால் நாயாகப் பிறந்து இருந்தது.  விஷ்ணுவின் பரம பக்தையான அதன் தாய் கொடுத்த சாபமும் சேர்ந்து உள்ளதினால் உனக்கு சாப விமோசனமும் மகாவிஷ்ணுவின் அவதாரமான பத்ரினாதர் மூலமே கிடைக்கும் என்பது விதியாகும். ஆகவே நீ எச்சரிக்கையாக இருந்து பிராமணரைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை ஒரு பெண்ணால் அடையாமல் இருக்க முடியுமா என்று முயன்று பார். ஆனால் அது மிகவும் கடினம். நீ ஒரு காட்டுக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணின் மோகத்தில் வீழ்ந்து பதினெட்டு பிராமணர்களைக் கொன்று பிரும்மஹத்தி தோஷத்தைப் பெற உள்ளாய் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அந்த தோஷம் வராமல் இருக்க மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.  அப்படி மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு   பெண் வயப்படாமல் இருந்தால் மட்டுமே உனக்கு வரவுள்ள தோஷம் களைய வாய்ப்பு உண்டு' என்று கூறி விட்டு தான் மட்டும் பத்ரினாத்துக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.

விதி யாரை விட்டது? வியாசர் கிளம்பிச் சென்றதும் பலவற்றையும் நன்கு யோசனை செய்த ஜனமேஜயன் அங்கு இருந்தால்தானே தனக்கு தோஷம் வரும். ஆகவே தானும் பத்ரினாத்துக்குச் கிளம்பிச் சென்று அந்த தோஷ காலம் முடியும் வரை மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு அங்கு இருந்து விட்டால் அந்த தோஷம் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாமே என எண்ணிக் கொண்டு யாத்திரைக்கு செல்ல தயார் செய்து கொள்ளத் துவங்கினார். ஆனால் மகாவிஷ்ணுவின் உண்மையான பக்தர்களின் மனத்தைக் காயப்படுத்திய நிகழ்ச்சிகளினால் ஜனமேஜயனுக்கு கிடைத்த சாபங்கள் நிறைவேறவில்லை என்றால் விஷ்ணுவின் சக்திக்கு என்ன அர்த்தம் ?

யாத்திரைக்கு செல்லக் கிளம்பிய ஜனமேஜயன் நல்ல குதிரையை தயார் செய்து வைக்குமாறு கூறினார். அதுவே அவருக்கு தோஷம் துவங்க விதி நகர்த்திய முதல் காயாக அமைந்தது.  அன்று காலையில்தான் அந்த ஊருக்கு சிந்து நாட்டில் இருந்து குதிரைகளை விற்கும் வியாபாரி ஒருவன் விற்பனை செய்வதற்காக  சில  குதிரைகளை கொண்டு வந்து இருந்தான்.  அவன் கொண்டு வந்திருந்த குதிரைகள் வெகு வேகமாய் ஓடுபவை.  காண்பதற்கே கவர்ச்சியாக இருந்தன. அதனால் அந்த குதிரைகளை முதலில் அரசருக்கு விற்கலாம் என எண்ணிக் கொண்டு அரண்மனைக்கு வந்தான் அந்த வியாபாரி. அவன் கொண்டு வந்திருந்த குதிரைகளில் ஒன்று மன்னனின் மனதுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆகவே அந்த குதிரையில் ஏறிக் கொண்டு யாத்திரைக்குச் செல்ல முடிவு செய்து ஜனமேஜயனும் அதை வாங்கி விட்டார்.

இரண்டொரு நாட்கள் அதன் மீது ஏறி அதை தன் விருப்பம் போல நடக்க பழக்கி  வைத்துக் கொள்ளலாம் என எண்ணிய மன்னன் அன்று மாலை அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு சவாரி செய்யத் துவங்க அந்த குதிரையும் அங்கும் இங்கும் சுற்றி வளைந்து ஓடிச் சென்று மன்னன் யோசனை செய்யும் முன்னரே அரண்மனையை விட்டு வெளியில் இருந்த காட்டுக்குள் புயலாக ஓடியது. அதை மன்னனும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுக் காட்டில் சென்று நின்ற குதிரை மீது இருந்து இறங்கிய மன்னன் சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கு செல்லக் கூடாது என எண்ணினோமோ அங்கேயே வந்து விட்டோமே என அஞ்சியவர் நின்றிருந்தபோதே அழகிய மங்கை ஒருவள்  சற்று தொலைவில் ஒரு பெரிய மரத்தின் பின்புறத்தில் இருந்து வெளியில் வந்து ஒய்யாரமாக நிற்பதைக்  கண்டார்.  அதே சமயம் ஜெயமேஜயனை பார்த்து விட்ட அந்த மங்கையும்  இங்கு வந்துள்ளவர்  யார்  என்பதைப் போல அவரை வியந்து நோக்கினாள் .


ஜனமேஜயனின் மனம் சற்று தடுமாறியது. அழகான மங்கை. அற்புதமான உடல் அமைப்பு. அங்கங்கள் அனைத்தும் தெரிய நழுவிய ஆடைகளை கட்டி இருந்தவளைக் கண்டதும் அடுத்த சில நிமிடங்களிலேயே தலைக்கு மீறிய காமம் மனதில் சுழல தன்னை மறந்து ஓடிச் சென்று அவளை தழுவிக் கொண்டு நின்றார்.  ஆனால் அவளும் அவர் அணைப்பை விரும்பியது போலவே காட்டிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்து விட்டு தான் அந்த கானகத்தில் பதினெட்டு கணவன்களுக்கு மனைவியாக வாழ்ந்து வருபவள் என்றும், அவர்கள் அவரைப் பார்த்து விட்டால் அவளுக்கு ஆபத்தாகி விடும் எனவும் பயந்து கொண்டு கூற, ஜனமேஜயனும் அவர்களை எண்ணி அஞ்ச வேண்டாம் என்றும், மன்னனான தான் அவர்களை பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு அவளுடன் அந்த பதினெட்டு ஆண்களும் தங்கி இருந்த பர்ணசாலைக்குச் சென்று உறங்கிக் கொண்டு  இருந்த அவர்களை வெட்டி வீழ்த்தினார்.  அதன் பின்னர்தான் அவருக்கு புரிந்தது தான் வெட்டிக் கொன்ற அனைவருமே அந்தணர்கள்   என்று!

எது நடக்கக் கூடாதது என கவனமாக இருக்க எண்ணினோமே அதுவே நடந்து விட்டதே என மனதார வருந்திக்  கொண்டு தன்னை மயக்கிய அந்தப் பெண்ணை தண்டிக்கத் திரும்பியவருக்கு முன்னாலேயே அந்தப் பெண் ஆகாய மார்கமாக பறந்துச் சென்று மறைந்து விட்டதைக் கண்டார். மாயையில் சிக்கி அநியாயமாக உறங்கிக் கொண்டு இருந்த அந்தணர்களைக்  கவனிக்காமல் கொன்று விட்டோமே என பிரும்மஹத்தி தோஷத்தை பெற்று விட்ட  ஜனமேஜயன் குதிரை மீது ஏறிக் கொண்டு  வருத்தத்துடன்  அரண்மனைக்கு திரும்பினார். 

மறுநாளே பரிவாரங்களுடன் கிளம்பி பத்ரி நாராயனை தரிசிக்க பத்ரிக்குச் சென்றவர் அங்கு  வியாச முனிவரை வேண்டி  தவம்  இருக்க  அவரும் ஜனமேஜயனுக்கு முன்னால்  வந்து  நின்று பலவிதமான உபதேசங்களை செய்தும், பத்ரி ஸ்தல புராணத்தையும் போதித்தார். ஜனமேஜயனும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து வியாச முனிவர் கூறிய அறிவுரையின்படி  பத்ரினாதரை வழிபட்டு தமக்கு ஏற்பட்டு இருந்த அனைத்து சாபங்களையும் விலக்கிக்  கொண்டார். பத்ரினாதரை வணங்கி வேண்டியவருடைய வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு காட்சி தந்த விஷ்ணு பெருமாள் ஜனமேஜயரின் அனைத்து சாபங்களையும் விலக்கி அவருக்கு மீண்டும் ஆன்மீக பலத்தை கொடுத்து அருள்  புரிய தனது ராஜ்யத்துக்கு திரும்பிய ஜனமேஜயன் நல்ல ஆட்சி புரிந்து வந்தார்.  இப்படியாக பத்ரினாதரை வணங்கி வேண்டுபவர்களுடைய அனைத்து  துயரங்களும், துன்பங்களும் விலகும் என்பது ஐதீகமாயிற்று. 

...........தொடரும் 

Badrinath - Ketharnath Temples - 6

$
0
0
இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம்  அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார்.
 
பத்ரினாத்  ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள இரண்டு பர்வதங்களில் நர மற்றும் நாராயணன் என்ற இரண்டு முனிவர்கள் தவம் இருந்தார்கள் அவர்கள் வேறு யாரும் அல்ல கிருஷ்ணரின் இரண்டு அவதாரங்களே. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணராக அவதரித்தவரும் அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட அர்ஜுனனுமே அவர்கள் ஆகும். அந்த இருவரும் தவம் இருந்த அந்த இந்த இரண்டு மலைகளையும் நர நாராயண மலையென்று அழைக்கின்றனர். நரநாராயணர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார். அவரே விஷ்ணு பகவான்.

அவர் பத்ரினாத்தின் மலையின் அடிவாரத்தில் வெகு காலமாக தவத்தில் இருந்தபோது அவரை வெயிலும் மழையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தலை மீது ஒரு குடையைப்  பிடித்துக்  கொண்டு பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொரு யுகத்திலும்  நல்லவற்றைக் காக்க தாம் அவதாரம் எடுப்பேன் என பெருமாள் கிருஷ்ணாவதாரத்தில் கூறி இருந்தார்.  ஆகவே தானே கிருஷ்ணராகவும் அர்ஜுனனாகவும் ஒரே நேரத்தில் இரு அவதாரங்களை எடுத்த மகாவிஷ்ணு மகாபாரத யுத்தத்தின் பேரழிவுகளை கண்டப் பிறகு இந்த உலகில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணி இங்கு வந்து தவம் இருந்தார். அந்த  இடத்தை சுற்றி பத்ரி மரங்கள் வனம் போல வளர்ந்து இருந்ததினால் அந்த இடத்துக்கு பத்ரினாத் எனும் பெயர் வந்தது என்றும், அங்கு வாசம் செய்யும் பெருமாளை பத்ரி எனவும் அழைப்பதாக ஐதீகம் உள்ளது.  விஷ்ணு பெருமான் தவக் கோலத்தில் அமர்ந்து இருந்ததினால்தான் இந்த ஆலய பிரதான சன்னதியில் அவர் தியான  நிலையில் காட்சி தருகிறார்'.

மகாவிஷ்ணு  அங்கு தவத்தில் இருந்தபோது அங்கு வந்த பிரும்மா மற்றும் பிற முனிவர்கள் முன் தனது  சுய உருவில்  தோன்றிய மகாவிஷ்ணு  'தான் நாரத குண்டத்தில் மறைந்து இருக்க உள்ளதாகவும்,  மறைந்து இருக்கும் தம்மை பல காலத்துக்குப் பிறகு  அனைவரும் போற்றி வணங்கும் தூய்மையான ஆன்மீக மனிதர் வந்து கண்டெடுத்து ஆலயம் அமைப்பார் என்றும், கலி யுகத்தில் பலவிதமான தீமைகளை செய்யும் மக்களின் தீய மன நிலையை அழித்து அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்வேன் என்றும், ஆனால் அதனை அடைய அவர்கள் தம்மை தரிசிக்க இந்த புண்ணியத் தலத்துக்கு  மிகுந்த சிரமப்பட்டே வர வேண்டி இருக்கும்' என்றும் கூறினார். அதற்கு முன்னோடியாக   பிரும்மா தன்னுடைய சிலையை வடித்து அங்கே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கூறினார்'. இப்படியாக வசிஷ்ட முனிவர் தனது மனைவியான அருந்ததிக்குக் கூறிய பின் அவளும் அந்தக் கதையைக் கேட்டு மகிழ்வுற்று அவரை விழுந்து  வணங்கினாள் .    


அப்படி பிரும்மா வடிவமைத்த சிலையே பின்னர் ஆதி சங்கரரால் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று புராணக் கதை உள்ளது. விஷ்ணுவின் அறிவுரையின்படி பிரும்மாவும் விஷ்ணுவின் சிலையை பத்ரினாத்திலேயே படைத்து பிரதிஷ்டை செய்தார். ஆனால் பின்னர் புத்தமதம் தழைத்தபோது அந்த சிலையை பௌத்தர்கள் எடுத்து நாரத குண்டத்தில் தூக்கி எரிந்து விட்டார்கள். அதையே பின்னர் ஸ்ரீ ஆதி சங்கரர் வெளியில் எடுத்து ஆலயத்தை நிறுவினார்.
 
 பத்ரினாத் ஆலயத்தின் உள்ளே ஆதி சங்கர மடமும் உள்ளது. மடத்தின் இடப்புறத்தில் உள்ள சிறிய குகையில்தான் ஆலயத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ஆதி சங்கரர் தியானம் செய்ததாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். அதே மடத்தில் காணப்படும் கற்பக விருட்ச மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு ஸ்ரீ ஆதி சங்கரர் ஞானம் பெற்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள் .
 
ஸ்கந்த புராணத்தின்படி  இந்த உலகில் எத்தனையோ புண்ணிய பூமிகள் இருந்தாலும், பத்ரினாத் ஆலய தலத்தைப் போன்ற புண்ணிய பூமி கிடையாது. ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ ஆதிசங்கரரால் கண்டெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட  பத்ரினாத்   ஆலயம் பலமுறை பல்வேறு ஆட்சியாளர்கள் காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளன. வருடத்துக்கு ஆறு மாதங்கள் அந்த பகுதி முழுவதுமே பணியால் மூடப்பட்டு இருக்கும் என்பதினால் வருடத்துக்கு ஆறு மாதம் மட்டுமே  இந்த ஆலயம் திறந்து இருக்கும். அதற்கும் காரணம் உண்டு.

இமயமலையில் உள்ள இந்த ஆலயமே வைகுண்டத்தின் நுழைவாயிலாக உள்ளதினால் பூமியில் உள்ள பக்தர்கள் தொடர்ந்து  இங்கு வந்து  பத்ரினாதரை  தரிசித்தபடியே இருப்பார்கள். அதனால் தேவலோகத்தில் உள்ளவர்களினால் அவர்களது  தேவரை வணங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவேதான் வருடத்துக்கு ஆறு மாதங்கள் மனிதர்கள் பத்ரிக்குச் சென்று  பத்ரினாதரை வணங்கும் வகையிலும், மனிதர்களே செல்ல இயலாத நிலையில் ஆறு மாதங்களில் இயற்கையாக அங்கு செல்லும் அனைத்துப் பாதையிலும் பனி மழையைப் பொழிய வைத்து மனிதர்களினால் செல்ல முடியாத அந்த ஆறு மாத காலத்தில் தேவர்கள் அங்கு வந்து பத்ரினாதரை வணங்குகிறார்கள் என்பது ஐதீகம்.  அது மட்டும் அல்ல இன்னொரு கதையின்படி அந்த ஆறு மாத காலத்தில் நாரதர்  ஆலயத்துக்கு  வந்து பகவானை வேண்டித் தவம் இருப்பதாகவும், அவரது  தவத்துக்கு  இடையூறு  இருக்கக் கூடாது  என்பதினால் அந்த ஆறு மாத காலமும்  ஆலயம் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் புராணக் கதை ஒன்று உள்ளது.


ஆலயத்தின் அருகில்  உள்ள  கங்கை கரையில் பிரும்ம கபாலம் என்ற  பாறை உள்ளது. அங்கு இறந்து போன பித்ருக்களுக்கு இங்கு, பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் ஏழேழு தலைமுறை அவர்களது ஆத்மாவும் மோக்ஷமடைவதாகவும் நம்பிக்கை உள்ளது. அது மட்டும் அல்ல பத்ரிநாத்தில் ஒரே ஒரு முறை பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் அதன் பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யத் தேவை இல்லை என்பது  இந்த தலத்தின்  இன்னொரு விஷேஷம் ஆகும்.    ஆலயத்தின் உள்ளே இரண்டு அடி உயரத்தில் பத்ரினாராயனராக தியான நிலையில் காட்சி தர அவரது வலது பக்கத்தில் நின்றுள்ள நிலையில் நரநாராயணர்கள் இருக்க, பெருமாள் முன்னிலையில் நாரதர் அமர்ந்திருக்க, இடது புறத்தில் குபேரனும் விநாயகரும் காட்சி தர மேல்புறத்தில் சந்திரனும் சூரியனும் உள்ளார்கள். ஆலயத்தில் ஸ்ரீ மகாலஷ்மி தாயாரின்  சன்னதியும் இந்த ஆலயம் ஸ்தாபிக்க காரணமான ஸ்ரீ ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளன.


அலகநந்தா நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் நாரதர் குளம் உள்ளது. அதன் அருகில்  ஐந்து பாறைகளைக் கொண்ட பஞ்சசீலா என்ற இடமும் உள்ளது. அந்த ஐந்து பாறைகளையும்  நாரதர், நரசிம்மர், வராஹர், கருடர், மார்கண்டேயர் என்று கூறுகிறார்கள் .

ஆறுமாத காலம் ஆலயம் மூடப்படுவதற்கு முன் பிரதான சன்னதியில்  ஏற்றி வைக்கப்படும் நெய் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பது இந்தக் ஆலயத்தின்  தனிச் சிறப்பாகும் .
.......அடுத்து கேதார்னாத்  ஆலயப் பெருமை தொடர்கிறது 

Badrinath - Ketharnath Temples - 7

$
0
0
கேதார்னாத் மான்மியம்

பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும்.  திருமால் நரநாராயணராக கேதார்னாத்தில் சிவபெருமானை வேண்டித் தவம் இருக்க அவர் திருமாலுக்குக் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாராயணரும் சிவபெருமானை அந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தமது ஆசையை வெளிப்படுத்த, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் அங்கயே ஜோதிர் லிங்க வடிவத்தில் இருப்பேன் என்று அவருக்கு உறுதி கூறினார். அத்தகைய புனித தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிவபெருமானின் ஆலயத்தை ஸ்தாபனம் செய்தார். அங்கு சிவபெருமானை தியானித்தபடி விஷ்ணுவும் அமர்ந்து இருக்கிறார் என்பது ஐதீகமாகும்.

இன்னொரு கதையின்படி  பார்வதி சிவனுடன் ஐக்கியமாகி தானும் அவர் அவதாரத்தில் பாதியானவள் என்பதை உலகிற்கு  நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக கேதார்னாத்துக்குச்  சென்று தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றுக் கொண்டு அர்த்தனாரீஸ்வரர் அவதாரத்தை எடுத்துக் கொண்டாள். ஆகவே பார்வதி வந்து தவம் செய்த இடம் என்பதினாலும் கேதார்னாத்  முக்கியத்துவம் பெற்றது. இதன் கதை என்ன என்பதை பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட்டக் கதையில் கூறுகிறேன். அதற்க்கு முன்னால்   இதைப் படியுங்கள்.

கேதார்னாத்துக்கு செல்பவர்கள் பஞ்ச கேதார் யாத்திரை எனப்படும் ஐந்து சிவன் ஆலயங்களையும் தரிசிக்காமல் வரமாட்டார்கள். பஞ்ச கேதார் யாத்திரை என்பது என்ன?  அதன் கதை என்ன ?

குருஷேத்திரத்தில் மகாபாரதப் போர் முடிவுக்கு வந்தது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ராஜ்ய பரிபாலனத்தை தமது சந்ததியினரிடம்  ஒப்படைத்து விட்டு அமைதி தேடி மோட்ஷம் அடைய பத்ரினாத்  மற்றும் கேதார்னாத் ஆலய விஜயத்தை மேற்கொண்டார்கள். அவர்கள் தமது சந்ததியினரை கொன்று குவித்ததினால் அவர்களுக்கு ஏற்பட்டு இருந்த தோஷத்துக்கு விமோசனம் பெறுவதற்காகவும்  கேதார்னாத்துக்கு வந்தார்கள்.  ஆனால் அங்கு வந்ததும் சிவபெருமான் அங்கு இல்லையென்றும் அந்த நேரத்தில்  அவர் இமயமலையில் உள்ள வனப் பிரதேசத்தில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பாண்டவர்கள் சிவபெருமானை தேடிக் கொண்டு இமயமலையை நோக்கிச் சென்றார்கள். வழி நெடுகிலும் வனப் பிரதேசமாக இருந்ததினால் அவரை காட்டில் தேடி அலைந்தார்கள். ஆனால் எத்தனைத் தேடியும்  சிவபெருமானைக் அவர்களினால் கண்டு பிடிக்க முடியவில்லை.   ஆனாலும் விடா முயற்சி கொண்டு அவரைத் தேடி அலைந்தவர்கள் ஒருநாள் மனம் வெதும்பிப் போய் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார்கள். அப்போது வனத்தின் நடுவில் இருந்து ஒரு குரல் கேட்டது.

அந்தக் குரல் 'பாண்டவர்களே  உங்களால் சிவபெருமானை மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ இந்த இடத்தில் பார்க்க முடியாது. ஆகவே  கேதானாத்திற்குச் சென்று அவரை தேடினால் அவர் கிடைப்பார். ஆனால் அதற்கு பக்தியுடன் அவரை வேண்டுவது முக்கியம்' என்று கூறியது. அதைக் கேட்டவர்கள் மன மகிழ்ச்சி அடைந்து சிவபெருமானை தரிசித்து அவர் அருளைப் பெற கேதார்னாத்துக்கு பயணித்தார்கள்.  அவர்கள் அப்படி யாத்திரையை மேற்கொள்ள வேண்டியதின்  பின்னணிக் காரணம் ஒன்று இருந்தது என்பது  அவர்களுக்கே தெரியவில்லை.
..........தொடரும் 

Badrinath - Ketharnath Temples - 8

$
0
0
முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார்.  பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் பிருங்கி எனும் மாபெரும் முனிவரும் அங்கு வந்து இருந்தார்.  அவர் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்.  சிவபெருமான் பார்வதிக்கு அனைவரும் பூஜை புனஸ்காரங்கள்  செய்து முடித்தப் பின் அனைவரும் சிவபெருமான் மற்றும் பார்வதியை வழிபடத் துவங்க பிருகு முனிவர் மட்டும் சிவபெருமானை மட்டுமே வணங்கி விட்டு பார்வதியை வணங்காமல் சென்றார்.

அதற்கான காரணத்தை அந்த முனிவரிடம் கேட்டபோது  பிருகுவும் சிவன் வேறு, பார்வதி வேறு என்று தான் கருதுவதால் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் தாம் வணங்குவதில்லை என்றும் கூற அதனால் கோபமுற்ற பார்வதியும் அவருக்கு சாபம் தந்தார்.  அது மட்டும் அல்ல அங்கிருந்து கோபமாக எழுந்து சென்று விட்டார். அவர் மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது.  சிவனுடன் சேர்ந்து பிரபஞ்சத்தையே  படைத்த பராசக்தியான தன்னை புறங்கணித்து விட்டு சிவனை தனிக் கடவுளாகப் இந்த உலகம் பார்ப்பதை மாற்ற வேண்டும்.   சிவன்  வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள்,  இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும். சக்தி இல்லையெனில் சிவனும் இல்லை என்றும் சிவன் மற்றும் சக்தி என்ற இரண்டும் வெவேறு இல்லை. அவை இரண்டுமே ஒன்றிணைந்த  ரூபம் ஆகும் என்ற உண்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். 

ஆகவே சிவபெருமானுக்கே சக்தி தரும் தனக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என  எண்ணியபடி அங்கிருந்துக் கிளம்பிச்  சென்றவள் நேராக கேதார்னாத்துக்கு வந்து அங்கிருந்த கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தில் சென்று அமர்ந்து கொண்டு கேதார கௌரி விரதத்தினை மேற்கொண்டு தவம் இருந்தாள். கேதாரம் என்பது இமயமலையின் ஒரு பகுதி ஆகும்.  இங்குதான் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் எனும் பெயரில் தோன்றினார்.  பார்வதி  சிவனை  வழிபட்டு அவர் கொடுத்த வரத்தின்படி அர்த்தநாரீஸ்வரர்  ரூபத்தை பார்வதி பெற்றாள்.

இருபத்தி ஒரு  நாட்கள் விரதம் இருந்து செய்ய வேண்டிய கௌரி விரதம் முழு பக்தியோடு செய்யப்பட்டால் கணவரிடம் இருந்து வேண்டியவைக் கிடைக்கும் அன்பது ஐதீகம். ஆகவே பார்வதி மேற்கொண்டு இருந்த விரதத்தில் மகிழ்ந்து போன சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டதும், பார்வதியும் தயங்காமல் அவருடைய உடலில் தானும்  பாதி உடலாகி  அவர் சக்தியிலும் பாதியாக வேண்டும். இனி உலகம் சிவசக்தி என்றே அவர்கள்  இருவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று வரம் கேட்க சிவபெருமானும் தன்னுடன் அவளை பாதியாக இணைத்துக் கொண்டப் பின் சில காலம் பொறுத்து தக்க நேரத்தில் அந்த அவதாரத்தில்  பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் அதுவரை பார்வதி பொறுமையாக  இருக்க வேண்டும் என்றும் கூற அவளும் மகிழ்வுற்றாள். அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் முதலில் திருவண்ணாமலை உண்ணாமலையார் ஆலயம் மற்றும் திருச்சங்கோடு அம்மையப்பர் ஆலயம் இரண்டிலும் நிகழ்ந்தது என்றும் கூறுகிறார்கள்.  ஆனால் அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் தோன்றியது கேதார்னாத்தில்தான் என்றாலும் அந்த ரூபத்தில் முதன் முறையாக பக்தர்களுக்கு காட்சி தந்து  வெளிப்பட்டது திருவண்ணாமலை மற்றும் அம்மையப்பர் ஆலயங்களில் என்பதே உண்மையான வரலாறு .

பார்வதியை தன்னுடன் பாதியாக இணைத்துக் கொள்வேன் என வாக்குறுதி கொடுத்தப் பின் பார்வதியும் சிவபெருமானும் அதே  வனப்பகுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்கள்.  பொழுதைப் போக்க அவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார்கள். அந்தப் போட்டியில் ஒரு நிபந்தனையையும் வைத்துக்  கொண்டார்கள். அதன்படி சிவபெருமான் அந்த வனப் பகுதியில்  மறைந்து  கொள்ள வேண்டும்.  மாலை சூரியன் மறைவதற்கு முன்னால்  மறைந்து உள்ள அவரை  பார்வதி அவரைக் கண்டு பிடிக்க வேண்டும்.  ஐந்து இடங்களில் மறைந்து இருக்கும் அவரை ஐந்து முறை பார்வதி கண்டு பிடித்து விட்டால் அவள் கேட்கும் வரத்தை அவர் அருள வேண்டும். ஆட்டம் துவங்கியது.  சிவபெருமானும் பல இடங்களில் சென்று தனது உருவான லிங்க கற்களை வைத்து விட்டு  அவற்றில் ஐந்தில் தான் ஒளிந்து கொண்டார்.  பல லிங்கங்கள் இருந்ததைக் கண்ட  பார்வதி, அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏமார்ந்தாள்.


அவரைத் தேடித் தேடி அலைந்த பார்வதி ஒரு இடத்தில்  இருந்த லிங்கத்தைக் கட்டிப் பிடிக்க அதில் அவர் உடலைத் தழுவியதைக் போன்ற உணர்வைப் பெற்றாள்.  அவள் கட்டிப் பிடித்தப் பகுதி அவருடைய உடல் பகுதியாக இருந்தது.  இப்படியாக  அவள் ஐந்து இடங்களில் இருந்த லிங்கங்களில் மறைந்து இருந்த  சிவபெருமானைக் கட்டிப் பிடித்தபோது அவளது கைகளில் அவருடைய உடல், காது, கால், கைகள் மற்றும் வயிறு என அவருடைய உடல் அமைப்புக்கள் அகப்பட்டன. இப்படியாக அவற்றைக் கொண்டு அந்த ஐந்து இடங்களில் ஒளிந்து இருந்த சிவபெருமானை பார்வதி கண்டு  பிடித்து ஆட்டத்தில் வெற்றி பெற்றாள் .

அந்த விளையாட்டு முடிந்தவுடன் பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள். எந்த ஐந்து இடங்களில் அவரை பார்வதி கண்டு பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டலோ அந்த இடங்கள் எல்லாம் பவித்ரமானதி விட்டன. ஆகவே  பஞ்ச பூதங்களைப் போன்ற அவை ஐந்தும் சிவபெருமானின் புனித ஆலயங்களாக மாறி பக்தர்கள் பூஜிக்கும் இடங்களாக அமைய வேண்டும். அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் தக்க நேரத்தில் அந்த ஐந்து இடங்களிலும் எழுந்தருளுவேன் என்று அவளுக்கு  வாக்குறுதி  தந்தார். அதுவே கேதார்நாத்தில் பஞ்ச லிங்க ஆலயங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தன. ஆனால் அந்த ஆலயங்கள் ஐந்து  இடங்களில் அமைந்தது எப்படி ?
........தொடரும் 

Badrinath - Ketharnath Temples - 9

$
0
0

சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக  கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத்  தேடிக் கொண்டு இருந்தார்கள். பாண்டவர்கள் சிவபெருமானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தபோது அவர்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று அவர்களை சோதனை செய்து பார்க்க  விரும்பிய சிவபெருமான் ஒரு மாடாக உருமாறி திரிந்து வந்தார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமான் அங்கு வந்து தங்கி இருப்பது உண்டு என்றும் உண்மையான பக்தி கொண்டு அவரைத் தேடி அலைந்தால் அவரைக் கண்டு பிடிக்க முடியும் பிடிக்கலாம் என்பதையும்  கிருஷ்ணர் மூலம் ஏற்கனவே அறிந்து இருந்தார்கள் என்பதினால் உண்மையான பக்தி கொண்டு சிவபெருமானை வழிபாட்டு வந்த பாண்டவ சகோதரர்களினால் சிவபெருமானே அந்த மாட்டின் உருவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் அந்த மாட்டை வணங்கியபடி அதன் அருகில் சென்றார்கள்.

மாட்டு உருவத்தில் இருந்த சிவபெருமான் அவர்கள் தாம் அருகில் வருவதைக் கண்டவுடன் வேண்டும் என்றே அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணியதைப் போல ஓடத் துவங்கினார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் அந்த மாடே சிவபெருமான் என்பதை புரிந்து கொண்டு அதைப் பிடிக்க ஓடினார்கள்.  அதன் பின்னால் ஓடிச் சென்ற பீமனோ கஷ்டப்பட்டு அந்த மாட்டை பிடித்துக் கொள்ள முயல, அந்த மாடும் பீமனிடம் இருந்து விடுபட்டு  திமிறிக் கொண்டு ஓடத் துவங்கியது. பீமன் மாட்டுடன் போராடி அதன் உருவில் இருந்த சிவபெருமானை அங்கேயே தடுத்து நிறுத்த முயன்றான்.


பீமன் பரம பராக்கிரமசாலி என்பதினால் அந்தப் போராட்டத்தில் மாட்டின் உடல் கிழிந்தது.  பீமன் இழுத்த இழுப்பில் அதன் உடல் பிய்ந்து விழுந்தது. இப்படியாக அந்த மாட்டின் உடல்   கேதார்னாத் அருகில் இருந்த ஐந்து இடங்களில் சென்று  விழுந்தன. அவை விழுந்த இடங்கள் பார்வதி சிவபெருமானை லிங்க உருவில் கட்டிப் பிடித்தவை ஆகும். மாட்டின் உடல் பகுதிகள் அதே சிவலிங்கங்கள் மீது அவை விழ பார்வதி முன்னர் வேண்டிக் கொண்டபடி அங்கிருந்த சிவலிங்கங்களில் சிவபெருமான் குடி கொண்டார்.  இப்படியாக அந்த ஐந்து இடங்களில் இருந்த சிவலிங்கங்களே கேதார் பஞ்சலிங்க ஆலயங்களாகின. பார்வதி சிவபெருமானைக் கட்டித் தழுவியவை  அந்த ஆலயங்களில் உள்ள சிவலிங்கங்கள்  என்று நம்பிக்கைக் கதை உள்ளது.


மாட்டின் கழுத்துப் பகுதிவிழுந்த இடமே கேதார்னாத்  ஆலயம் என்பதினால் இங்குள்ள சிவபெருமானின் உடல் கழுத்துவரை மட்டுமே காணப்படுகிறது. 

மாட்டின் வயிற்றுப் பகுதிவிழுந்த இடமே மத்திய மகேஸ்வரர் என்பது. குப்தகாசி   எனப்படும் அதுவும் ஐந்து ஆலயங்களில் ஒன்றாயிற்று.
 
மாட்டின் புஜங்கள்விழுந்த இடமான துங்கனாத்தில் இன்னொரு ஆலயம் அமைந்தது.   இங்கு காணப்படும்  சிவபெருமான் புஜங்களோடு அற்புத தரிசனம் தருகிறார். மேலும் இது இராமாயண காலத்துக்கு முன்னர் இருந்துள்ள ஆலயம் என்பது ஒரு கதை மூலம் தெரிகிறது. இலங்கையின் அதிபராக இருந்த ராவணன் பெரும் சிவபக்தன்.  அவன் இங்கு வந்து சிவபெருமானைத் துதித்து தவம் இருந்துள்ளதான  கதையும் உள்ளது.

நந்தியின் உருவில் இருந்த சிவபெருமானின்ஜடைவிழுந்த இடம் யுர்கம் எனும் பள்ளத்தாக்கில் உள்ள கர்பேஸ்வரர் ஆலயமாயிற்று. அங்குள்ள சிவபெருமான் ஜடாதாரியாகக் காட்சி தருகிறார் .
 
கடைசியாக மாட்டின்  முகம்  விழுந்த இடமான ருத்ரநாத் ஆலயத்தில் அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி தருகிறார். இப்படியாக பார்வதி விரும்பிய ஐந்து இடத்திலும் சிவபெருமானின் ஆலயம் அமைய கேதார்னாத்துக்கு  செல்பவர்கள் பஞ்ச கேதார் ஆலய தரிசனம் என்ற பெயரில் அந்த ஐந்து ஆலயங்களுக்கும் செல்வார்கள்.  அப்போதுதான்  அவர்கள் சிவபெருமானின் முழு உருவத்தையும் கண்டு வழிபட்டப் பலன் கிடைக்கும்.
 
பாண்டவர்களின் பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமானும் கேதார்னாத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருள் புரிந்தார். சிவபெருமானின் தரிசனத்தையும் அருளாசியையும் பெற்றுக் கொண்டு தமது அனைத்து தோஷங்களையும் அவர் அருளினால் விலக்கிக்  கொண்ட பாண்டவர்கள் திரௌபதியுடன் சேர்ந்து ஆலயத்தின் பின் வழியே இருந்தப் பாதை மூலம் சொர்க்கம் சென்றதாக கதை உள்ளது.  தமது கடமையை முடித்துக் கொண்ட ஸ்ரீ ஆதி சங்கரரும் இந்த  வழியேதான் மலை மீது சென்று அப்படியே அங்கிருந்து  மறைந்து போனார்.


கேதார்னாத்திற்கு விஜயம் செய்பவர்கள் அங்கிருந்து நேபாளத்தில் உள்ள பசுபதினாத் ஆலயத்துக்குச் சென்று அங்கும் சிவ தரிசனம் செய்வது பெரிய விஷேசம் என்பார்கள். காரணம் பசுபதினாத்தில் பரமசிவனின் தலைப் பகுதி உள்ளது என்றும். கேதார்னாத்தில் உள்ளது பரமசிவனின் பாதப் பகுதி என்ற நம்பிக்கையும் உள்ளது.
 
கேதார்னாத் ஆலயத்தின் அருகில் உள்ள நதிகளில் இறந்து போன முன்னோர்களுக்கு திதியும் கொடுப்பார்கள். இங்கு தரப்படும்  திதியை பெற்றுக் கொண்டு பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும் இறந்து போனவர்களுடைய ஆத்மாக்கள்  இந்த ஆலயத்தின் அருகில் ஓடும் வைதாரிணி என்ற நதியில் குளித்து விட்டு கேதார்னாதரை வணங்கி விட்டு பூரண மன அமைதியுடன் மேலுலகம் செல்கின்றன என்பதினால் அவர்களுடைய சந்ததியினருக்கும்  குடும்பத்தினருக்கும் மன நிறைவான வாழ்க்கை அமைகின்றன  என்ற நம்பிக்கையிலான ஐதீகமும் உள்ளது.
 
கேதார்னாத்  ஆலயம் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இன்று சிதைந்த நிலையில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்னாத்  ஆலயங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து விடப்படும். இரண்டு ஆலயங்களின் இந்த தற்காலிக  அழிவும்  எதோ ஒரு  காரணத்திற்கானது  என்றே நினைக்க வேண்டி உள்ளது.

முற்றும்

Statistics on Santhipriya's pages

$
0
0
Statistics on Santhipriya's pages

சாந்திப்பிரியா  வலைத்தளத்தைப்  
பற்றிய  சிறு புள்ளி விவரம் இது

Sri Lanka - Muneswaram Sivalayam-1

$
0
0

ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் கூறுவது என்றால் ஸ்ரீலங்காவை  சிவபூமி என்று கூறினாலும் கூட  சரியாகவே இருக்கும். அதற்குக் காரணம் பல சக்தி வாய்ந்த சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் பல உண்டு.  ஸ்ரீலங்காவில் உள்ள புகழ் மிக்க பல ஆலயங்கள் ராமாயணக் காலத்துடன், அதன் கதையுடன் சம்மந்தப்பட்ட இடமாகும். ஸ்ரீலங்காவை ஆண்ட பெரும் சிவபக்தனான ராவணன் இந்த தீவு நாட்டின் பல சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார் என்பது பல கதைகள் மூலம் தெரிய வருகிறது. அதனால் சிவாலயங்கள் பெருமளவில் அங்கு தோன்றி உள்ளது. இலங்கையில் ஐந்து மகிமை வாய்ந்த  சிவாலயங்கள் உண்டு.  அவற்றை 'பஞ்ச ஈஸ்வரங்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஐந்து சிவன் ஆலயங்கள் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம்  மற்றும் தொண்டீஸ்வரம் என்று  கூறப்படுகின்றது.  

ஒரு காலத்தில் இலங்கையை ஆண்ட போத்துக்கீசியரால் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டன, சூறையாடப்பட்டு அங்கிருந்த ஆலயங்களின் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆலயங்கள் சிதைக்கப்பட்டன.  அது போலவே டட்ச் ஆட்சியினர் ஆண்ட காலத்திலும் இந்த நிலை இருந்தது.  ஆகவே பக்தர்கள் விரைவாக செயல்பட்டு பல ஆலயங்களில் இருந்த மூல விக்ரகங்களையும் சிலைகளையும் அங்காங்கே இருந்த குளங்களிலும் ஆலய கிணறுகளிலும்  மறைத்து வைத்து விட்டார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது அவற்றில் பல ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு  சீரமைக்கப்பட்டன.  பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆலய விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன.

ஒரு காலத்தில்  இலங்கை மிகப் பெரிய பூமியாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அங்கு ஏற்பட்ட மூன்று கடல் கொந்தளிப்பில்  தற்போது உள்ள இலங்கையின் அளவை விட மூன்று மடங்கு பூமியானது  நீரில் மூழ்கி  அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அந்த அழிந்து விட்ட பெரும் பகுதிகளே ராவணன் ஆண்டு வந்த இலங்கை என்றும், அவன்  ராஜ்யத்திற்குப் போகும் முன்னால் தற்போது உள்ள இலங்கையின் பகுதிகள் வழியேதான் செல்ல வேண்டி இருந்ததாகவும், இந்தப் பகுதிகளில் நிறைய ஆலயங்கள் முக்கியமாக பஞ்ச சிவாலயங்கள்  இருந்துள்ளது என்றும் நம்பிக்கை உள்ளது.  அந்த காலக் கட்டத்தில்தான் தனது மனைவி சீதையை ராவணன் கடத்திக் கொண்டு இலங்கைக்குச் சென்றதும் அங்கு சென்று ராவணனுடன் போர் புரிந்து சீதையை  மீட்டுக் கொண்டு  வந்த ராமபிரான்  அந்த வெற்றி கிடைக்க அருள் புரிந்த  சிவபெருமானுக்கு நன்றி கூற  ஸ்ரீ ராமபிரான் இந்த முன்னேஸ்வரம் ஆலயத்திலும் வந்து வழிபட்டதான காலம் காலமாக நம்பப்பட்டு வரும் கதையும் இந்த நாட்டில் உள்ளது.

ஆலயத்திற்குள் உள்ள சிவலிங்கம்

ஆகவே இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள   முன்னேஸ்வரம்  ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  ஆலயம் ஆகும் என்று கூறப்பட்டாலும், கர்ண பரம்பரைக் கதைகளை நோக்கும்  போதும், ராமாயண காலத்துடன் இணைத்துப் பேசப்பட்டதில் இருந்தும்  இந்த ஆலயம் எழுந்த காலத்தைக் கணக்கிட்டுக் கூற முடியாது என்று கூறுவதே உண்மையாக இருக்கும். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்த உள்நாட்டு யுத்தத்தினால் ஆலயம் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும், அந்த சேதங்கள் ஆலய கட்டிடங்களுக்கு ஏற்பட்டதே அன்றி  அந்த ஆலயத்தின் மகத்துவத்திற்கோ அல்லது மகிமைக்கோ அல்ல.  அந்த ஆலயம் மகத்தானது. சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் தோன்றிய ஆலயம் ஆகும். போர்த்துகீசியர்களும் டச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்களும் இந்துக்களின் பல ஆலயங்களை ஸ்ரீலங்காவில் நாசப்படுத்தி இருந்தார்கள். அவற்றில் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன.

இந்த ஆலய மகிமையை நைமிசாரண்யா வனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும்  பல்வேறு புராண மகிமைகளைக் கூறி வந்திருந்த சூதக முனிவர்  முன்னேஸ்வரம்  சிவாலயத்தின் கதையைக் கூறத் துவங்கினார். சூதக முனிவர் கூறலானார்........
..........தொடரும்

Sri Lanka - Muneswaram Sivalayam-2

$
0
0


 ஆலயத்தின் படம் நன்றி:- http://www.panoramio.com/user/69195

சூதக முனிவர் கூறிய விரிவானக் கதையை நான் சுருக்கி எழுதி உள்ளேன். காரணம் சூதக முனிவர் ராமாயணத்தை விரிவாக எடுத்து உரைத்தார். ராமாயணத்தைப் பலரும் படித்ததுதான். ஆகவே அவர் கூறிய ராமாயணக் கதையை மீண்டும் விவரமாக எழுதாமல் சுருக்கமாக விளக்கி விட்டு அவர் கூறிய சிவாலயத்தின் மையக் கதையை மட்டும் எழுதுகிறேன்.   சூதகர் கூறிய முன்னேஸ்வரம் ஆலயம் எழுந்தக் கதை இது.

 ''இந்த ஆலயம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். சீதையை ராவணன் கடத்திச் சென்றதும் ராமபிரான் அவளைத் தேடி அலைந்தார். அவருக்கு பலரும் உதவினார்கள். அதில் ஜடாயு உயிர் இழந்தார். சீதையைக் கண்டு பிடிக்க ஹனுமார் உதவினார். சுக்ரீவன் தனது படையினருடன் ராமபிரானுக்கு உதவினார். அதில் சுக்ரீவருடைய சகோதரரும் பலசாலியான வாலியும் மடிய நேர்ந்தது.  அவர்கள் அனைவரின் உதவியினாலும்  இலங்கை மீது படையெடுத்த ராமபிரான் ராவணனையும் அவர் கூட்டத்தினரையும் கொன்று சீதையை மீட்டு வந்தார். அதில் சிவபக்தனான ராவணனைக் கொன்றதில் அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

ஆகவே பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள ராமபிரான் பல ஆலயங்களுக்கும்  சென்று சிவபெருமானை துதித்து தனது தோஷத்தைக் களைந்து  கொள்ள வேண்டி இருந்தது. மேலும் யுத்தத்திற்கு  செல்லும் முன்னால் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும்  என விரும்பிய ராமபிரான் சிவபெருமானை வணங்கித் துதித்து அவரது அருளையும் ஆசியையும் வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவருக்கு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பல வகைகளிலும் சக்தி கொடுத்து அருள் புரிந்தார்.


ஆகவே தனக்கு அருள் புரிந்து யுத்தத்தில் வெற்றி பெற சக்தி கொடுத்த சிவபெருமானுக்கு நன்றி கூறுவதற்காக ராமபிரான்  முன்னேஸ்வரம் ஆலயம் இருந்த பூமிக்கு வந்த உடனேயே அவருக்கு இருந்த பிரும்மஹத்தி தோஷம் மறைந்து விட்டதை உணர்ந்து அதிசயித்தார். என்னே சிவபெருமானின் மகிமை என வியந்தார். ஆகவே அங்கேயே  ஒரு மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை  ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார்.  அவர் முன்னாள் தோன்றிய சிவபெருமானும் ராமபிரானை மீண்டும் ஆசிர்வதித்து மறைந்தார்.  அதற்குக் காரணம் அந்த இடத்தில்  முன்னதாகவே சிவபெருமான் ஒரு சிவலிங்க உருவில் அங்கு எழுந்தருளி இருந்தார். அது ராமர் பூஜை செய்த இடத்தின் அடியில் புதைந்து கிடந்தது. ஆக ராமர் பூஜை செய்த இடத்தின் கீழ் பூமியில் புதைந்து இருந்த ஸ்வயம்பு சிவலிங்கத்திற்கு தன்னையே அறியாமல் ராமபிரான் பூஜை செய்ததினால் சிவபெருமான் அந்த சிவலிங்கத்தில் இருந்து வெளிவந்து ராமருக்கு காட்சி கொடுத்ததினால் அந்த சிவலிங்கம்   ஜீவன் பெற்ற லிங்கமாயிற்று.

இந்த ஆலயத்தில் வடிவாம்பிகை சமேதராக முன்னேஸ்வர ஈசன் எழுந்தருளி உள்ளார்.  இங்குள்ள வடிவாம்பிகை அற்புதமானவள். அழகானவள்.  அதனால்தான் அவளை வடிவிற்கே  அழகானவள்  என்பதைக் கூறும் விதத்தில் வடிவு + அம்பிகை   என  வடிவாம்பிகை ஆனாள்.  ''.

ரிஷி முனிவர்கள் ஆர்வத்துடன் சூதக முனிவர் கூறிய கதையை கேட்டவாறு அமர்ந்து இருந்தார்கள்.  சூதகர் தொடர்ந்து  கூறும் முன் ஆர்வத்தினால் சில முனிவர்கள் அவரிடம்  கேட்டார்கள். '' ஸ்வாமி  அவள் எப்படி   இங்கு  எழுந்தருளினார் என்ற கதையையும்  எமக்கு விளக்கிக் கூற வேண்டும் "

சூதகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக சிரித்துக் கொண்டே கதையைத் தொடரத் துவங்கினார்.
...............தொடரும்

Sri Lanka - Muneswaram Sivalayam-3

$
0
0
''கல்பக்காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான்.  அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில்  மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து  வந்தான். இப்படியாக வாழ்வை ஓட்டிக் கொண்டு இருந்த செம்படவன் ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றபோது  சற்று தொலைவில்  ஆற்றின் கரையில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டான். அவர்கள் உடலே பளபளத்தது.  அந்த இரண்டு சிறுவர்களுமே அழகாக  இருந்தார்கள். இத்தனை ஏழ்மை நிலையில் உள்ள இந்த ஊர் மக்கள் மத்தியில் இப்படி அழகான சிறுவர்களா? நமக்குத் தெரிந்த வகையில் அப்படி எந்த சிறுவர்களும் இந்த ஊரில் உள்ளதாகத் தெரியவில்லையே, அவர்கள் யாராக இருக்கும் என எண்ணியவாறு அவர்கள் யார் என்பதைக் கேட்ட அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த  இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவர்கள் அருகில் வருவதைக் கண்ட சிறுவர்களோ அவன் எதிரிலேயே மாயமாக மறைந்து விட்டார்கள். செம்படவன் குழம்பினான். தான் கண்டது கனவா, கானல் நீரைப் போன்றதா? இல்லை உண்மையா?? உண்மை என்றால் அவர்கள் எப்படி மறைந்து விட்டார்கள்?! ஒரு வேலை பேய், பிசாசு ஏதாவது இருக்குமோ?!! அவனுக்கு விடைக் கிடைக்கவில்லை. குழப்பத்துடன்  வீட்டிற்குச் சென்றவன் தன் மனைவியிடமும் நடந்தவற்றைக்  கூறினான்.
 
மறுநாள் நடந்த சம்பவத்தை மறந்துவிட்டு மீண்டும் அவன் மீன் பிடிக்கச் சென்ற போது முதல் தினம் நடந்த  அதே   நிகழ்ச்சி தொடர்ந்தது.  அவர்களின் அருகில் அவன் சென்றால் அவர்கள் மறைந்து விடுவார்கள். இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் அதே விளையாட்டு  தொடர்ந்ததினால் இனி அவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என ஆவலுற்றான். அவர்கள் ஏன் தன்னைக் கண்டு ஓடி ஒளிய  வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை ஏதாவது உபாயம் செய்தே பிடிக்க வேண்டும் என எண்ணியவன்  ஒரு நாள் அவர்களைப் பிடித்தே தீர்வது என்ற முடிவுடன் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து  கொண்டு இருந்தான்.

இரவு நேரம் நெருங்கியது.  வெகு நேரம் பொறுத்து  அந்த சிறுவர்களும் அங்கு விளையாட வந்தார்கள்  மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த செம்படவன் ஓடிப்  போய் அவர்களைப் பிடித்து விட்டான்.  அந்த சிறுவனோ அவனைத் தள்ளி விட்டு தப்பி ஓடி ஆற்று நீரில் குதித்துவிட்டு மறைந்தும் போய் விட்டான். ஆனால்  அதிசயமாக செம்படவன் கையில் சிக்கிக் கொண்ட சிறுமியோ அடுத்த நிமிடமே ஒரு  சிலையாகி விட்டாள்.


அந்த சிலையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். மறுநாள் அது குறித்து யாரையாவது கேட்கலாம் என எண்ணி இருந்தான். அன்று இரவில் தூங்கிக் கொண்டு இருந்தவன்  கனவில் தோன்றிய  பார்வதி தேவி தானே அந்தப் பெண் சிலை  என்றும்  தன்னை வணங்கி வழிபட்டால் நாட்டில் நிலவி வரும் குழப்பங்கள் தீரும் என்றும் கூறினாள் .

அதைக் கண்டு அதிர்ந்து போன செம்படவனும் காலையில் எழுந்ததும் ஊருக்குள் சென்று அந்த நிகழ்ச்சியை அனைவரிடமும் கூறினான். அந்த சிலையை எங்கு வைப்பது எனக் குழம்பினான். கட்டுத் தீயைப் போலப் பரவிய அந்த  செய்தி மன்னனின் காதிலும் சென்று விழுந்தது.  ஏற்க்கனவே பல பிரச்சனைகள் இருந்த குழப்பமான நிலையில் இது என்ன புதிய குழப்பம் என எண்ணிய மன்னன் செம்படவனை அந்த சிலையை எடுத்துக் கொண்டு தனது அரண்மனைக்கு வருமாறு ஆணையிட்டான்.
 ........தொடரும் 

Sri Lanka - Muneswaram Sivalayam - 4

$
0
0


சூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ''அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே  முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை சோதனை செய்து பார்க்க விரும்பியவன் அந்த சிலையை அரண்மனைக்கு எடுத்து வரச் சொல்லி அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லுமாறும் நான்கு நாட்கள் பொறுத்து அதை எடுத்துச் செல்லுமாறும் ஆணையிட்டார்.

 பின்னர் இரண்டே நாளில் அதைப் போலவே நூறு சிலைகளை செய்யச் சொல்லி அதன் இடையே அந்த உண்மையான சிலையையும்  வைத்து  செம்படவனை அழைத்து அதில் அவனுக்கு கிடைத்த உண்மையான சிலை எது என்பதைக் கண்டு பிடித்து கூறுமாறு ஆணையிட்டான். அப்படி செம்படவன் உண்மையான சிலையைக் கண்டு பிடித்து விட்டால் மட்டுமே அவனை தான் நம்புவேன் என்றும், இல்லை என்றால் தெய்வீகத்தை கொச்சைப் படுத்துவதைப் போல பொய்யை கூறி வதந்தியைப் பரப்பியவனை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்து விடுவேன் என்றும் அறிவித்தான்.


மறுநாள் அந்த செம்படவன் அரண்மனைக்குச் சென்று எது உண்மையான சிலை என்பதைக் கண்டு பிடித்துக் காட்ட வேண்டும். இல்லை என்றால் சிறைவாசம் நிச்சயம் என்ற நிலை.  பயத்துடன் தூங்கிக் கொண்டு  இருந்தவன் கனவில் மீண்டும் தேவி பிரசன்னமாகி அவனை தைரியப்படுத்தினாள். அவன் அரண்மனைக்குச் சென்று சிலைகளைப் பார்க்கும்போது அந்த சிலைகளில் எந்த சிலையின் வலது கால் அசையுமோ அதுவே உண்மையான தன் சிலை என்று கூறினாள்.

மறுநாள் அரண்மனையில் சபை கூடியது. நிறைய மக்கள் அங்கு வந்து கூடி இருந்தார்கள் . அந்த சிலைகளில் உண்மையான சிலை எது என்பதை எளிதில் கண்டு பிடிக்க இயலாத அளவு அனைத்து சிலைகளுமே ஒன்று போலவே இருந்தன. செம்படவனும் வந்து அந்த சிலைகளை பார்த்தான். மனதார தேவியை வணங்கினான். சிலைகள் அனைத்தையும்  பார்த்துக் கொண்டு இருந்தவன்   கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு சிலையின் வலது கால் ஆடியது. ஓடிச் சென்று அதை எடுத்தவன் அதுவே தனக்குக் கிடைத்த சிலை என்று மன்னனிடம் காட்டினான்.  அதன் அடியில் மன்னன் ஒரு அடையாளக் குறி செய்து வைத்து இருந்ததினால் அவன் கண்டு பிடித்ததே சரியான சிலை  என்பதை உணர்ந்த அனைவரும் பிரமித்தார்கள் . மன்னன் மீண்டும் மீண்டும் பல முறை சிலைகளை ஒன்றாக்கி வைத்து விட்டு உண்மையான சிலையை அடையாளம் காட்டுமாறு கூறினாலும் ஒவ்வொரு முறையும் தனது வலது காலை அவன் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு காட்டிய தேவியின்  திருவிளையாடலினால் எத்தனை முறை மாற்றி மாற்றி வைத்தாலும் செம்படவன் அந்த உண்மையான சிலையை கண்டு பிடித்து எடுத்தான்.

அதைக் கண்டு மகிழ்ந்து போன மன்னனும் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க உள்ளதாகக் கூறி  அதை அரண்மனையிலேயே வைத்துக் கொண்டு அந்த செம்படவனுக்கு நிறைய  பொருள் கொடுத்து அனுப்பினான். அடுத்து ராஜ குருக்களின் ஆலோசனைப்படி நல்ல நாளும், நேரமும் பார்த்து அந்த சிலையை புனித சடங்கு செய்து பூஜித்து ராஜ உபசாரத்துடன் தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தில் சென்று அங்கிருந்த லிங்கேஸ்வரருடன் சேர்த்து பிரதிஷ்டை செய்தார் (இன்றும்  கர்பக்கிரகத்தில்  உள்ள தேவியின் சிலை செம்படவனுக்குக் கிடைத்த அதே சிலை என்கிறார்கள் - சாந்திப்பிரியா ) .

ஆலயத்தின்  ஈசனின் பெயர் முன்னைனாதப் பெருமான். அவர் ஏற்கனவே அங்கு பூமியில் இருந்து தானாகவே எழுந்தருளி இருந்தார். ராமபிரானும் அவருக்கு பூஜை செய்திருந்தார்.  அவருடன் உள்ள தேவிக்குப் பெயர் வடிவாம்பிகா தேவியாகும். அங்குள்ள ஆலயத்தில் வியாச முனிவரும் கூட பூஜைகளை செய்து வணங்கி உள்ளார். அங்கு நேர்த்திக் கடன்களை செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும். பாப விமோசனமும் செய்து கொள்ளலாம். நல வாழ்வு பெறவும், அடுத்தப் பிறவியில் நல்ல பிறவி கிடைக்கவும் அங்குள்ள ஈசனை வணங்கினால் போதும். நிச்சயம் அது கிடைக்கும்' என்று கூறியதும் அனைத்து முனிவர்களும் 'சிவ, சிவ. சிவாய நமஹா' என முழக்கமிட்டபடி கலைந்து சென்றார்கள்.

 ஆலயத்தின் படங்கள் நன்றி:- http://www.panoramio.com/user/69195
 
இந்த ஆலயத்தை சுற்றி இன்னும் சில ஆலயங்களும் உள்ளன. கிமு 543 ஆண்டில் இலங்கையை ஆண்டு வந்த விஜயன் எனும் மன்னன் புனருத்தாரணம் செய்தார் என்பது தெரிகிறது. அவரைத் தவிர இந்த ஆலயத்துக்கு சோழ மன்னனான குளக்கோட்டன்  மற்றும் சிங்கள மன்னரான பராக்கிரமபாகு போன்றவர்கள் பல விதங்களிலும் பொருள் உதவி செய்தும், ஆலய வருமானத்திற்காக  பல கிராம  நிலங்களைக் கொடுத்தும்  உதவி இருக்கிறார்கள் .  தவிர 17 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜ சிங்கம் எனும் மன்னன்  வைஷ்ணவ பக்தரானாலும் இந்த ஆலயம் அன்னிய  நாட்டவரால் சிதைக்கப்பட்ட செய்தியைக் கேட்டு மனம் வருந்தி இந்தியப் பகுதிகளில் இருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து ஆலயத்தை சீரமைத்தார். இந்த ஆலயத்தின் மகிமைப் பற்றி தக்ஷிண கையாலயப் புராணத்திலும் குறிப்புக்கள் உள்ளனவாம். ஆலயத்தின் அருகில் மிகப் பெரிய குளமும்  ஆல மரமும் உள்ளன. அந்த ஆலமரமே ஆலயத்தின் தல விருட்ஷமாகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு என்ன என்றால்  ஆலயத்திக்கு உள் வீதி, ராஜ வீதி மற்றும் மாட வீதி என  மூன்று  வீதிகள் உள்ளன. வருடத்திற்கு  இரு முறை இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்துக்கு ஜாதி பேதம் இன்றி சமய பேதம் இன்றி பல மக்களும் வந்து வணங்குகிறார்கள் என்பது மற்றும் ஒரு சிறப்பாகும்.

புத்த  தளம் எனும் மாவட்டத்தில் உள்ள ராமாயணத்தோடு சம்மந்தப்பட்ட இந்த ஆலயம் கொழும்பில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

-முடிந்தது- 

Village Deities- 25

$
0
0

  கிராம தேவதைகள் - 25

காடைப் பிள்ளை ஐயனார்   ஆலயம்  மற்றும் அதில் உள்ள  ஐயனார்  சிலை 

மேலூர் காடைப் பிள்ளை  ஐயனார்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


ஸ்ரீரங்கத்தின் அருகில் உள்ளது மேலூர் எனும் சிற்றூர் . அந்த ஊரில் உள்ள இந்த ஆலயம் மிகவும் பழைமையானது என மக்கள் கூறுகின்றனர். அங்கு உள்ள காவேரி ஆற்றில் தினமும் ஒரு காரைக் குருவி குளித்து விட்டு ஒரு குறிப்பிட்ட மேட்டில் சென்று அமருமாம். பல நாட்களாக அதைப் பார்த்த மக்கள் அது சென்று அமரும் அந்த சிறு மண் குன்றில் என்னதான் இருக்கின்றது எனப் பார்க்க அங்கு சென்ற போது அந்த குன்றின் மீது ஒரு பெட்டியில் தபம் செய்யும் நிலையில் ஐயனார் உருவச் சிலை இருந்ததாம். அதை வெளியில் எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து காடைக் குருவியின் பெயரையும் சேர்த்து அதன் பெயரை காடைப் பிள்ளை ஐயனார் என அழைத்து வணங்கினார்கள்.

அப்போது அந்த நதியில் கல்லணை கட்டப்படவில்லை. அந்த நாட்டை ஆண்டு வந்த கரிகால் சோழன் ஒரு முறை அந்த வழியே தன்னுடைய வாகனங்களுடன் ( குதிரை, யானை போன்றவை) வந்து கொண்டு இருந்தான். அந்த மிருகங்கள் ஆலயத்தின் அருகில் வந்ததும்  அப்படியே பூமியில் அமர்ந்து கொண்டு மேலே நடந்து செல்ல மறுத்தன. அப்போது ஐயனார் ஒரு படை வீரனின் உடலில் புகுந்து கொண்டு (சாமி ஏறியது போல) தனக்கு குதிரைகளையும், யானைகளையும்  பிடிக்கும் என்பதினால் அந்த குதிரை, மற்றும் யானை வாகனங்களில் சிலவற்றை தனக்குத் தந்தால் அவரது பிரச்சனையை தான் தீர்த்து வைப்பேன் என்று கூறினார்.   அதைக் கேட்ட மன்னனும் அதற்க்கு ஒப்புக் கொள்ள அந்த வாகனங்கள் எழுந்து நடக்கத் துவங்கின. ஆகவே சோழன் அந்த ஆலயத்தின் முன்னால் மிகப் பெரிய யானை சிலையும், பின்னால் இரண்டு குதிரை சிலைகளையும் செய்தது வைத்தான். அவை  இன்றும் அங்கு  உள்ளன.

மற்றும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சிவன்தியாண்டி கோனார் என்பவன் ஆடு மாடுகளை அங்கு வந்து மேய்ப்பான்.  ஒருநாள்  அவனிடம் ஐயனார் ஒரு மனித உருவில் சென்று தினமும் சாமிக்கு அபிஷேகம் செய்ய தனக்கு பால் தர வேண்டும் என்றார். அவன் அதற்கு  மறுக்கவே அவனை ஒரு அடி கொடுக்க சிவன்தியாண்டி கோனார் மரணம் அடைந்தார்.  அன்று இரவு கோனாரின் மனைவியின் கனவில் தோன்றியவர் தன் பேச்சைக் கேட்காததினால் தன்னுடன் கோனாரை வைத்துக் கொண்டு விட்டதாகவும், இனி அவன் வம்சத்தினரே ஆலய பூசாரிகளாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு இட்டார். ஆகவே இன்றும் கோனார்களே அந்த ஆலயத்து பூசாரிகளாக உள்ளனர்  (அவர்களை தமிழ்நாட்டில் யாதவர் என்கிறார்கள்) .

ஆலயத்தில் ஐயனார் யோக கோலத்தில் காட்சி தருகிறார். அவர் கீழே கணபதியின் சிலை உள்ளது. ஆலயத்தின் முன்புறத்தில் மிகப் பெரிய யானை சிலை ஒன்று இருக்க, ஆலயத்தின் பின்புறத்தில் மூன்று பெரிய குதிரைகளின் சிலைகள் காணப்படுகின்றன. அவர்களின் இரு புறமும் காவலாளிகளும் உள்ளனர்.  ஐயனாரின் அருகில் மணவாள மாமுனி , ஏகாம்பர நாதர், காமாக்ஷி அம்மன், கதா பரிமானச்சாமி, சிவன்தியாண்டி கோனார், மதுரை வீரன் மற்றும் பெரியண்ணசாமி போன்றோரும் காணப்படுகிறார்கள். ஆலயத்தில் ஐய்யனாருக்கே பூஜை நடைபெறுகின்றது. சிவன்தியாண்டி கோனாரும் வழிபடப்படுகின்றார்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாத இடையில் வரும் மாசி மாதத்தில் மூன்று நாட்கள் சிவராத்தரி உற்சவம் நடைபெறுகின்றது. ஐயனாருக்கு சைவ உணவும், கருப்பண்ணசாமிக்கு ஆடு, கோழி, பன்றி போன்றவையும் பலி தரப்படுகின்றன. விழா முடிந்ததும் சாமியாடிகள் மூலம் கருபண்ணசாமியிடமே அடுத்த விழா எப்போது நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டு அதன்படி நடத்துகிறார்கள். ஆலயத்தில் உற்சவரின்  சிலைக்குப் பின்புறத்தில்  ஐயனாரின் மனைவிகளான பூர்ணாம்பிகை மற்றும் புஷ்பகாம்பிகைக்கும் சிலைகள் உள்ளன.

விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை வரம் வேண்டியும்  பக்தர்கள் ஐயனாரை வேண்டுகிறார்கள். ஒருமுறை காவேரியில் வெள்ளம் வந்து விட்டது. பக்கத்து கிராமங்களில் இருந்தவர்கள் வெல்ல நீர் ஊரில் நுழையாமல் இருக்க மண்ணால் ஆன தடுப்புச் சுவர்களை எழுப்பினார்கள் . ஆனால் மேலூர் மக்கள் ஐயனாரை மட்டுமே நம்பி அவரையே  வேண்டிக் கொண்டார்கள். ஆச்சர்யமாக மற்ற கிராமங்கள் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட, மேலூரில் மட்டும் காவேரி வெள்ள தண்ணீர் நுழையவே இல்லை என்றும் அங்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லையாம்.
 -----------------------
பின் குறிப்பு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தை சேர்ந்ததாக கூறப்படும் இந்த ஆலயம் உள்ள  இந்த  ஊரில் ஓடும் காவேரி ஆற்று நீர் தெளிவான நீராக காட்சி தருகிறதாம். ஆலயம் ஸ்ரீரங்கத்தில் உள்ள மேலூர் எனும் சிற்றூரில் உள்ள   காவேரி ஆற்றின் கரையில் அமைந்து  உள்ளது  -  சாந்திப்பிரியா 

Village Deities- 26

$
0
0

  கிராம தேவதைகள் - 26


கறுப்பரின் ஒரு உருவம்.
ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிலை 

 

அரண்மனை சந்தனக் கருப்பு
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

திண்டுக்கல் மாவட்டத்தில்  நாதம் என்ற ஊரில்  உள்ளது இந்த ஆலயம். அந்த இடத்தை லிங்கம்மா நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் அடிக்கடி பல இடங்களுக்கும்  சென்று அங்குள்ள நல்ல திட்டங்களைப் பார்த்து விட்டு வந்து தம்முடைய ராஜ்யத்திலும் அவற்றை செய்வார். அப்போது திருமயம் என்ற இடத்தை அழகன் நம்பி ராஜா என்பவர் ஆண்டு வந்தார். அவர் கர்வம் பிடித்தவர். அவர் ஆண்டு வந்திருந்த நாட்டில் அவரைத் தவிர வேறு எவரும் தலைபாகை அணியக் கூடாது, ரதத்தில் ஏறிச் செல்லக் கூடாது என்ற சட்டம் இருந்தது. அவர் நாட்டுக்கு விஜயம் செய்த லிங்கம்மா நாயகரை தலைப்பாகையை கயற்றுமாறும், தேரை விட்டு   கீழே இறங்கிச் செல்லுமாறும் கூற அவர் அதை செய்ய மறுத்தார். மன்னனிடம் அவரை அழைத்துச் சென்றதும் இருவருக்கும் இடையே யார் சிறந்த மன்னன் என்ற வாக்குவாதம் நடந்தது. . ஆகவே நம்ம்பி ராஜா தான் ஒரு போட்டியை வைப்பதாகவும் அதில் லிங்கமா நாயக்கர் வெற்றி பெற்று விட்டால் தனது மகளான முத்து திருவை நாச்சியாரை அவருக்கு மணம் முடித்து தந்து அதனுடன் பல கிராமங்களையும் அவருக்கு தருவதாகக் கூறினார். அந்த சவாலை லிங்கமா நாயகர் ஏற்றுக் கொண்டார். போட்டிக்கு வருவதற்கு முன்  தயார் செய்து கொள்ள அவருக்கு சில மாத காலம்  அவகாசம் தந்தான்.

தன்னுடைய நாட்டுக்கு திரும்பிய லிங்கமா நாயகர்  தனது அரண்மனை ஜோசியரான மன்னாடி பரம்பு நாயரிடம் அது பற்றி விவாதித்தான். அதற்கு முன்னால்  அவருடைய அறிவின் திறமையை சோதனை செய்ய ஒரு தந்திரம் செய்தான்.  ஒரு அறையில் கர்பமுற்ற நாயை கட்டி வைத்து அதன் காலில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிற்றை கதவுக்கு வெளியில் நின்ற ஜோதிடரிடம் தந்து  அந்தக் கயிற்ருடன் கட்டப்பட்டு உள்ள கர்பிணி எத்தனை குழந்தைகளை பெற்று  எடுப்பாள் என்றும், அவை ஆணா அல்லது பெண்ணாக இருக்குமா  என்றும்  கேட்க, அந்த ஜோதிடரும் அந்த கர்பிணிக்கு மொத்தம் நான்கு நாய்க்குட்டிகள்  பிறக்கும் என்றும் அவற்றில்  இரண்டு ஆணாக   பிறக்கும் எனவும், அவற்றில் இரண்டு வெள்ளையாகவும், மற்றது கருப்பாகவும் இருக்கும் என்றார். அவர் கூறியது போலவே நடந்தது. ஆகவே நம்பி ராஜாவுடன் நடக்க உள்ள போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்க அவரோ கொட்டாரக்கா எனும் இடத்தில் நம்பூத்திரி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வண்ணானாக உள்ளார் என்றும்,  அவருடைய  பெயர்  மந்தார பாலன்  என்றும் அவரே அதற்கு உதவ முடியும் என்றும்   கூற லிங்கம்மா  நாயக்கரும் அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்.

மன்னனின் அழைப்பை ஏற்று வந்த மந்தார பாலன்  தான் அவருக்கு உதவினால் தனக்கு மன்னன்   என்னக் கொடுப்பார் என்று கேட்க   மன்னன் அவனையே அறுபத்து நான்கு கிராமங்களின் தலைவராக நியமிப்பதாகக் கூறினார். ஆகவே அதை ஏற்றுக் கொண்ட மந்தார பாலன் அவரை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு பூமியைத் தோண்டி அதில் உள்ள மந்திரக்கோலையும், மந்திரப் பானையும்  வெளியில் எடுக்கச் சொல்லி அவற்றை தன்னுடன் எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறினான்.

அதை எடுத்துக் கொண்டப் பின் போட்டிக்கு அவர்கள் சென்றனர்.  போட்டிக்கு வந்த லிங்கம்மா நாயக்கரிடம் நம்பி ராஜா காய்க்காத ஒரு வாழை மரம், திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண், எண்ணையை எடுக்க முடியாத கருவி போன்றவற்றை கல்லாக மாற்றி அவற்றை முதலில் அவை என்னவாக இருந்ததோ அது போலவே மீண்டும் அவற்றை ஆக்குமாறு கூறினார்.


லிங்கம்மா நாயக்கரோ தன்னிடம் இருந்த மந்திர பானையில் இருந்த நீரை அவற்றின் மீது தெளித்து மந்திரக் கோலினால் அவற்றின் மீது சுற்ற வாழை மரம், பெண் என அனைத்தும் மீண்டும் பழைய உருவைப் பெற்று விட்டன.  ஆகவே தான் கூறி இருந்தபடியே  நம்பி ராஜா தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். நிறைய வரதட்ஷனை மற்றும்  பல கிராமங்களையும் அவருக்கு கொடுத்து  அனுப்பினார்.

அது முதல் மந்தார பாலனை அனைவரும் கடவுளைப் போல கருதினார்கள். அவர் மரணம் அடைந்த பின், அவர் வாழ்ந்து வந்திருந்த அரண்மனைக்கு வெளியில் அவருக்காக ஒரு ஆலயம் அமைத்தனர்.  அந்த ஆலயத்தில் அவருக்கு சிலை வைத்து வணங்கி  அரண்மனைக் கருப்பு எனப் பெயரிட்டனர். அவர் சிலையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதிய வண்ணத்தினால் அலங்கரிக்கின்றனர். அவர் ராஜ்ஜியம் செய்து வந்திருந்த அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் கொண்டு வரப்பட்டு அவருடைய புதிய சிலை செய்யப்பட்டு பழைய சிலைக்கு பதிலாக புதிய சிலை வைக்கப்படுகின்றது. அது மட்டுமே அங்கு நடைபெறும் விழாவாகும்.

அவருடைய புதிய சிலையை வைக்கும் நாளன்று பலி தரப்பட்ட கோழியின் ரத்தத்தை பொங்கலுடன் கலந்து ஒரு சாமியாடியிடம் தருவார்கள். அதை அவர் வெகு தூரம் எடுத்துச் சென்று மண்ணில் புதைப்பார். அதன் பின் சிறிது நேரத்துக்குப் பின் அவர் மீண்டும் அங்கு செல்லும்போது பொங்கல் பூமிக்கு மேலே இருக்குமாம். அதை எடுத்து உருண்டையாகப் பிடித்து அதை அவர் ஆகாயத்தில் வீச அரண்மனை சந்தனக் கருப்பு ஆகாயத்திலேயே அதை பிடித்து உண்பாராம். அப்படி ஆகாயத்தில் வீசப்படும் உருண்டைகள் கீழே விழாதாம். 

அவர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வாராம். அவருக்கு சிலர் பூட்டு மற்றும் சங்கிலிகளை காணிக்கையாக தருகின்றனர்.

-------------------------
 பின் குறிப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு நத்தத்தில் சந்தன கருப்பு  ஸ்வாமியின்  ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த கும்பாபிஷேகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு  ஊர்களில்  இருந்த நதிகளில் இருந்து - ராமேஸ்வரம், காசி கங்கை துங்கபத்திரை போன்றவை- புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.  கும்பாபிஷேகத்திற்கு  முன்பாக  108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடந்தது- சாந்திப்பிரியா

Village Deities - 27

$
0
0
கிராம தேவதைகள் - 27



வீரப்பூர் பெரியகாண்டி அம்மன்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
திருச்சியில் உள்ள மணப்பாறையில் இருந்து பதினான்கு  கிலோ தொலைவில் உள்ளது வீரப்பூர். அந்த ஊரில் உள்ள பெரிய காண்டி அம்மனின் ஆலயம் பற்றிய கதை சுவையானது.

ஒரு முறை ஐந்து தலை நாகம் ஒன்று தனக்கு பார்வதி மகளாகப் பிறக்க வேண்டும் என்று கடும் தவம் புரிந்தது. அவளும் அதற்கேற்ப அதற்கு பிறந்தாலும் அவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். அவள் தன்னுடைய அந்த நிலையை மாற்றுமாறு சிவ பெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் அவளை ஊசி முனையில் நின்று கொண்டு தவமிருக்குமாறு கூறினார்.  அதன் பின் இரண்டு சகோதரர்கள் அந்த இடத்தில் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் சகோதரியான அருக்காணி அவளுக்கு அந்த நிலையில் இருந்து விடுதலை தருவாள் என்றும் கூறினார். அவளுக்கு துணையாக இருக்க ஆறு கன்னிகளையும் அவர் அனுப்பினார். அவள் செய்த தவம் அங்கு தவத்தில் இருந்த வீரம்ஹா முனிக்கு இடையூறாக இருந்தது. அதன் பின் அவருக்கு அங்கு தவத்தில் இருந்தவள் பார்வதி தேவியே எனத் தெரிந்ததினால் அவரும் அங்கு வந்து அவளுக்கு காவலாக நின்றார்.

அந்த இடம் பொன்னிவள நாடு என்ற பெயரில் அப்போது இருந்தது. அதை பொன்னர் மற்றும் சங்கர் என்ற இரண்டு சகோதரர்கள் ஆண்டு வந்தனர். தலையூர் கலி என்ற மற்றொரு நாட்டு மன்னன் அவர்கள் மீது பொறாமை கொண்டு இருந்தான்.  அந்த சகோதரர்கள்  இருவரும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களை வெல்வது கடினம் என்பதை அவன் உணர்ந்தான். ஆகவே அவர்களை பிரிக்க முடிவு செய்து பொன்னருடைய அரண்மனையில் தானியங்களை அளக்க தங்கத்திலான குடுவையை செய்து அனுப்பினான். அதை கொண்டு சென்ற தட்டானும் அந்த அளவுக் கோப்பை சோழ நாட்டு மன்னனின் முத்துக் குவியல்களை அளந்தது என்று கூறினான் அதன் பின் மாலை நேரமாகி விட்டதினால் அதை பத்திரமாக பூஜை அறையில் வைக்கச் சொன்னான். அந்த அறையில் இருந்த சூட்டினால் அந்த கோப்பையின் மீது பூசப்பட்டு இருந்த தங்கம் உருகி வெறும் மரக் கோப்பையே மீதம் இருந்தது. மறுநாள் அந்த மன்னனை மற்றொரு ஊரில் இருந்த வெள்ளங்குளத்தில் குளித்து விட்டு விநாயகரை தரிசிக்குமாறு கூறினான்.  அதை அறியாத மன்னனும்  தனது சகோதரன் சங்கரை அந்த இடத்துக்கு காவலாக வைத்துவிட்டு தனது அத்தையின் மகன்களை அரண்மனையின்  வாயிலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டப் பின், நாட்டின் பாதுகாப்பை தனது படை தளபதி சம்புகாவிடம் தந்து விட்டுச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்றதும் தலையூர் மன்னன் பெரும் படையுடன் வந்து தாக்குதல் நடத்த, சம்புகா தனது பன்னிரண்டு ஆட்களுடன் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்ட தப்பி  ஓடிச் சென்ற   அந்த மன்னன் மீண்டும்  பெரிய படையை திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். அவர்களை மன்னனின் மூன்று மகன்களும் போரிட்டு விரட்டி அனுப்பினாலும், மீண்டும் சங்கர் அவர்களை அடித்து விரட்ட தலையூர் கலி மீண்டும் இன்னும் பெரிய படையுடன் வந்து போரிட்டான் .  ஆனால் அவர்களுடன்  சங்கர் சண்டையிட்டு விரட்டினாலும், ஒரு எதிரி படை வீரன் போல வந்து இருந்த மாயக் கண்ணன் ( கிருஷ்ணர்)  சங்கரை கொன்றார்.  அவனுடைய ஆயுள் காலம் முடிந்து விட்டதினால்  சங்கரை தான் கொலை செய்துவிட்டதாக கண்ணன் கூறினார்.

இதற்கு இடையில் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த பொன்னரை அந்த தட்டான் கல்லைத் தூக்கிப் போட்டு கொல்ல முயன்றான். அவன் அதில் இருந்து தப்பிவிட்டு அந்த தட்டானை கொன்று விட்டு ஊருக்கு திரும்பி வந்தவர் தன்னுடைய இறந்து கிடந்த சகோதரனைப் பார்த்தார். மாயக் கண்ணனோ அவன் முன் தோன்றி அவர்களது பிறப்பின் ரகசியத்தைக் கூறியதும் பொன்னர் தன்னுடைய வாளை உருவி எடுத்து தன்னுடைய தலையை வெட்டிக்கொண்டு மடிந்தார். அதை கண்ட அவருடைய தங்கை அருக்காணி அழுதபடி ஓடி வந்தாள். அவளை சாந்தப்படுத்த பெரிய காண்டி அம்மன் தனது ஆறு பணியாட்களான பெண்களை அனுப்பினாள். அவர்கள் அங்கு சென்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை  பணிப்பெண்ணாக மாற்றிக் தம்முடன் ஏழாவது பெண்ணாக சேர்த்துக் கொண்டார்கள்.

அருக்காணியை அழைத்துக் கொண்டு அவர்கள் பெரியகாண்டி அம்மனிடம் செல்ல அலியாக இருந்த பெரிய காண்டி அம்மன் மீண்டும் பெண்ணாக மாறினாள். அதன் பின் பெரியகாண்டி அம்மன் யுத்தம் நடந்த இடத்துக்கு சென்று பொன்னர்-மற்றும் சங்கருக்கு மீண்டும் உயிர் கொடுத்து புதுப் பிறவி எடுக்க வைத்தாள். அதன் பின் அவர்கள் பூமிக்கு எந்த காரணத்துக்காக வந்தார்களோ அந்தக்   காரியம் முடிந்து விட்டது எனக் கூறி அவர்கள் மீண்டும் தேவலோகம் கிளம்பிச் செல்லுமாறு கூறி விட்டு அவர்களுடைய சகோதரியை பெரியகாண்டி அம்மனும்  அவள் பணிப் பெண்களும் பாதுகாப்பார்கள் எனக் கூறினாள்.

பொன்னர் சங்கர் ஆலயத்தில் 
அவர்களின் சிலைகள் 

பெரியகாண்டி அம்மன் முன்னர் தவம் செய்து கொண்டு இருந்த போது வீர சாங்கன் பூசாரி என்ற தேன் எடுப்பவனை அவள் சந்தித்தாள்.  அவனோ தாம் அனைவரும் அசுத்தமானவர்கள் என்பதினால் அவளுக்கு தர ஒன்றும் இல்லையே என வருத்தமுற அவளோ அவன் எதை தந்தாலும் பெற்றுக் கொள்வதாகக் கூறினாள். ஆகவே அவன் பனை ஓலையினால் குடுசை போட்டு மலை உச்சியில் அவளுக்கு ஆலயம் அமைத்தான் . ஆனால் அதன் மீது ஏறிச் சென்று தரிசனம் செய்வது கடினமாக இருந்ததினால் பின்னர் அதை மலைக்கு கீழே இருந்த வீரப்பூருக்கு மாற்றி அமைத்தான்.

பெரிய காண்டிஅம்மன் சுத்த சைவம் என்பதினால் அவளது ஆலயம் தனியாக அமைந்தது.  அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் சங்கர்- பொன்னர் மற்றும் அவர்களது சகோதரி தங்கள் என்பவளுக்கும், பார்வதிக்கு துணையாக நின்ற ஆறு கன்னிகைகளுக்கு என அனைவருக்கும் வடக்கு நோக்கி உள்ளபடி இன்னொரு ஆலயம் அமைத்தனர்.

 அதன் பின் கிழக்கு நோக்கி இன்னொரு தனி ஆலயம் கட்டப்பட்டு அங்கு கருப்பண்ணசாமிக்கு சன்னதி அமைக்கப்பட்டது. அது போல மகாமுனி மற்றும்  வீரம் ஆஹ முனிக்கும் மேல் கூரை இல்லாத ஆலயம் அமைக்கப்பட்டு அவர்களும் கிராம தேவதைகளாக வணங்கப்பட்டனர் .

மாசி மாதங்களில் பெரிய காண்டி அம்மனுக்கு திருவிழா நடைபெறுகிறது. பொன்னர் மற்றும் சங்கரின் சந்ததியினர் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துப் போய் பல இடங்களில் ஆலயங்கள் அமைத்து உள்ளார்கள். பெரியகாண்டி அம்மன் வேண்டியதை தருகிறாள் என நம்பப்படுவதால் ஆலயத்தில் எப்போதுமே கூட்டம் உள்ளது.
---------------------
பின் குறிப்பு :
திருச்சி மாவட்டம், திருச்சியில் இருந்து  மணப்பாறைக்கு செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது அன்றைய வளநாட்டின் ஒரு பகுதியான வீரப்பூர். அங்குள்ளது வீரமலை. முதலில் அதன் மீதுதான் பெரியகாண்டி அம்மனின் ஆலயம் இருந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் கதையுடன் கிருஷ்ண பகவானும் சம்மந்தப்பட்டு உள்ளார் என்பதினால் அதன் காலம் மிகப் பழமையானதாக இருக்க வேண்டும் . ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தமது வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக அதன் அடையாளமாகஆலயத்தின் பக்கத்தில் கற்களைச் சிறு குவியலாக அடுக்கி வைத்து விட்டுப் போகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் மீண்டும் அங்கு  வந்து அந்தக் கற் குவியல்களைக் கலைத்து விட்டுப் போவது வழக்கம். இந்த ஆலயத்தில் நடைபெறும் வருடாந்தர மாசி திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அந்த விழாவின் முக்கிய அம்சம் ரோஹினி நட்சத்திரத்தின் அன்று  சாம்புவன் காளை மாட்டில் ஏறிக் கொண்டு செல்ல (சிலை  தொடர்ந்து பொன்னர் குதிரை வாகனத்தில் கையில் அம்பு ஏந்தியும், அதன் பின்னர் பெரியகாண்டி அம்மன் யானை வாகனத்திலும் எடுத்துக் கொண்டு  செல்லப்பட, அதைத் தோடர்ந்து சகோதரர்களான பொன்னர்- சங்கர் இருவருக்கும் தீர்த்தக் குடம் எடுத்து  செல்லப்படுகிறது.
 
பெரியகாண்டி அம்மனுக்கு கோவை மாவட்டம் ஆனைகட்டி செல்லும் சாலையில் கோவையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இன்னொரு ஆலயம் உள்ளது. அங்கு சென்று நவகிரக தோஷம், பில்லி, சூனியம், செய்வினை தோஷம், எதிரிகளால் ஏற்படும் தொழில் வியாபார நஷ்டம், சத்துருக்களின் கண் திருஷ்டி தோஷம், மறைந்த பித்ருக்களின் பிரேத சாப மூலமாக திருமண தடங்கல், சந்தான தோஷம், கணவன் மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேர, மது பழக்கம் மறக்க, நினைத்த காரியம் நடக்க என பல்வேறு கோரிக்கைகளுக்காக அன்னையை வழிபட்டு பூசணிக்காய் பலி கொடுத்தால் அன்னையின் அருளால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என்று அங்குள்ள மகான் கூறுகிறார். அந்த  ஆலய விலாசம் இது:-

அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் திருக்கோவில்
ஸ்ரீ சத்குரு அதிஷ்டானம்
அரசு பதிவு- C – 1419(81/94)
தவத்திரு நீலமலை சித்தர் ஸ்வாமிகள்
7/164, தடாகம் சாலை,
கணுவாய், கோவை - 641108 .

Village Deities - 28

$
0
0
கிராம தேவதைகள் - 28


ஐந்து ஊர் நல்லதங்காள்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரை- உசிலம்பட்டி சாலையில் இருபத்தி ஏழு கிலோ தொலைவில் உள்ளதே கோடைக்குளம் கிராமம். அதை சார்ந்த பிற கிராமங்கள் வடுகபட்டி, உடன் காட்டுப்பட்டி, பிரவியான்பட்டி மற்றும் அகிலாண்டபுரம் என்பவை. அங்கெல்லாம் ஐந்து ஊர்  நல்லதங்காளே கிராம தெய்வமாக இருக்கிறாள்.

ஒரு காலத்தில் அந்த இடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. பலரும் வேலை தேடி ஊரை விட்டு வெளியேறினார்கள். அதில் ஒருவரே  படிவு தேவன் என்பவர் ஒருவர். அவர் நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளாய் கிணற்றில் போட்டுக் கொன்ற ஊரான வதிராப்பூக்கு சென்றார். அந்த ஊரில் அவளுக்கு சிறு ஆலயம் இருந்தது.  ஆனால் அது சரிவரப் பராமரிக்கப்படாமல் இருந்தது.  அவன் ஒரு பணக்காரன் வீட்டில் மாடு மேய்ப்பவனாக வேலைக்கு சேர்ந்தான். ஒரு நாள் அவன் காட்டில் அவற்றை ஓடிச் சென்றபோது அவனுடைய கூடையில் சிறு பெண் புகுந்து கொண்டு உறங்கி விட்டது. திரும்பி வரும் வழியில் அதை பார்த்து திடுக்கிட்டவன் அதை வழியிலேயே  இறக்கி விட்டு வந்து விட்டான். 

மறு நாள் அவனுடைய மாடுகளில் இரண்டைக் காணவில்லை. அதை அவன் எஜமானரிடம் கூற அதனால் கோபமடைந்த அவன் முதலாளி அவனை நையப் புடைத்து விட்டு உணவு தராமல் மூலையில் தள்ளி விட்டார். உணவு இல்லாமல், வலியை பொறுத்துக் கொண்டே மூலையில் கிடந்தவன் முன்னால் அந்த  சிறுமி  தோன்றினாள். அவன் மடியில் வந்து அமர்ந்த குழந்தை தான் நல்லதங்காள் என்றும், தனக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்கவில்லை என்றும் அவனுடைய ஊருக்கு தன்னை எடுத்துப் போகுமாறும் கூறியது. அதை அவன் நம்பவில்லை என்பதினால் அது அவன் தொலைந்து போன மாடுகளை நதியின் தண்ணீருக்கு பக்கத்தில் ஒளித்து வைத்து உள்ளதாகக் கூற அவன் அங்கு சென்று அவற்றை மீட்டு வந்தான்.

அந்த நிலையைக் கண்டவன்  நல்லதங்காளுக்கு எதோ சக்தி உள்ளது என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே  மீண்டும் அந்தக்  குழந்தையை தன் கூடையில் வைத்துக் கொண்டு தன்னுடைய ஊரான கோடைகுளத்துக்கு கிளம்பிச் சென்றான். அந்த ஊரின் எல்லையை அடைந்ததும் அந்தக் குழந்தை தன்னை அங்கேயே விட்டு விடுமாறும் தான் தன்னுடைய சகோதரர் ராமனிடம் சென்று தனக்கு ஒரு இடம் தருமாறு கேட்டு விட்டு வருவதாகக் கூற அவனும் அதை அங்கேயே இறக்கி விட்டான்.  அந்தக் குழந்தை விஷ்ணு ஆலயத்துக்கு சென்று தனக்கு தங்க இடம் கேட்க அவரும் அந்தக் குழந்தை அமர்ந்து கொள்ள ஒரு இடத்தைக் காட்ட, விஷ்ணு காட்டிய இடத்திலேயே படிவு தேவன் அந்த  அந்த குழந்தைக்கு ஒரு ஆலயம் அமைத்தான். ஆனால் அதைப் பார்த்த அவன் சகோதரன் பிரவ தேவன் அவனுடன் சண்டை போட்டான்.  தான் அந்த குழந்தையை தெய்வம் என நம்பமாட்டேன் எனவும், அவளை அங்கே தங்க விட மாட்டேன் எனவும் கூறினான்.

 நல்லதங்காள்  ஆலயமும் அதன் மேல்மாடத்தில்  
காணப்படும் நல்லதங்காள் சிலையும் 

படிவு தேவன் நல்லதங்காளிடம் சென்று அதை கூற அவளோ பச்சை வாழை இலைகளையும், சுட்டு பதமாகாத களிமண் பானையும் எடுத்து வரச் சொன்னாள் . அந்த பச்சை வாழை இலையை விறகு போல எரித்து அரிசியை வேகாத அந்த பானைகளில் போட்டு களைந்து பால் பாயசம் செய்தாள். அதை கண்ட பிரவ தேவன் அவள் சக்தியைப் புரிந்து கொண்டான். தனுடைய சகோதரன் பதிவு தேவனுடன் சேர்ந்து நல்லதங்காள் கால்களில் விழுந்து வணங்கியப் பின், அவர்கள் இருவரும் சேர்ந்து அவளுக்கு ஆலயம் அமைத்தனர். அந்த ஆலயத்தில் அவளைத் தவிர   ஐயன், மாயன், அரசமகன், ஆண்டி, அக்னிவீரன், கருப்பன் போன்றவர்களுக்கும் சிலைகள் அமைத்து வழிபட்டனர். இன்று வரை படிவு தேவனின் வம்சாவளியினரே ஆலயத்தின் பூசாரிகளாகவும், பிரவ தேவனின் வம்சாவளியினர் உப பூசாரிகளாகவும்  இருந்து கொண்டு அந்த ஆலய பணிகளை  மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

சிவராத்தரி பண்டிகை மட்டுமே அங்கு கொண்டாடப் படுகின்றது. பூசாரியின் வீட்டில்தான் நல்ல தங்காளின் ஆபரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. சிவராத்தரி தினத்தன்று மேள தாளத்துடன் அவை அனைத்தும் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்து வரப்படும். அவர்களுடன் இருபத்தி ஒரு கடவுட்கள் எடுத்து வரப்படுவார்கள். அந்த ஊர்வலத்தில் சாமி ஆடிகளும் சேர்ந்து கொண்டு வருவார்கள். மாயனின் சாமியாண்டி ஆணியால் செய்த செருப்பில் நின்று கொண்டு பக்தர்களின் கேள்விகளுக்கு விடை தருவார். அவர்களுக்குப் பின்னால் நல்லதங்காளின் சாமியாடிகள் வருவார்கள். அடுத்த நாள் கருப்பருக்கு பொங்கல் படைக்கப்பட்டு ஆடு பலி தரப்படும்.

தீய பேய், பிசாசுகளை  நல்லதங்காள் விரட்டி அடிப்பாள் என கிராமத்தினர் நம்புகிறார்கள்.  ஆலயத்துக்கு வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள் அங்குள்ள மாயாண்டி சாமியிடம் குழந்தை வரம் கேட்கிறார்கள்.

-----------------------
பின் குறிப்பு:-

நல்லதங்காள்  என்ற பெண்ணின் கதை தமிழ்நாட்டில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கிராமப்புறங்களில் கூறப்பட்டு வரும் கிராமிய பாடல் கதை ஆகும்.  அதை கிராமிய நாட்டிய நாடகமாகவும் நடத்தி வந்துள்ளனர். நல்லதங்காள் கதை ஒரு சோகக் கதையாகும். நல்லதங்காள் வறுமையின் கொடுமை மற்றும் புகுந்த வீட்டாரின் கொடுமை  போன்றவற்றினால் அவதிப்பட்டு தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும்  கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து  இறந்து போனாள் என்பது கதை. அவளது மரணத்தைத் தாங்க முடியாமல் அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். இப்படியாக நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை என்பது  சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.  அவர்களது  பக்தியை மெச்சிய சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி கொடுத்து அனைவரையும் உயிர் பிழைக்க வைத்து சொர்கத்துக்கு அனுப்பினாராம்.  அது மட்டும் அல்லாமல் நல்லதங்காளை ஊர்க் காக்கும் தெய்வமாக ஆக்கினார் என்றக் கதையும் உண்டு. அதனால்தான்  அவளை பல கிராமங்களிலும் உள்ளவர்கள் தெய்வமாக  வழிபடுகிறார்கள்.

 நல்லதங்காளுக்குதிருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் நல்ல தங்காளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.  அது போலவே விருது நகரிலும் அவளுக்கு ஆலயம் உள்ளது. - சாந்திப்பிரியா

Village Deities - 29

$
0
0
கிராம தேவதைகள் - 29

உப்பாணிமுத்தூர்
 காட்டு சுடலை மாடன்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சேரன்மாதேவியில் இருந்து ஒன்பது கிலோ தொலைவில் உள்ளது உப்பாணிமுத்தூர் கிராமம். அந்த கிராமம் ஊர்காட்டு ஜாமீன் பரம்பரையை சேர்ந்தது.

சுடலை மடான் கேரளாவில் இருந்து அங்கு வந்தவர். அந்த காலத்தில் கேரளாவில் சில மந்திரவாதிகள் கடவுளைக் கூட கட்டிப் போடும் அளவுக்கு சக்தி பெற்றவர்களாக இருந்தனர். அப்போது சுடலை மடான் கேரள மக்களை பாதுகாத்து வந்தார். ஆகவே  மந்திரவாதிகள் சுடலை மடானை கட்டிப்போட எண்ணினார்கள் .


சுடலை மடானினால் பலன் அடைந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக அவரை ஒரு பனை ஓலை பெட்டியில் வைத்து நதிக்குள் விட்டு விட்டனர். அந்த பெட்டி தாம்பரபரணி நதி வழியே சென்று ஊர்காட்டு ஜாமீனில் இருந்த உப்பாணிமுத்தூர் எனும் ஊரை அடைந்தது. நதியில் மிதந்து வந்த பெட்டியை எடுத்து திறந்தனர் ஊர்காரர்கள். அதில் ஏழு அடி உயர, கருத்த மீசையுடன் கூடிய  முகத்தைக் கொண்ட சிலை இருந்தது. அது  கேரளா நாட்டை சேர்ந்தவரைப் போன்ற உருவத்துடன் இருந்தது. பெட்டியில் இருந்த சிலை தானே  சுடலை மாடன் என்றும் தன்னை அந்த நதிக் கரையில் வைத்து வணங்கி வந்தால் தான் அந்த ஊரை காப்பாற்றி வருவேன்  என்றும்  கூறினார்.


அந்த ஊர் ஊர்காட்டு ஜமீனை சேர்ந்தது என்பதினால் அந்த சிலையை ஒரு ஆல மரத்தடியில் பிரதிஷ்டை செய்தது அவருக்கு ஊர்காட்டு சுடலை மடான் எனப் பெயரிட்டு வணங்கலாயினர். அவர் அங்கிருந்தபடியே அந்த ஊரையும் கேரளாவையும் பாதுகாத்து வரலானார். இதற்கு இடையில் கேரளத்து மந்திரவாதிகள் அவரைத் தேடி அலைந்தனர். அவர்களில் ஒருவன் அவர் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துவிட்டு அவரை அழிக்க வந்தான். மந்தரித்த துணிகளை ஆலய வாயிலில்  போட்டு அவரை முடக்கி வைக்க நினைத்தான். ஆனால் அங்கிருந்து சுடலை மடான்  பல்லி உருவை எடுத்து தப்பிச் சென்றபோது அவரை கண்டு பிடித்து விட்ட மந்திரவாதி தனது  வாளால் அதை வெட்ட முயல பல்லியின் வால் பகுதி மட்டும் துண்டானது. இதற்கு இடையில் அங்கு வந்த கிராமத்தினர் அந்த மந்திரவாதியை கண்டு பிடித்து அவனை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு கொளுத்தி விட்டனர்.
[மந்திரங்களை பயன்படுத்தும்  மந்திரவாதிகள் ஆப்ரிக்கா நாட்டில்
 நிறையவே உண்டு.   அவர்களைப் போலவே மலையாள 
மந்திரவாதிகளும் மந்திர தந்திரக் கலையில் 
கை தேர்ந்தவர்கள்.  ஏவல் எனப்படும் மந்திர கலையை பயன்படுத்தி  ஒருவரை  
செயல் இழக்க வைக்க முடியும். மந்திரக் கலையை பிரதிபலிப்பதே இந்தப் படம்.
இந்தப்  படம்  ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு 
உள்ள  புத்தகத்தில் காணப்படும்  படம். அந்தப் பெண்மணி
 எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  
பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா]

 சுடலை மடானின் சிலையை அவர்கள் கண்டு பிடித்தபோது அவர் கை வெட்டப்பட்டு இருந்தது தெரிந்தது. ஆகவே அவர்கள் புதிய சிலையை செய்ய எண்ணினார்கள். ஆனால் சுடலை மாடன் அதை ஏற்காமல் அவர்களை  தடுத்து விட்டார். இருந்தாலும் அந்த ஊரில் இருந்த பணக்காரன் ஒருவன் சுடலை மாடனைப் போன்ற வேறு ஒரு சிலையை செய்து ஒரு கை இல்லாத உண்மையான சிலையை ஆற்றில் வீசிவிட்டான். அதனால் கோபமடைந்த சுடலை மாடன் அந்த ஊர் மக்களை பல விதங்களிலும் தொந்தரவு செய்யத் துவங்கினார். பலர் பைத்தியமானார்கள். ஆகவே மீண்டும் ஊர் ஜனங்கள் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவருடைய பழைய சிலையை எடுத்து வந்து அங்கு வைக்க ஊரில் அமைதி திரும்பியது. இதற்கு இடையில் எந்த பணக்காரன் அவரை அவமானப்படுத்துவது போல உண்மையான சிலைக்குப் பதிலாக புதிய சிலையை செய்து வைத்தாரோ அவர் குடும்பம் முற்றிலும் அழிந்து போயிற்று.  இப்படியாக ஆலயம் அமைக்கப்பட அவர் ஆலயத்தில் பேச்சியம்மன், முண்ட மாடன் மற்றும் முண்ட மாடத்திக்கும் சிலைகள் அமைந்தன.

சித்திரை , வைகாசி அல்லது ஆவணிகளில் கோடை வீட்டு சுடலை மடான் எனும் வைபவம் நடைபெறுகின்றது. மருளாடிகள் ( சாமி வந்தவர்கள்) மேள தாளத்துடம் நதிக் கரைக்கு சென்று பொங்கல் படையலும் , ஆடு பலியும் தருவார்கள். சுடலை மடான் அங்கு உயிருடன் உள்ளதாக நம்புகின்றனர். அங்கிருந்து ஆலயம் வந்தவுடன் அங்கும் பொங்கல் படைத்து ஆடு பலி தந்தபின் அவர்கள் சுடுகாட்டுக்கு போய் இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து வருவார்கள். மீண்டும் ஆலயத்தின் முன் பொங்கல் படைக்கப்படும். அப்போது விசித்திரமான ஒரு விழா நடைபெறும். கருப்பு ஆடு ஒன்றைப் பிடித்து வந்து பறவை போல அதை கம்பில் கட்டி வைத்து அதன் வயிற்றை கிழித்து அதனுள் வாழை பழங்களை வைத்து அதை ரத்தத்துடன் எடுத்து சாப்பிடுவார்கள். ஆட்டின் ரத்தம் வடியும்வரை அது நடைபெறும். அதை ''உருவத்தை சாப்பிடுதல் '' என்று அழைப்பார்கள். அடுத்த நாள் தேவதைகளை அபிஷேகம் செய்து வழிபட்ட பின் விழா நிறைவு பெறும்.

சுடலை மடான் ஆலயம் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. கிராமத்தினுள் உச்சி மகா காளி அம்மன் ஆலயமும் உள்ளது. அந்த ஆலயத்துக்குள் ஒவ்வொரு வருடமும் சுடலை மடானின் உருவம் களிமண்ணால் செய்யப்பட்டு வைக்கப்படும். விழா முடிந்ததும் அந்த சிலை நதியில் கரைக்கப்பட்டுவிடும்.

----------------
பின்  குறிப்பு:
சுடலை மாடனைப் பற்றிய அதிக விவரம் தெரியவில்லை என்றாலும், அவர் சிவன்-பார்வதிக்கு பிறந்தக் குழந்தை என்றே கூறுகிறார்கள். அதற்கான சில புராணக் கதைகளும் உண்டு. ஒரு கதையின்படி பார்வதி தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என விரும்பியபோது, அவர் அவளுக்கு ஏற்கனவே வினாயகரும்  முருகனும் பிள்ளைகளாக உள்ளதினால் மூன்றாவது குழந்தை எதற்கு வேண்டும் எனக் கேட்டார். ஆனாலும் பார்வதிக்கு மூன்றாவது குழந்தை வேண்டும் என்ற ஆசை போகவில்லை என்பதினால் அவளை முதலில் பாதாளத்துக்குச் சென்று அங்கு எரிந்து கொண்டு இருந்த விளக்கு திரியின் ஒரு நெருப்பு ஒளியை அவள் சேலையில்  முடிந்து  எடுத்து வருமாறு கூற அப்படி எடுத்து வந்தவள்  சேலையில் இருந்து அந்த திரியின்  நெருப்பை எடுத்து சிவபெருமானுக்குக் அவள் காட்ட முயன்றபோது அங்கு நெருப்பு இல்லாமல் ஒரு சதை இருந்ததாகவும், அதற்கு உயிர் கொடுத்ததும் அது  ஆணாக மாறியது என்றும்,  சுடர் விளக்கில் இருந்து  அந்தக் குழந்தை தோன்றியதினால்  அதுவே சுடலை மாடன் என்று கூறப்பட்டது என்ற கிராமியக் கதை உள்ளது.  வளர்ந்தக்  குழந்தை பசி தாங்காமல் சுடுகாட்டில் இருந்த மாமிசங்களையும் உண்ணத் துவங்கியதினால், அது தேவலோகத்தில் இருக்க முடியாது எனக் கருதிய சிவபெருமான் அதை பூமிக்கு அனுப்பி , தன சார்பில் அதை பூலோகத்தைக் பாதுகாத்து வருமாறு கூறினாராம். இதனால்தான் சுடுகாட்டிலும் சுடலை மாடன் வசிப்பதாகவும், அங்கு எரிக்கப்படும் பிணங்களின் ஆவிகளை அவர் கைலாயத்துக்கு அனுப்பி வைப்பதாகவும் நம்பிக்கை  கதையும் உள்ளது.  

இப்படியாக பூமிக்கு வந்த சுடலை மாடன் பலரது  உருவங்களில் அவதரித்தது எங்கெல்லாம் தான் அவதரித்தாரோ அங்குள்ள கிராமங்களில் கிராம தேவதையாக அமர்ந்து கொண்டு ஊரைக் காத்து வருகிறார் என்பது நம்பிக்கையாகும். - சாந்திப்பிரியா
Viewing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>